Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

சென்னை, திருவொற்றியூரில் ரூ.139½ கோடி செலவில் 3616 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF
தினத்தந்தி             07.05.2013

சென்னை, திருவொற்றியூரில் ரூ.139½ கோடி செலவில் 3616 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஜெயலலிதா திறந்து வைத்தார்


 
 
 
 
 
 
 
 
 
 
சென்னை, திருவொற்றியூரில், குடிசைமாற்றுவாரியத்தின் மூலம் ரூ.139½ கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 3616 அடுக்குமாடி குடியிருப்புகளை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாக திறந்துவைத்தார். இது பற்றி, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சுனாமி தாக்குதல்

தமிழக கடற்கரை பகுதியிலிருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலினால் பெரும் பாதிப்புக்குள்ளாயின.

இதையடுத்து, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலக வங்கி மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு கடந்த 2005–ஆம் ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.

ரூ.139½ கோடி

குடிசைப் பகுதிகளில் வறிய நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் போன்ற இன்னல்களுக்கு ஆளாகாமல் நல்ல உறைவிடத்தில் சுகாதாரமான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் குடிசை மாற்று வாரியத்தால், சென்னை, திருவொற்றியூரில் 13.69 ஹெக்டர் பரப்பளவில், அகில இந்திய வானொலி நில திட்டப் பகுதியில் 139 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குடியிருப்புகள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த குடியிருப்புகள் உலக வங்கி நிதியுதவியுடன் கூடிய அவசர சுனாமி மறுகுடியமர்வு திட்டம் மற்றும் மாநில நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளன.

3616 அடுக்குமாடி குடியிருப்புகள்

தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் 113 கட்டட தொகுதிகளாகக் கட்டப்பட்டுள்ள 3616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா, நேற்று, சென்னை கோட்டையில், காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக கட்டப்பட்டுள்ள இப்புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, தெரு விளக்குகள், ஆரம்பப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக் கடை, சமுதாயக் கூடம், நூலகம், பூங்கா, நிலத்தடி நீர் தொட்டி போன்ற அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றும் 3 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 278 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன.

குடிசைகள் இல்லா நகரம்


முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களிலுள்ள 1941 பயனாளிகள், சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 15 பகுதிகளிலுள்ள 1014 பயனாளிகள், கட்டமைப்பு விரிவாக்க திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 661 பயனாளிகள், என மொத்தம் 3616 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இயற்கை சீற்றங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பதுடன், நான்கு வழி சாலை விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான இடத்தை பெறவும், குடிசைகள் இல்லா நகரமாக சென்னையை உருவாக்கிடவும் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

மேட்டுப்பாளையம் நகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு

Print PDF
தினமணி        07.05.2013

மேட்டுப்பாளையம் நகராட்சியில்  புதிய திட்டப் பணிகளுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு


மேட்டுப்பாளையம் நகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கென அரசு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணகள் குறித்து அவர் மேலும் கூறியது: மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 5 கோடி நிதியிலிருந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
 
காரமடை சாலையில் ஹவுசிங் யூனிட் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி அலுவலக கட்டடத்தில் மேல்தளம் அமைக்க கூடுதல் நிதியாக ரூ. 1 கோடி, நகர ஜவஹர் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 2.50 கோடி, நகராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்ட ரூ.55 லட்சம், திடக் கழிவிலிருந்து உயிரி எரிவாயு மின் திட்டத்திற்கு ரூ. 25 லட்சம் செலவிடப்படும்.

நகராட்சிப் பகுதிகளில் கோடையில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, வறட்சி நிவாரணத் திட்டம் 2013-14 இன் கீழ் வார்டு எண் 3, 4, 10, 12, 13, 14, 15, 16, 22, 32 ஆகிய 10 வார்டுகளில் மின் மோட்டார் வசதியுடன் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க ரூ. 1.25 லட்சமும், வார்டு எண் 2, 17, 31, 32 வார்டுகளில் ஏற்கனவே உள்ள 5 ஆழ்குழாய் கிணறுகளை சுத்தப்படுத்தி மின் மோட்டார் வைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தும் பணிக்கு ரூ. 5 லட்சமும் செலவிடப்படும் என்று தெரிவித்தார்.

புதிய திட்டப் பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், அதற்கு பரிந்துரை செய்த உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும், தொகுதி எம்எல்ஏ ஓ,கே. சின்னராஜ் உள்ளிட்டோருக்கும் நகராட்சி சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
 

பிளாஸ்டிக் கழிவால் சாலைகள் மறுசீரமைப்பு; நுண்ணுயிரி மூலம் ஏரி நீரை தூய்மையாக்கும் திட்டம்

Print PDF
தினமணி                  03.05.2013

பிளாஸ்டிக் கழிவால் சாலைகள் மறுசீரமைப்பு; நுண்ணுயிரி மூலம் ஏரி நீரை தூய்மையாக்கும் திட்டம்


பிளாஸ்டிக் கழிவால் சாலை மறுசீரமைப்பு மற்றும் நுண்ணுயிரி மூலம் ஏரி நீரைத் தூய்மையாக்கும் திட்டம் ஆகியன தலா ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு ஊரகப் பகுதிகளில் ஆயிரத்து 255 கிலோ மீட்டர் நீளமுள்ள தார் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த இரண்டு நிதியாண்டுகளில் ரூ.153.50 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ஆயிரத்து 2 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிவடைந்து விட்டன.

இந்த ஆண்டும் ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள தார் சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நகரப் பகுதிகளில் நடப்பாண்டில் 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 2011-2012 நிதியாண்டில் ரூ.50 கோடியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 446 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் மறுசீரமைக்கப்பட்டன. கடந்த நிதியாண்டில் ரூ.84.90 கோடியில் 577.70 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகளை மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் சாலைகளின் தரம் சிறந்ததாகவும், மேம்பட்டதாகவும் உள்ளதால் நடப்பு நிதியாண்டிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 கோடியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் மறுசீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 கோடியில் நுண்ணுயிரி மூலம் ஏரிகளில் உள்ள நீரினைத் தூய்மையாக்கும் திட்டம், சோலை காடுகளில் உள்ள தாவரங்களை மறு உற்பத்தி செய்யும் திட்டம், உதகை ஏரிப் பாதுகாப்பு நிதி மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பக அறக்கட்டளையின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சொந்தக் கட்டடங்கள்: நடப்பாண்டில் சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் ரூ.12 கோடியில் கட்டப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டுக் கடன்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டு கடன் வசதி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டு கடன் வசதி ஏதும் வழங்கப்படவில்லை. அவர்களது கோரிக்கையை ஏற்று வாரிய பணியாளர்களுக்கு நடப்பாண்டுமுதல் வீட்டுக் கடன் வசதி ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோன்று அளிக்கப்படும். இதன் மூலம் 700 வாரிய பணியாளர்கள் பயன் பெறுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 


Page 13 of 96