Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

மலைபோல் தேங்கும் பிளாஸ்டிக் குப்பைகள்

Print PDF

தினமணி             07.08.2013

மலைபோல் தேங்கும் பிளாஸ்டிக் குப்பைகள்

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த குப்பைகள் விழுப்புரம் நகர எல்லை அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

  பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகள் பிளாஸ்டிக் பைகளில் போட்டு அதை அப்படியே குப்பைத் தொட்டிகளில் போடுகின்றனர். மேலும் பூக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் என பல்வேறு வணிக நிறுவனங்களில் 40 மைக்ரானுக்கு குறைவான மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுகின்றன.

 இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் விழுப்புரம் நகராட்சி மூலம் தினம்தோறும் டன் கணக்கில் சேகரிக்கப்படுகின்றன. இவை விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் விழுப்புரம் நகர எல்லை அருகே கொட்டிவைக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் இந்த குப்பைகள் அங்கேயே எரிக்கப்படுகின்றன. இந்த குப்பைக் கிடங்கு அருகே குடியிருப்புகள் இருப்பதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பரவும் விஷவாயு: மேலும் குப்பைகளுடன் சேர்ந்து எரியும் பிளாஸ்டிக் கழிவுகள் டயாக்ஸின் என்ற விஷவாயுவை வெளியிடுகின்றன. இதனால் கண் எரிச்சல், தோல் அலர்ஜி, ஆண், பெண் மலட்டுத் தன்மை, கருச்சிதைவு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

 எனவே, இங்கு கொட்டப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து மக்கும் குப்பைகளை விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்துவதற்கு டெண்டர் விட வேண்டும். மக்காத குப்பைகள் அதிகம் சேராத வகையில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் தேநீர் கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும். இது குறித்து நகராட்சி துரித நடவடிக்கை எடுத்தால்தான் விழுப்புரத்தின் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

விழிப்புணர்வு கண்காட்சி: இது குறித்து விழுப்புரம் நகர கண்காணிப்புக் குழு தலைவர் கா.தமிழ்வேங்கை கூறுகையில், குப்பைகள் கொட்டப்படுவதை முறைப்படுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பைகளை தரம் பிரித்து கொட்டுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குப்பை கண்காட்சி ஒன்றை விரைவில் நடத்த உள்ளோம்.

அதே வேளையில், விழுப்புரம் நகரின் சுகாதாரத்தை பாதுகாக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறைப்படுத்தி, மென் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

 

குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்க...100 டன் !பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் திட்டம்

Print PDF

தினமலர்        27.07.2013

குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்க...100 டன். பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் திட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிப்பகுதியில், சேகரமாகும் குப்பைகளிலிருந்து, 100 டன் மண்புழு உரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், தினசரி60 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் குப்பைகள் நல்லூர் பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. மக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர், குப்பைக்கிடங்கில், குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

இந்நிலையில், நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் சேகரமாகும் காய்கறிக்கழிவுகள், பழக்குடோன்களிலிருந்து கிடைக்கும் பழங்களின் கழிவுகள், உணவு விடுதிகளில் சேகரமாகும் உணவுக்கழிவுகள் ஆகியவற்றிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.இக்கழிவுகள் நகராட்சி 10வது சுகாதாரப்பிரிவு கட்டடத்திற்கு கொண்டு வரப்பட்டு, உலர வைக்கப்படுகின்றன.

பின்னர், மாட்டுச்சாணத்துடன் சேர்த்து அடுக்குகளாக பரப்பப்படுகிறது.முதல் அடுக்கு மண் மற்றும் தாவரக்கழிவுகளும், அதற்கு மேல் சாணம், தென்னை நார்க் கழிவுகள் அடுக்கப்படுகின்றன. காய்கறி, பழங்களின் கழிவுகள் துண்டுகளாக்கப்பட்டு, முறையான அளவு அடுக்குகளாக மாற்றப்படுகிறது. தினமும் மாட்டுச்சாணம் மற்றும் நீர் தெளித்து ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது. 20 முதல் 30 நாட்கள் மக்க வைக்கப்பட்டு, மக்கிய குவியல்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு, அவற்றுக்குள் மண்புழுக்கள் விடப்படுகின்றன. மண்புழுக்கள் குப்பைக்கழிவுகளை உணவாக எடுத்துக்கொண்டு கழிவுகளை வெளியேற்றுகிறது.

தொடர்ந்து, 60 முதல் 120 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. மூன்று நாட்கள் நீர் தெளிக்காமல் குவியல் வைக்கப்பட்டு, இவற்றிலிருந்து மண்புழுக்கள் எடுக்கப்படுகின்றன.பின்னர் உரம் சல்லடை மூலம் சலிக்கப்பட்டு தரமாக மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. இப்பணியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மண்புழு உரங்கள் விவசாயிகளிடம் விற்பனைக்கு வழங்கப்படுகிறது.

"ஒரு கிலோ ரூ.25க்கு விற்க முடிவு'நகர் நல அலுவலர் (பொ) மாரியப்பன் கூறுகையில்,""பொள்ளாச்சி நகராட்சியில், மண்புழு உரம் 100 டன் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 25 மண் குவியில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிலோ மண்புழு உரம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை முறையில் தயார் செய்யப்படும் மண்புழு உரத்தை பயன்படுத்த விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.

 

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

Print PDF

தினத்தந்தி            11.07.2013

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்


திருச்சி மாநகராட்சி பகுதியை சுத்தமாக வைக்க மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தலைமையில் நடந்தது.

பயிற்சி முகாம்

திருச்சி மாநகராட்சியை சுத்தமாக வைக்க மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம்பிரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தலைமையில் நடந்தது. இந்த பயிற்சி முகாமிற்கு ஆணையர் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:–

தூய்மையான நகரமாக...

திருச்சி மாநகராட்சியை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 2500 தெருக்களில் இருந்து தினமும் 2 ஆயிரம் துப்புரவு பணியாளர்களை கொண்டு 410 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரிப்பதற்காகவும், மக்காத குப்பைகளை விற்பனை பொருளாகவும் மாற்றிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மக்காத குப்பை

மக்கும், மக்காத குப்பைகளை ஆரம்ப நிலையிலே தரம் பிரித்து வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை தரம் பிரித்து அரியமங்கலம் கோட்டத்தில் மாரியம்மன் கோவில் தெருவிலும், கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் வாமடம் பகுதியிலும், பொன்மலை கோட்டத்தில் பறவைகள் சாலையிலும், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் அம்பேத்கார் நகரிலும் உள்ள உலர் வள மையங்களில் சேகரிக்கப்படுகிறது. அதிக அளவில் மக்காத குப்பைகளை சேகரிக்கும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மக்கும் குப்பை

மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள் முழுமையாக உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும். திருச்சி மாநகராட்சி பகுதியில் 160 பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கப்படும். குப்பை தொட்டிகளில் சேகரிக்கப்படும் உலர் கழிவுகள் மற்றும் மக்கும் குப்பைகள் ஆரம்ப நிலையிலேயே பிரிக்கப்பட்டு தனித்தனியாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படும்.

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை ஆரம்ப நிலையிலேயே பிரிப்பதற்கு பொதுமக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும். குப்பைகளை தெருவில் கொட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

முகாமில் நகர் நல அலுவலர்(பொறுப்பு) அல்லி, உதவி ஆணையர்கள் தயாநிதி, தனபாலன், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், லட்சுமணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் கூரத்தாழ்வார், பாண்டியராஜன், கார்த்திகேயன், இளங்கோவன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 20 of 66