Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

கோவை சரவணம்பட்டியில் காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு கூடம் அமைக்கும் பணி தீவிரம் மேயர் செ.ம.வேலுசாமி நேரில் ஆய்வு

Print PDF

தினத்தந்தி              16.08.2013

கோவை சரவணம்பட்டியில் காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு கூடம் அமைக்கும் பணி தீவிரம் மேயர் செ.ம.வேலுசாமி நேரில் ஆய்வு

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/velusamy.jpg
கோவை சரவணம்பட்டியில் ரூ.9½ லட்சம் செலவில் காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு கூடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக

கோவை மாநகராட்சி பகுதியில் மண்டல பகுதிக்கு 2 வீதம் 10 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் முதன்முறையாக கோவை சரவணம்பட்டி அம்மன் நகரில் உள்ள அம்மா உணவக வளாகத்தில் சரவணம்பட்டி மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் காய்கறி கழிவுகளை கொண்டு (பயோ கியாஸ்) மீத்தேன் வாயு முறையில் எரிவாயு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கான டெண்டர்கள் கடந்த மாதம் விடப்பட்டு தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி, ஆணையாளர் லதா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் மேயர் செ.ம.வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

ரூ.9½ லட்சம் செலவில்

சரவணம்பட்டி அம்மன் நகரில் உள்ள அம்மா உணவகத்திற்கு மாதம் ஆயிரம் கிலோ எரிவாயு பயன்படுத்தபட்டு வருகிறது. இதனால் சரவணம்பட்டி மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் உள்ள காய்கறி கழிவுகளை கொண்டு மறு சுழற்சியின் மூலம் (பயோகியாஸ்) மீத்தேன் வாயு முறையில் எரிவாயு தயாரித்து பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததது. இதை தொடர்ந்து ரூ.9½ லட்சம் செலவில் காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணி டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தொழிற்சாலையின் மூலம் தினந்தோறும் 3 டன் காய்கறி கழிவுகளில் இருந்து 30 முதல் 50 கிலோ எரிவாயு தயாரிக்க முடியும். இந்த எரிவாயு தொழிற்சாலை தொடங்கப்பட்டு 3 மாதங்களில் அம்மா உணவகத்திற்கு தேவையான முழுமையான எரிபொருள் தேவையையும் பெறமுடியும்.

சமுதாய அடுப்பு அமைக்கும் பணி

முட்டை ஓடு மற்றும் வெங்காய சருகுகள் தவிர மற்ற காய்கறி கழிவுகள் முழுமையாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள காய்கறி கழிவுகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் மேலும் இந்த பயோகியாஸ் முறையில் 6–வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரத்தில் உள்ள 20 குடும்பங்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாய அடுப்பு அமைக்கும் பணியும், சொக்கபுதூர் பகுதியில் உள்ள மயானத்திற்கு பயோகியாஸ் முறையில் எரிபொருள் தயாரிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல தலைவர் ஜெயராம், 31–வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாரிசெல்வன், மாநகராட்சி பொறியாளர் சுகுமார், கிழக்கு மண்டல நிர்வாக பொறியாளர் லட்சுமணன், சரவணம்பட்டி உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் 31–வது வார்டு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி பகுதி தனியார் நிறுவனங்களில் திடக்கழிவு அகற்ற கட்டணம் நிர்ணயம்

Print PDF

தினகரன்               12.08.2013

மாநகராட்சி பகுதி தனியார் நிறுவனங்களில் திடக்கழிவு அகற்ற கட்டணம் நிர்ணயம்

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளில் இருந்து தினசரி 350 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வெண்டிபாளையம், வைராபாளையம் பகுதிகளில் உள்ள உரக்கிடங்குகளில் உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து வரும் நிலையில் தனியார் நிறுவனங்களில் சேரும் கழிவுகளை அகற்ற கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பேக்கரிகளுக்கு 300 ரூபாயும், பேக்கரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 500 ரூபாயும், இதர நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், ஹார்டுவேர் சிறிய கடைகளுக்கு 250 ரூபாயும், பெரிய கடைகளுக்கு 750 ரூபாயும் கட்டணமாக இவ்வாண்டு முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் டிபன் ஸ்டால்களுக்கு 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும், மெஸ்களுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், உணவு விடுதிகளுக்கு 400 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும், உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளுக்கு 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், குளிர்பானம் மற்றும் பழச்சாறு கடைகளுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், பெரிய காய்கறி கடைகள், பழமுதிர் நிலையங்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், சிறிய மளிகை கடைகளுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும், சிறிய காய்கறி கடைகள், பழமுதிர் நிலைய்களுக்கு 500 ரூபாயும் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சேவை கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களுக்கு எவ்வித கட்டணமும் நிர்ணயிக்கப்படவில்லை.  அதிக அளவில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்து விட்டு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

 

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் முழு சுகாதார திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

Print PDF

தினகரன்               12.08.2013

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் முழு சுகாதார திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

பெ.நா.பாளையம்,: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பு இணைந்து பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பேரூராட்சி பகுதியில் முழு சுகாதாரத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக பேரூராட்சிக்கு உட்பட்ட 6, 7, 8, 9 வார்டுகளில் 1000 வீடுகளில் மக்கும் குப்பை, மறுசுழற்சி குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பொதுமக்கள் சேமிக்கும் விதத்தில்  குப்பைக்கூடைகள் மற்றும் மறுசுழற்சி குப்பைகளை சேகரிக்க பைகள் வழங்க நடவடிக்கை எடுத்து வீடு தோறும் வழங்கப்பட்டது. இதன் துவக்க விழாவிற்கு வார்டு கவுன்சிலர் மாரியப்பன் வரவேற்று பேசினார். செயல் அலுவலர் துவாரகநாத்சிங், பேரூராட்சி தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்தார்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட இயக்குனர் பரிசுத்தம் திட்டம் செயல்படுத்தும் முறைகள் பற்றி விளக்கி கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரிக்கால் நிறுவனத் துணைத்தலைவர் வனிதாமோகன் சுற்றுசூழல் சுகாதாரம் அவசியம் பற்றி விளக்கி பேசினார். வீடுகளுக்கு குப்பைக்கூடைகள் வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 19 of 66