Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

மாநகராட்சி குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்

Print PDF

தினகரன்             24.09.2013

மாநகராட்சி குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்

திருப்பூர், :திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் எளிதில் மக்கும் தன்மை கொண்ட குப்பையில் இருந்து எரிவாயு தயாரித்து, அதன் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

 திருப்பூர் மாநகராட்சியில் தினமும் 550 மெட்ரிக் டன் அளவுக்கு திடக்கழிவுகள் உருவாகின்றன. அவற்றில், 450 முதல் 500 டன் வரையிலான கழிவுகள் தினமும் சேகரிக்கப்படுகின்றன. சேகரமாகும் குப்பை, வெள்ளியங்காடு பாறைக்குழியிலும், வேலம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளிலும் கொட்டப்பட்டு வருகின்றன.

கோவில்வழியில் செயல்பட்டு வந்த உரக்கிடங்கு, கோர்ட் வழக்கு காரணமாக மூடப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அனைத்து மாநகராட்சிகளிலும், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்து பயன்படுத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நகராட்சி நிர்வாக ஆணையரகம், திருப்பூர் மாநகராட்சிக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சேகரமாகும் திடக்கழிவுகளில், எளிதில் மக்கும் தன்மை கொண்ட குப்பையில் இருந்து எரிவாயு மின்சாரம் தயாரித்து, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை, ஆடுவதைக்கூடம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் இருந்து தினமும் 30 டன் அளவுக்கு மக்கும் குப்பைகள் கிடைக்கின்றன.

எனவே, முதல்கட்டமாக, மக்கும் குப்பைகளில் இருந்து எரிவாயு தயாரித்து, அதன் மூலமாக கிடைக்கும் மின்சாரத்தை தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

 

சாதனை படைக்கும் பாலக்கோடு பேரூராட்சி

Print PDF

தினமணி             07.09.2013

சாதனை படைக்கும் பாலக்கோடு பேரூராட்சி

தமிழகத்திலேயே முதல்முறையாக திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் பாலக்கோடு தேர்வு நிலைப் பேரூராட்சியில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் மாநிலம் முழுவதிலும் செயல்படுத்தப்பட்டால் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைப்பதுடன், பேரூராட்சிகள் சுகாதாரமாகிவிடும்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சியின் மக்கள்தொகை 20,645. இங்கு மாநிலத்திலேயே முதல்முறையாக திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கடந்த 2004ஆம் ஆண்டு, பிப்ரவரி 5-இல் தொடக்கிவைக்கப்பட்டது.

பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அன்றாடம் சேகரமாகும் மக்கும், மக்காத குப்பைகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெறப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு சேகரமாகும் 5 டன் குப்பையில் ஒரு டன் மக்கும் குப்பையாகவும், 7 கிலோ பிளாஸ்டிக் கழிவும் கிடைக்கிறது. தரம் பிரிக்கப்படும் குப்பைகள் கூசுக்கல்மேடு பகுதியில் உள்ள உரக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

பிளாஸ்டிக் மறு சுழற்சி: இங்கு ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சுத்தம் செய்து சிறு சிறு துகள்களாக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டு பேரூராட்சிப் பகுதியில் தார்ச்சாலை அமைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உரமாகும் மக்கும் குப்பை: பிரிக்கப்படும் மக்கும் குப்பைகள் லாரிகளில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள உரப் பூங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தண்ணீர், பஞ்சக்கவ்யம் தெளித்து உலர்களங்களில் உலர வைக்கப்பட்டு கலக்கப்படுகின்றன. 60 நாள்களுக்குப் பிறகு உரமானதும் மூட்டைகளில் கட்டப்படுகிறது.

பேரூராட்சி பகுதியில் கடந்த மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்ட விற்பனை நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் உரம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை உரம் கிலோ ஒரு ரூபாய் என்பதால் விவசாயிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

மக்காத குப்பை: தரம் பிரிக்கப்படும் மக்காத குப்பை பிளாஸ்டிக் கழிவு இயந்திரம் மூலம் துகள்களாக்கப்பட்டு மறுசுழற்சி மற்றும் தார்ச்சாலைக்கு பயன்படுத்தப்படுகிறது.

உரம் மூலம் வருவாய்: திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தொடக்கப்பட்ட 2004ஆம் ஆண்டு முதல் சுமார் 283 மெட்ரிக் டன் உரம் ரூ.1.55 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கூறியது:

பேரூராட்சியை குப்பை இல்லாமல் ஆக்குதல், சுற்றுப்புறத்தை தூய்மையானதாக மாற்றும் நோக்கில் இந்தத் திட்டம் தொடக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 40 பெண்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதன் மூலம் அவர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.

குப்பைகள் மூலம் உரம் தயாரித்து விற்பதோடு, பேரூராட்சிப் பகுதியில் தார்ச்சாலை அமைக்கவும் பயன்படுகிறது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் தமிழகம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தினால் சுகாதாரம் மேன்மையடைவதுடன், மகளிர் சுய உதவிக் குழுவினர் வருவாய் ஈட்ட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றார் அவர்.

 

தேவகோட்டையில் 200 இடங்களில் குப்பைத்தொட்டிகள்

Print PDF

தினமணி             05.09.2013

தேவகோட்டையில் 200 இடங்களில் குப்பைத்தொட்டிகள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் சுகாதாரத்தை முழு அளவில் பராமரிக்க 200 இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன.

 நகரில் உள்ள 27 வார்டுகளிலும் தலா 8 குப்பைத் தொட்டிகள் வீதம் வைக்கப்பட்டுள்ளன. இதில் மக்கும், மக்காத குப்பைக்கென தனித்தனியாக தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நகர்மன்றத் தலைவி சுமித்ரா ரவிக்குமார் கலந்து கொண்டு தொட்டிகள் வைக்கும் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில் ஆணையர் சரவணன், ரவிக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் போஸ், கேசவன், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 16 of 66