Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படாது: திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் உறுதி

Print PDF

தினமணி             01.02.2014

குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படாது: திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் உறுதி

சேலம் செட்டிச்சாவடி கிராமத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் வெளியே குப்பைகளைக் கொட்டி வைக்கப் போவதில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் வெள்ளிக்கிழமை உறுதி அளித்தது.

 செட்டிச்சாவடி பகுதியில் இயங்கி வரும் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் கடந்த சில வாரங்களாக பணிகளை நிறுத்தியிருந்தது.

இதனால், மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நிறுவனத்துக்கு வெளியே கொட்டப்பட்டன. இதையடுத்து, நிறுவனத்தை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வியாழக்கிழமை முதல் குப்பைகளை அரைத்து தரம் பிரிக்கும் பணி தொடங்கியது. ஆனால், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் செட்டிச்சாவடியில் திரண்ட பொதுமக்கள், மாநகராட்சிக் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது என்று வலியுறுத்தினர்.

வெளியில் கொட்டப்பட்டுள்ளக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இதைக் கண்காணிக்க கிராமக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து அஸ்தம்பட்டி உதவிக் காவல் ஆணையர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், மாநகராட்சி செயற்பொறியாளர் அசோகன் தலைமையில் அதிகாரிகளும் விரைந்தனர்.

இதையடுத்து, நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

 

புள்ளம்பாடி பேரூராட்சியில் வீடுவீடாக குப்பை தொட்டிகள் வழங்கல்

Print PDF

தினகரன்                31.01.2014

புள்ளம்பாடி பேரூராட்சியில் வீடுவீடாக குப்பை தொட்டிகள் வழங்கல்

லால்குடி, : புள்ளம் பாடி பேரூராட்சியில் வீடுவீடாக இலவச குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். 9, 10, 11, 12ம் வார்டுகளில் இலவச மக்கும் மற்றும் மக்காத குப்பை பக்கெட்டுகளை பேரூராட்சி தலைவர் ஜேக்கப் அருள்ராஜ் வழங்கினார். இளநிலை அலுவலர் பிரகந்தநாயகி, துப்புரவு மேற்பார்வையாளர் முருகேசன், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கல்லக்குடி பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் மோகன் தலைமை வகித்தார். ஒவ்வொரு வார்டுகளுக்கும் பெரிய குப்பை தொட்டிகளை தலைவர் வாலம்பாள் வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சின்னயன், இளநிலை அலுவலர் ஜவகர், வார்டு உறுப்பினர்கள், துப்புரவு மேற்பார்வையாளர் சொக்கர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

திடக்கழிவு மேலாண்மை பணி இன்று துவங்கும்

Print PDF

தினமலர்                30.01.2014

திடக்கழிவு மேலாண்மை பணி இன்று துவங்கும்

சேலம்: சேலம் மாநகராட்சிக்கும், திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இன்று முதல் செட்டிச்சாவடியில், திடக்கழிவு மேலாண்மை பணிகள் துவங்க உள்ளது. சேலம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து, பயன்படுத்தும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்கப்பட்டது. அஞ்சர் என்ற நிறுவனத்தின் மூலம், செட்டிச்சாவடியில் மையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. இங்கு மின்சார கட்டணம், 5.70 லட்ச ரூபாய் செலுத்தாமல் நிலுவையில் இருந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால், கடந்த சில நாட்களாக இந்நிறுவனம் செயல்படவில்லை. இதனால், குப்பைகள் ஏராளமாக தேங்க துவங்கியது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் அசோகன், ஆர்.டி.ஓ., சதீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில், திடக்கழிவு மேலாண்மை திட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று மாலை வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையில், நிலுவை மின் கட்டணத்தை மாநகராட்சி செலுத்தி விட்டு, அந்நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையில் பிடித்தம் செய்து கொள்வது, என உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று காலை முதல், செட்டிச்சாவடியில், திடக்கழிவு மேலாண்மை பணிகள் துவங்கும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 5 of 66