Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Master Plan

மீனாட்சி கோயிலிருந்து ஒரு கி.மீ.க்கு அப்பால் கட்டிட உயரத்திற்கு நிபந்தனைகள்

Print PDF

தினகரன்            25.11.2010

மீனாட்சி கோயிலிருந்து ஒரு கி.மீ.க்கு அப்பால் கட்டிட உயரத்திற்கு நிபந்தனைகள்

மதுரை, நவ. 25: மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு கட்டிடம், மனைப்பிரிவு ஒப்புதல், நிறுவன வரைபட ஒப்புதல் தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்கும் குறைபாடுகளை மதுரையில் நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: மனைப்பிரிவு மற்றும் கட்டிடங்கள் அனுமதி அளிப்பதில் மதுரையில் 1993&ம் மாஸ்டர் பிளான் நடைமுறையில் உள்ளது. நிலத்தின் பயன்பாடு மாறி வருகிறது. உதாரணமாக வயல்வெளிகள் வீட்டு மனைகளாகவும், வர்த்தக கட்டிடங்களாகவும், குடியிருப்பு பகுதிகள் தொழிற்சாலை பகுதியாகவும் மாறி வருகின்றன.

எனவே திருத்திய விதிகளுடன் மதுரைக்கு புதிய மாஸ்டர் பிளான் தயாராகி உள்ளது. அரசு அனுமதி அளித்தால் 3மாதங்களில் அமலாகும். இதன் மூலம் கட்டிட அனுமதி பெறுவது எளிதாக்கப்பட்டு, மதுரையிலேயே அளிக்கப்படும். சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த மாஸ்டர் பிளானில் நகரை சுற்றிலும் வளர்ச்சிக்கு ஏற்ப விதிமுறைகள் உருவாக்கப்படும். மதுரையை சுற்றி அவுட்டர் ரிங்ரோடு திட்டம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும் சேர்த்து கொள்ளப்படும்.

மீனாட்சிஅம்மன் கோயிலை சுற்றி வெளிவீதிகள் வரை கட்டிடங்களுக்கு 9மீட்டர் உயர கட்டுப்பாடு உள்ளது. கோயிலில் இருந்து ஒரு கி.மீ.க்கு அப்பால் உயர கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. ஆனால் நிபந்தனைகள் உள்ளன. கட்டிடங்களின் உயரத்திற்கு ஏற்ப சாலையின் அகலம் அகன்றதாக இருக்க வேண் டும். சாலை 12மீட்டர் அகலம் இருந்தால் 24மீட்டர் உயர கட்டிடம், சாலை 15மீ இருந்தால் 30மீ உயர கட்டி டம், 18மீ சாலை இருந்தால் 60மீ உயர கட்டிடம், 30.5 மீ சாலை இருந்தால் 60 மீட்டருக்கு மேல் உயர கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கப்படும்.மதுரை மாநகராட்சி 4ஆயிரம் சதுரஅடி வரை வரைபட அனுமதி, கட்டிட அனுமதி அளிக்கலாம். அதற்கு மேல் 15ஆயிரம் சதுர அடி வரை மாவட்ட கலெக்டர் தலைமையிலான உள்ளூர் திட்ட குழும அனு மதி பெற வேண்டும். அதற்கு மேல் பரப்புள்ள கட்டிடங்களுக்கு சென்னை யில் அரசு அனுமதி பெற வேண்டும். விதிகள் மீறி இருந்தால் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு கூறினார்.

 

நிலச்சரிவு பகுதிகளில் உயர்ந்து வரும் கட்டடங்கள் : அதிகாரிகள் அதிர்ச்சி

Print PDF

தினமலர்                  29.10.2010

நிலச்சரிவு பகுதிகளில் உயர்ந்து வரும் கட்டடங்கள் : அதிகாரிகள் அதிர்ச்சி

ஊட்டி : ஊட்டி- குன்னூர் சாலையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழையால் பாதிப்புகள் ஏற்பட்டு சாலை துண்டிப்பும் தொடரும் நிலையில், புவியியல் துறை எச்சரித்த பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் உயர்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பெருகும் கட்டடங்களை கட்டுப்படுத்தவும், 1993ம் ஆண்டு மாநில அரசால் "மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் உள்ள சாராம்சங்களை முறையாக பின்பற்றாததால், விதிமீறி கட்டடங்கள் பெருகின.

"பெருகும் கட்டடங்களை கட்டுப்படுத்த வேண்டும்' என சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிமீறியும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டனர். இது தொடர்பாக சிலர் தடையாணை பெற்று, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் "ரியஸ் எஸ்டேட்' என்ற பெயரிலும், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என்ற பெயரிலும் விதிகளை மீறிய பெரிய கட்டடங்கள் உயர்ந்து வருகின்றன. இதில் உள்ள விதிமீறல் குறித்து அறியாமல், புதிய வீடுகளை வாங்கிய பலரும் அவற்றை பிறருக்கு விற்பனை செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அனுமதியற்ற கட்டடங்கள் குறித்து வரும் புகார்களுக்கு, "நீதிமன்ற உத்தரவு வந்த பின் நடவடிக்கை எடுக்கலாம்' என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பதிலளித்து வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில், ஊட்டி- குன்னூர் சாலையில் பிக்கட்டி என்ற பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன் சாலையில் பெரிய பிளவு ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கடந்த ஒரு மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலை பிளவை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கேத்தி, அருவங்காடு, குன்னூர் பகுதிகளில், அரசு துறை அதிகாரிகள் சிலர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், "சாலை துண்டிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்புறங்களில் கட்டப்பட்டுள்ள சில கட்டடங்களில் மக்கள் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும்; அந்த பகுதிகளில் புவியியல் துறையினர் எச்சரித்த இடங்களில் கட்டடங்கள் கட்டுவதை உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும்' என அறிவுறுத்தினர். இதே அறிவிப்பு தான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேத்தி பகுதியில் நடந்த நிலச்சரிவுகளின் போதும் புவியியல் துறையினரால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பை மதிக்காமல், பிக்கட்டி, கேத்தி, அருவங்காடு பகுதிளில் 150 அடி பள்ளத்தில் இருந்து, வானுயர்ந்த கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதற்கான அனுமதியை விதிமுறைகளை மீறி, உள்ளாட்சி மன்றங்கள் வழங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றால், கட்டட உரிமையாளர்கள் சிலர், நீதிமன்றத்துக்கு சென்று தடையாணை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, பிக்கட்டி சுற்றுப்புற பகுதியில் பல நூறு அடி உயரத்துக்கு கட்டடப்படும் கட்டடங்கள் குறித்து சில அதிகாரிகள் மாநில அரசுக்கு "ரகசிய' புகார்களை அனுப்பி உள்ளனர். இத்தகைய கட்டடங்கள் உயருவதற்கு காரணமான, அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் குறித்தும் அந்த ரகசிய பட்டியலில் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

Last Updated on Friday, 29 October 2010 05:43
 

அமைச்சர் தகவல் பெருநகர வரைவு சட்டம் போல் விரைவில் ஊரமைப்பு சட்டம்

Print PDF

தினகரன் 05.10.2010

அமைச்சர் தகவல் பெருநகர வரைவு சட்டம் போல் விரைவில் ஊரமைப்பு சட்டம்

சென்னை, அக்.5: "பெருநகர வரைவு திட்டம் உருவாக்கியது போல, சில திருத்தங்களுடன் ஊரமைப்பு சட்டம் விரைவில் வர உள்ளது" என்று அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை சார்பில், உலக உறைவிட தினத்தை முன்னிட்டு நல்ல நகரம், நல்ல வாழ்க்கைஎன்ற தலைப்பில் 4 நாள் கருத்தரங்கு நடக்கிறது. இதன் தொடக்க விழா சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. நகரங்களை நன்றாக வடிவமைப்பதில் மக்களை ஈடுபடுத்துதல் என்ற தலைப்பில் முதல் நாள் கருத்தரங்கை துணை வேந்தர் திருவாசகம் தொடங்கி வைத்தார். அப்போது வெளிப்படையான சென்னைஎன்ற இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.

செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை வகித்தார். பிரிட்டிஷ் துணைத் தூதர் மைக்நித்தாவ் ரியானாகிஸ், சுற்றுச்சூழல் வல்லுனர் பெல்லியப்பா வாழ்த்தி பேசினர்.

அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசியதாவது:

சென்னையில் 2026ல் 1 கோடியே 25 லட்சம் பேர் வாழ்வார்கள். அதற்கேற்ப 2வது பெருநகர வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் இருந்து நிறைய பேர் நகரங்களுக்கு வேலை தேடி வருகின்றனர். அவர்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளோமா என்று பார்க்க வேண்டும்.

சமூக பொறுப்பை உணர்ந்த இந்த அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெருநகர திட்டமிடலில் முதல்வர் திறமையானவர். பெருநகர வரைவுத் திட்டம் உருவாக்கியது போல சில திருத்தங்களுடன் ஊரமைப்பு சட்டம் விரைவில் வர உள்ளது.

இவ்வாறு பரிதி இளம்வழுதி பேசினார்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட துணை வேந்தர் திருவாசகம், அமைச்சர் பரிதி இளம்வழுதி, சுற்றுச்சூழல் வல்லுனர் பெல்லியப்பா, திட்ட தலைவர் நித்யா வி.ராமன்.

 


Page 3 of 6