Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பல்லாவரம் நகராட்சியில் சிறுவிசை மின் குடிநீர் தொட்டி உயர்கோபுர மின்விளக்கு திறப்பு எம்பி நிதி ரூ.1 கோடியில் அமைத்தது

Print PDF

தினகரன்             08.02.2014 

பல்லாவரம் நகராட்சியில் சிறுவிசை மின் குடிநீர் தொட்டி உயர்கோபுர மின்விளக்கு திறப்பு எம்பி நிதி ரூ.1 கோடியில் அமைத்தது

பல்லாவரம், : ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு 2012-13ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் சிறுவிசை மின் குடிநீர் தொட்டி மற்றும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பல மாதங்களாக டெண்டர் விடமாலும், டெண்டர் எடுக்க வரும் ஒப்பந்ததாரர்களை எடுக்க விடமால் தடுத்து வந்தனர்.

இதையடுத்து திமுக சார்பில் கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு, ஆமை வேகத்தில் நடந்தன. பிறகு பணிகள் முழுவதுமாக முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. இதுகுறித்து மீண்டும் கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில், பல்லாவரம் நகராட்சியில் 10 வார்டுகளுக்கு சிறுவிசை மின் குடிநீர் தொட்டி மற்றும் உயர்கோபுர மின்விளக்கு திறப்பு விழா நேற்று நடந்தது. டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் இ.கருணாநிதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

அடுத்தாண்டு மேலும் 100 பூங்காக்கள்: மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி             07.02.2014

அடுத்தாண்டு மேலும் 100 பூங்காக்கள்: மாநகராட்சி முடிவு

சென்னையில் வரும் நிதியாண்டில் மேலும் 100 பூங்காக்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் பூங்காக்களை அமைத்து, பராமரிக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் 200 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில், 87 பூங்காக்களின் பணிகள் முடிவடைந்துள்ளன. சுமார் 107 இடங்களில் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு காரணங்களால் 4 பூங்காக்கள் அமைக்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள திறந்தவெளி நிலங்களில் 100 பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. 100 பூங்காக்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய லண்டனில் இருந்து வந்துள்ள நவீன வாகனம்

Print PDF

தினத்தந்தி            05.02.2014

தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய லண்டனில் இருந்து வந்துள்ள நவீன வாகனம்

 

 

 

 

 

நாய்க்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய லண்டனில் இருந்து நவீன வாகனம் மதுரைக்கு வந்துள்ளது.

வேட்டை

மதுரையில் நாய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் நடந்தால், நாய்க்கடி உறுதி என்ற நிலை தான் மதுரை மக்களுக்கு உள்ளது. மனிதர்களை வேட்டையாட இரவு நேரங்களில் நாய்கள், கூட்டம் கூட்டமாக திரிகின்றன. நாய் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

நாய்களின் இனப் பெருக் கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி லாரி நிலையத்தில் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்படுகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் வெற்றி பெற முடியவில்லை.

நவீன கருத்தடை வாகனம்

இந்த நிலையில், லண்டனில் உள்ள உலக கால்நடை தொண்டு நிறுவனம், மதுரையில் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய உதவி செய்வதாக அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தது. இதற்காக லண்டனில் இருந்து நவீன கருத்தடை வாகனம் ஒன்றும், மருத்துவ குழுவும் மதுரைக்கு வர முடிவு செய்யப்பட்டு இருந்தது.

லண்டனில் இருந்து மும்பைக்கு கப்பலில் வந்த நவீன வாகனத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விட்டனர். ரூ.7 கோடிக்கு வரி காட்டினால், வாகனத்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதிப்போம் என்று கூறிவிட்டனர். எனவே இந்த வாகனம் மதுரைக்கு வரவில்லை. வெறும் லண்டன் மருத்துவ குழுவினர் மட்டும் வந்தனர். அவர்கள் நாய்களை பிடித்து ஆபரேஷன் செய்தனர்.

ஆபரேஷன் தியேட்டர்

இந்த நிலையில் மும்பையில் துறைமுகத்தில் இருந்த வாகனம் மீட்கப்பட்டு, அசாம் மாநிலத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் பணி செய்தது. நேற்று மதுரை வந்தது. இந்த நவீன வாகனத்தில் ஆபரேஷன் தியேட்டர், சி.டி.ஸ்கேன், எக்.ஸ்ரே வசதி போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. நாய்களுக்கு ஆபரேஷன் செய்வதை டி.வி.யில் பார்க்கும் வசதியும் உள்ளது.

இந்த திட்டத்தை கமிஷனர் கிரண்குராலா முன்னிலையில் மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். நகர்நல அலுவலர் யசோதாமணி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாய்களுக்கு ஆபரேஷனும், டாக்டர்களுக்கு பயிற்சியும் நேற்று அளிக்கப்பட்டன.

 


Page 6 of 238