Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Print PDF

தினமணி      26.08.2014

தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு 

தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சிகளில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த மூன்று ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள் என 445 அடிப்படை வசதிப் பணிகள் ரூ.413.36 கோடியில் மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ரூ.282.44 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 பாதாள சாக்கடை திட்டம்: தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான அத்திமரப்பட்டி, மீளவிட்டான், முத்தையாபுரம், சங்கரப்பேரி, தூத்துக்குடி புறநகர் ஆகிய ஐந்து பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ரூ.20 கோடியில் 29.74 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சுகாதாரக் கேடுகளை கட்டுப்படுத்தும் வகையிலும், நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலும், தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள், விடுபட்ட பகுதிகளில் ரூ.300 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.

 திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகள்: திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.327.29 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள் என 63 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பெரும்பாலானப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியின் நீர் ஆதாரம், குடிநீர் பகிர்மான கட்டமைப்பைப் மேம்படுத்தும் வகையில், ரூ.230 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும்.

ரூ.490 கோடியில் திட்டம்: பாதாள சக்கடைத் திட்டம் இல்லாத மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலி மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.490 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

 திருநெல்வேலி மாநகராட்சியின் 8 வார்டுகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளால் சேதமடைந்த 61 கிலோமீட்டர் நீளச் சாலைகள் ரூ.35.20 கோடியில் மறுசீரமைக்கப்படும். மேலும், திருநெல்வேலி மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படுவதுடன், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Last Updated on Tuesday, 26 August 2014 09:47
 

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவிலான திட்ட பணிகள் தொடக்கம்

Print PDF

தினத்தந்தி           17.02.2014

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவிலான திட்ட பணிகள் தொடக்கம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் மெயின்ரோடு இடதுபுறம் ரூ.25 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி மற்றும் காந்திநகரை இணைக்கும் பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. பேரூராட்சி தலைவர் சரோஜா தலைமை தாங்கி, தொடங்கி வைத்து, பணியினை பார்வையிட்டார். அப்போது செயல் அலுவலர் ர.ஆனந்தன், பேரூராட்சி துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

செயல் அலுவலர் கூறுகையில், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட வரிகளை வருகிற 28–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார்.

 

உடன்குடியில் 21 இடங்களில் எல்இடி விளக்குகள்: தலைவி தகவல்

Print PDF

தினமணி             13.02.2014

உடன்குடியில் 21 இடங்களில் எல்இடி விளக்குகள்: தலைவி தகவல்

உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் 12 இடங்களில், குடிநீர் தொட்டியும், 21 இடங்களில் எல்இடி விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  உடன்குடி பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம், எல்லப்பன் நாயக்கன்குளம் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கூடுதல் குடிநீர் வசதிக்காக 12 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.  இதைப்போல உடன்குடி-குலசேகரன்பட்டினம் பிரதான சாலையில் 21 இடங்களில் எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் இவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார் அவர்.

 


Page 4 of 238