Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மலைபோல் குவிதலைத் தடுக்க புதிய முயற்சி 4 கோட்டங்களிலும் உலர் திடக்கழிவு சேகரிப்பு மையங்கள்

Print PDF

 தினமணி    03.11.2014

மலைபோல் குவிதலைத் தடுக்க புதிய முயற்சி 4 கோட்டங்களிலும் உலர் திடக்கழிவு சேகரிப்பு மையங்கள்

திருச்சி மாநகரின் மொத்தக் குப்பையும் அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் மட்டும் மலைபோல் குவிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள இருக்கிறது.

மாநகராட்சியின் ஒவ்வோர் கோட்டத்திலும் ஓர் உலர் திடக்கழிவு மையம் என்ற அடிப்படையில் 4 மையங்களை அமைத்து, அங்கு குப்பைகளைச் சேகரித்து இனம் பிரித்து விற்பனை செய்துவிடவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

65 வார்டுகளைக் கொண்ட திருச்சி மாநகராட்சியின் மொத்தப் பரப்பளவு 167.23 சதுர கிமீ. ஏறத்தாழ 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாநகராட்சியின் மொத்த குப்பைக் கழிவுகளும் கடந்த பல்லாண்டுகளாகவே அரியமங்கலம் குப்பைக் கிடங்கிலேயே சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ஏறத்தாழ 2 லட்சம் வீடுகளின் குப்பைகள் ஒரே இடத்தில் சேகரிக்கப்படுவதும், அந்தக் குப்பைகள் மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக், இரும்புத் துண்டுகள், கண்ணாடிகளுடன் இருப்பதும் நகரின் சுற்றுச்சூழலுக்கு பெருமை.

 

டெங்கு பரவாமல் தடுக்க அக். 13 முதல் 16 வரை மெகா துப்புரவுப் பணி

Print PDF
தினமணி       10.10.2014

டெங்கு பரவாமல் தடுக்க அக். 13 முதல் 16 வரை மெகா துப்புரவுப் பணி

டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மெகா துப்புரவுப் பணி (மாஸ் கிளீனிங்) மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் என ஆட்சியர் ஜெயசிறீ அறிவுரை வழங்கியுள்ளார்.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அச்சமூட்டும் டெங்குக் காய்ச்சலைத் தடுக்க, அதனைப் பரப்பும் ஈடிஸ் கொசு வகையின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கொசு நல்ல தண்ணீரில்தான் வளரும். கழிவுநீரில் வளரும் கொசுக்கள் டெங்குவைப் பரப்புவதில்லை.

எனவே, பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் மழைநீர், நல்ல தண்ணீர் தேங்கும் டயர், பிளாஸ்டிக் டம்ளர், பூந்தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் சிரட்டை, முட்டை ஓடு போன்றவற்றை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.

வீட்டில் ஓரிரு நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தும் பாத்திரங்கள், தொட்டிகளை பிளீச்சிங் பொடி போட்டு நன்றாக கழுவ வேண்டும். தொட்டிகளில் ஈடிஸ் கொசுக்களின் முட்டைகள் இருக்க வாய்ப்புள்ளது.

மேலும், அனைத்து மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள், தரைத்தள தொட்டிகளையும் சுத்தமாகக் கழுவ உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி முதல் குக்கிராமம் வரை மாவட்டம் முழுவதும் வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மெகா துப்புரவுப் பணி நடத்தப்படவுள்ளது. பொதுமக்களும் இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் ஜெயசிறீ.
 

கோயம்பேடு சந்தையில் கழிப்பறைகளை சீரமைக்க ரூ.3 கோடியில் திட்டம்

Print PDF
தினமணி       09.10.2014

கோயம்பேடு சந்தையில் கழிப்பறைகளை சீரமைக்க ரூ.3 கோடியில் திட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையில் கழிப்பறைகளை ரூ.3 கோடியில் சீரமைக்கவும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ரூ.50 லட்சத்தில் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டங்களைச் செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படவுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்த, சில்லறை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், சந்தைக்கு பல்வேறு பொருள்களை கொண்டு வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இதுதவிர, கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் என பலர் வேலை செய்கின்றனர். இவர்களின் வசதிக்காக கோயம்பேடு சந்தையில் 67 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை போதிய பராமரிப்பின்றியும், உபயோகிக்க இயலாத வகையிலும் இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டினர்.

இதனால், அங்கு வரும் பலர் சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளைக் கழிக்கின்றனர். இதனால், சந்தையைச் சுற்றி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும், கோயம்பேடு சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை எனவும் புகார் எழுந்தது. இதைப் பயன்படுத்தி பலர் தண்ணீர் பாட்டில்களை அதிக விலையில் விற்பனை செய்வதும் தொடர்ந்தது.

இதுதொடர்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்தக் கழிப்பறைகளைச் சீர்செய்யவும், நல்ல குடிநீர் கிடைக்க குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, கோயம்பேடு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கூறியது:

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.3 கோடியில் 67 கழிப்பறைகளைச் சரிசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளொன்றுக்கு தலா 2,000 ஆயிரம் லிட்டர் நீரை சுத்திகரிக்கும் வகையில் 2 குடிநீர் நிலையங்களை (ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் பிளான்ட்) ரூ.50 லட்சத்தில் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்பட உள்ளன. ஒப்பந்தப் புள்ளிகள் குறித்து நவம்பர் மாதத்தில் முடிவெடுக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பெற்று கழிப்பறைகளும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் பயன்பாட்டுக்கு வரும். இந்தப் பணிகளை அங்காடி நிர்வாகக் குழு மூலம் மேற்கொள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆணையிட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
 


Page 4 of 519