Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தெருநாய்களை பிடிக்க சிறப்பு வாகனம்

Print PDF

தினமலர்              22.01.2014

தெருநாய்களை பிடிக்க சிறப்பு வாகனம்

உடுமலை : உடுமலை நகர தெருக்களில், பொதுமக்களை மிரட்டும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் சார்பில், சிறப்பு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகர குடியிருப்புப்பகுதிகளில் அதிகரித்துள்ள தெருநாய்களால், குழந்தைகள் மற்றும் பெண்கள் அச்சத்திற்குள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகவும் தெரு நாய்கள் காரணமாக இருக்கின்றன என நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் அளிக்கப்பட்டன.

தெருக்களில், சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்கள், கால்நடைகளை தாக்கும் சம்பவங்களும் நகரப்பகுதியில் நடந்தன. இவ்வாறு, தெருநாய்கள் குறித்த புகார்கள் அதிகரிக்கும் போது, நகராட்சி நிர்வாகம், தனியார் வாகனம் மூலம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது.

இவ்வாறு, நகரப்பகுதியில், திரிந்த 880 நாய்கள் தனியார் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருப்பினும், தனியார் வாகனத்தை பயன்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், அட்டகாசம் செய்யும் தெருநாய்களை பிடிக்க ரூ.7.80 லட்சம் மதிப்புள்ள "நாய்கள் பயண வாகனம் ' வாங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்பணிக்காக ஐந்து பேர் கொண்ட பணியாளர் குழுவிற்கு நகராட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனம் வாரம் இருமுறை நகர பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தெரு நாய்களை பிடித்து அவைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யவுள்ளது.

இதனால், தெருநாய்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்; அவை பொது மக்களை துன்புறுத்துவதையும் கட்டுப்படுத்தலாம்; தெருநாய்களை கட்டுப்படுத்த தனி வாகனம் மற்றும் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அச்சுறுத்தும் நாய்கள் பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண முடியும் என நகராட்சி சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

நகராட்சி பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

Print PDF

தினமணி            14.01.2014

நகராட்சி பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

ராஜபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி தலைமை வகித்து இங்கு பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஒட்டுநர்கள், மகப்பேறு உதவியாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான புதிய சீருடைகளை வழங்கிப் பேசினார்.

ராஜபாளையம் நகராட்சி ஆணையர் ராமசாமி, பொறியாளர் நடராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர் இளங்கோ, கவுன்சிலர்கள் விழாவில் பங்கேற்றனர்.

 

கோவை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு உதவும் திட்டம் தொடக்கம்

Print PDF

தினத்தந்தி               09.01.2014

கோவை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு உதவும் திட்டம் தொடக்கம்

பிரசவித்த பெண்களுக்கு உடைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு துணிகள் வழங்கும் திட்டம் மாநகராட்சி மருத்துவமனைகளில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

பிரசவ எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒரு மாதத்திற்கு 1,540 பிரசவங்கள் நடக்கிறது. இதில் தனியார் மருத்துவமனைகளில் 1000 பிரசவங்களும், கோவை அரசு ஆஸ்பத்திரியில் 400 பிரசவங்களும், மாநகராட்சி மருத்துவமனைகளில் 150 பிரசவங்களும் ஆகிறது.

மாநகராட்சி மருத்துவனைகளில் பிரசவ சதவீதம் 11 ஆக உயர்ந்துள்ளது.

புதிய திட்டம் தொடக்கம்

கோவை மாநகராட்சி மருத்துவமனையில் பிரசவத்துக்காக தாய்மார்கள் அனுமதிக்கப்படும்போது, 3 நாட்களுக்கு காலையில் பால், ரொட்டி, மதியம் முட்டையுடன் சாப்பாடு, இரவு டிபன் ஆகியவை வழங்கப்படுகிறது.

தற்போது புதிய திட்டமாக பிரசவித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள், 6 பேபி நாப்கின்கள், ஒரு கொசுவலை, தாய்மார்களுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் ஒரு பேபி டவல் உள்பட ரூ.631 மதிப்புள்ள பொருட்களை வழங்கப்பட உள்ளன.

இதற்கான திட்ட தொடக்க விழா புரூக்பாண்ட் ரோட்டில் உள்ள மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவ மையத்தில் நடைபெற்றது. மேயர் செ.ம.வேலுசாமி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் லதா, சேலஞ்சர்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த திட்டம் குறித்து மேயர் செ.ம.வேலுசாமி பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவை மாநகராட்சியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து நகர்நல மையத்துக்கும் இந்த திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்.

ரூ.50 லட்சம் வசதிகள்

சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் கர்ப்பிணி பெண்களுக்கான அறுவை சிகிச்சை மையம், ஸ்கேனிங் கருவி, எக்ஸ்ரே கருவிகள் பொருத்தும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும். கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல பகுதிகளிலும் ஸ்கேன் வசதி மற்றும் எக்ஸ்ரே கருவி மையங்கள் கர்ப்பிணி பெண்களுக்காக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 5 மருத்துவமனைகள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றுதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் லீலாவதி உண்ணி, மண்டல தலைவர்கள் ஆதிநாராயணன், கே.ஆர்.ஜெயராமன், பெருமாள்சாமி, மாநகராட்சி குழு தலைவர்கள் தாமரைச்செல்வி, சாந்தாமணி, அம்மன்அர்ஜுனன், செந்தில்குமார், வக்கீல் ராஜேந்திரன், மாநகராட்சி துணை கமிஷனர் சிவராசு , மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் அருணா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 14 of 519