Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

ஆற்காடு நகர குடிசைப் பகுதிகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமணி            24.01.2014 

ஆற்காடு நகர குடிசைப் பகுதிகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

ஆற்காடு நகராட்சியில்  உள்ள குடிசைப் பகுதிகளை மத்திய அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் கீழ் ஹைதராபாதில் உள்ள மண்டல அலுவலக இயக்குநர் பூபதிராவ் உத்தரவின்பேரில் ஆராய்ச்சி அலுவலர்கள் எம்.ராஜசேகர் ரெட்டி, பி.ராஜீவ் ஆகியோர் ஆற்காடு நகராட்சியில் உள்ள 13 அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகள் மற்றும் 13 அறிவிக்கப்படாத குடிசைப் பகுதிகளை கடந்த திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 4 நாள்கள் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தனர்.

 இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் செ.பாரிஜாதம்,நகரமைப்பு அலுவலர் கே.சாந்தி, நகராட்சி சமுதாய அமைப்பாளர் ம. துரை, சமுதாய மேம்பாட்டுச் சங்கத் தலைவர் ம.சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

குடிசை மாற்றுவாரியம் மூலம் ரூ.117 கோடி செலவில் 1472 அடுக்குமாடி குடியிருப்புகள்: ஜெயலலிதா உத்தரவு

Print PDF

மாலை மலர்            09.01.2014

குடிசை மாற்றுவாரியம் மூலம் ரூ.117 கோடி செலவில் 1472 அடுக்குமாடி குடியிருப்புகள்: ஜெயலலிதா உத்தரவு
 
குடிசை மாற்றுவாரியம் மூலம் ரூ.117 கோடி செலவில் 1472 அடுக்குமாடி குடியிருப்புகள்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை, ஜன.9 - தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் இதுவரை 1.31 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பழுதடைந்துள்ள குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் பழுதுப்பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இக்குடியிருப்புகளில் சீர் செய்தல் பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டிற்கு (2013–14) 10 கோடி ரூபாயும் அடுத்த ஆண்டிற்கு (2014–15) 15 கோடியே 77 லட்சம் ரூபாயும் என மொத்தம் 25 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 177 திட்டப் பகுதிகளில் உள்ள 29,028 குடியிருப்புகளில் உள்ள பழுதுகள் சரிபார்க்கும் பணிகள் நிறைவேற்றப்படும்.

குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சென்னை நகரில் ஆட்சேபகரமான பகுதிகளில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை, மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்வு திட்டம் வாயிலாக மாற்றிடத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யும் பொருட்டு, ஒக்கியம் துரைப் பாக்கம் கண்ணகி நகர் திட்டப்பகுதியில் இதுவரை 15,656 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இதே திட்டப்பகுதியில் 8,048 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

தற்பொழுது இப்பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இங்கு வாழும் மக்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் வாழும் மக்களின் நலனுக்காக அதிக அளவு அரசு போக்குவரத்து பேருந்துகளை இயக்குவதற்காக, தற்பொழுது கண்ணகி நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை மேம்படுத்தி 20 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏற்ப தளங்கள், பயணிகளுக்கான இடவசதி, நிர்வாகக் கட்டடம், நேரக்காப்பாளர் அலுவலகம், பயணிகள் மற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய பணிமனையுடன் கூடிய பேருந்து முனையத்தை கட்டுவதற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களை மறு குடியமர்வு செய்ய அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி வார்டு எண்.96 கக்கன்ஜி நகரிலுள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு மாற்று குடியமர்வு திட்டமாக 84 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதி-1 திட்டத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக 1,056 அடுக்குமாடிக் குடியிருப்புகள், அத்திப்பட்டு பகுதி-2 திட்டத்தில் 32 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் 416 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 117 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 1,472 அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் மாநில அரசின் மானியமாக அத்திப்பட்டு பகுதி-1 திட்டத்திற்கு 31 கோடியே 5 லட்சம் ரூபாயும், அத்திப்பட்டு பகுதி-2 திட்டத்திற்கு 11 கோடியே 63 லட்சம் என 42 கோடியே 68 லட்சம் வழங்குவதற்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் 271 சதுரஅடி தரைப்பரப்பளவு கொண்டதாகவும், இரு அறைகள், சமையலறை, பால்கனி மற்றும் கழிவறையுடனும் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

255 வீட்டுமனைகளுக்கு 70 ஆயிரம் விண்ணப்பங்கள்

Print PDF

தினமணி              07.01.2014

255 வீட்டுமனைகளுக்கு 70 ஆயிரம் விண்ணப்பங்கள்

சென்னை எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் திங்கள்கிழமை குலுக்கல் முறையில் விற்பனை செய்ய  வீட்டுமனைகள் மற்றும் கடைகளுக்கான விண்ணப்பங்கள் வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
சென்னை எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் திங்கள்கிழமை குலுக்கல் முறையில் விற்பனை செய்ய  வீட்டுமனைகள் மற்றும் கடைகளுக்கான விண்ணப்பங்கள் வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) குலுக்கல் முறையில் விற்பனை செய்ய உள்ள 255 வீட்டுமனைகள் மற்றும் கடைகளை வாங்க 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாளான திங்கள்கிழமை சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மறைமலைநகர், மணலி புதுநகர், கூடலூர், சாத்தாங்காடு ஆகிய இடங்களில் மொத்தம் 255 வீட்டுமனைகள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அருகில் உள்ள கடைகளை குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு சி.எம்.டி.ஏ. ஒதுக்கீடு செய்ய உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் கடந்த மூன்று வாரங்களாக பெறப்பட்டு வந்தன.  விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாளான திங்கள்கிழமை (ஜனவரி 6) பெறப்பட்ட 35 ஆயிரம் விண்ணப்பங்களுடன் சேர்த்து மொத்தம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கடைசி நாள் என்பதால் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஆயிரக்கணக்கானோர் எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விண்ணப்பங்களின் தகுதியின் அடிப்படையில், பிப்ரவரி 8-ஆம் தேதி வீட்டுமனைகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் நடைபெறும் என சி.எம்.டி.ஏ. வட்டாரங்கள் தெரிவித்தன.

70 ஆயிரம் விண்ணப்பங்கள் மூலம் பதிவுக் கட்டணமாக சி.எம்.டி.ஏ.வுக்கு ரூ. 7 கோடி கிடைத்துள்ளது. பதிவுக் கட்டணமாக விண்ணப்பம் ஒன்றுக்கு பெறப்பட்டுள்ள ரூ.1,000  விண்ணப்பதாரர்களுக்கு திரும்ப தரப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Page 4 of 69