Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

தண்ணீரை சுத்தப்படுத்தும் சாதனம் டாடா நிறுவனம் அறிமுகம

Print PDF

தினமலர் 14.12.2009

 

தலையங்கம்: எச்சரிக்கை அவசியம்

Print PDF

தினமணி 14.12.2009

தலையங்கம்: எச்சரிக்கை அவசியம்

வளிமண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கும் நடவடிக்கைக்கான பருவநிலை மாநாடு கோபன்ஹேகனில் தொடங்கி ஒருவாரம் முடிந்த நிலையில், சிறுசிறு காய்நகர்த்தல்களைச் செய்துள்ளன வளரும் நாடுகள். அதாவது, கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கும் அளவுகளில் கொஞ்சம் முன்பின் இருந்தாலும் அவை சரிபார்க்கப்படும் என்பதும் இதில் ஒன்று.

192 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கு கொண்டுள்ள இந்த மாநாட்டில், 77 வளரும் நாடுகள் உள்ளன. வளரும் நாடுகள் தங்கள் பகுதியிலிருந்து பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பது என்றால், அதற்காகச் சில தொழில்துறையிலும், அனல் மின்உற்பத்தியிலும் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும். இந்தத் தொழில்நுட்ப மாற்றத்துக்காக 1000 கோடி டாலர்கள் உதவி செய்வதாக ஐரோப்பிய நாடுகளின் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தொகை மிகச் சொற்பமானது என்று வளரும் நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. உண்மையைச் சொல்வதென்றால், இந்த எதிர்ப்பின் அளவைத் தெரிந்துகொள்ளத்தான் அவர்கள் இதைத் தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பின் அளவைப் பொருத்து, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்கள் பங்குத்தொகையை மேலும் அதிகரித்து, வளரும் நாடுகளை நிர்பந்திக்கும். அதற்கான முதல்பேரம்தான் இந்த 1000 கோடி டாலர். இது மேலும் உயரும் என்பது நிச்சயம்.

இதை அறிவித்துள்ள ஐரோப்பிய நாடுகளின் ஆணைய இயக்குநர் கார்ல் ஃபால்கன்பெர்ஜர் வேறொரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, "இந்த மாநாட்டில் ஒவ்வொரு நாடும் தங்களது பங்குக்குக் குறைக்கப் போகும் பசுமைஇல்ல வாயுக்கள் அளவுகளில் சிறு மாறுபாடுகள் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவற்றை அந்நாடுகள் சொன்னபடி செய்கின்றனவா என்று சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்' என்று கூறியுள்ளார். சரிபார்ப்பது என்பதன் வெளிப்படையான பொருள்- சொன்னபடி செய்யவில்லை என்றால் இந்த நிதியை நிறுத்திவிடுவோம் என்ற மிரட்டல்தான்.

வளிமண்டலத்தில் பெரும்பகுதியை மாசுபடுத்திய நாடுகள் வளர்ந்த நாடுகள்தான். பல ஆண்டுகளாக இதைச் செய்துவிட்டு, இப்போது வளரும் நாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பலவிதமாக முயல்கின்றனர். 1990-ம் ஆண்டு முதலாக மாசுபடுத்தி வரும் இந்த வளர்ந்த நாடுகள், தற்போது தொழில்நுட்பத்தின் உதவியால் இந்த மாசு அளவைக் குறைத்துக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றன. கியோட்டோ தீர்மானத்தின்படி மாசுஅளவைக் குறைப்பதில் ஒவ்வொரு நாடும் தங்களது மாசு அளவை 1990-ம் ஆண்டின் அளவுப்படி நிர்ணயிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாலும், அமெரிக்கா தனது அளவை 2005-ம் ஆண்டு அளவின்படி 17 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்தத் தன்னிச்சையான அறிவிப்பைத் தொடர்ந்து சீனாவும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்பாட்டில் 40 சதவீதம் வரை (2005-ம் ஆண்டு அளவுப்படி) குறைத்துக் கொள்வதாக அறிவித்தது.

இந்த இரு நாடுகளையும் தொடர்ந்து இந்தியாவும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்பாட்டில் 20-25 சதவீதம் (அமெரிக்கா, சீனா வழியில் 2005-ம் ஆண்டு அளவின்படி) படிப்படியாகக் குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைச் செய்தவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்முன்பாகவே இத்தகைய அறிவிப்பை அமைச்சர் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த குழு உறுப்பினர்கள் இருவர் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.

இந்தியத் தேவைகள், இந்தியாவின் தொழில்வளர்ச்சி, இங்குள்ள தொழில்நுட்பம், மக்கள்தொகை அனைத்தையும் கணக்கில் கொண்டு மாநாட்டில் பேசவும், தனக்கான அளவை நிர்ணயிக்கவும், வளர்ந்த நாடுகள் வழங்கவுள்ள உதவித்தொகையை அதிகமாகப் பெறுவதும்தான் இந்தியாவின் முழு நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அமெரிக்கா, சீனாவை அடியொட்டி இந்தியாவும் நடப்பது சரியானதாக இருக்க முடியாது.

இந்தியாவுக்குக் குரல் கொடுக்க வேண்டிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இமயமலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதற்கும் பருவநிலை மாறுபாட்டுக்கும் தொடர்பில்லை என்று பேசி, பனிப்பாறை வளர்வதும், உருகித் தேய்வதும் சுழற்சி அடிப்படையில் நடப்பவை என்று விளக்கமும் கூறியிருக்கிறார். இயற்கை ஆர்வலர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். நம் அமைச்சர் இப்படியெல்லாம் பேசுவதைப் பார்த்தால் நாம், வளர்ந்த நாடுகளால் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்தியா இரண்டு விஷயங்களில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

முதலாவதாக, இந்தியாவின் பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தைச் சரிபார்த்தல் என்கிற பெயரில் அன்னியர்கள் புகுந்து மேலாண்மை செய்வதை ஒரு போதும் ஒப்புக்கொள்ளக்கூடாது. அதிக உதவித்தொகை, சலுகை என்ற பெயரில் ஆசைவார்த்தை காட்டினாலும் அதற்கு இந்தியா உடன்படக்கூடாது. அமெரிக்காவிலோ அல்லது சீனாவிலோ நாம் போய் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டால் அனுமதிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும்.
இரண்டாவதாக, வளிமண்டலம் மாசுபட்டதை கணக்கிடும்போது, அந்தந்த நாட்டின் மக்கள் தொகையையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே சொர்க்கபோகத்தில் இருக்கும் குறைந்தபட்ச அமெரிக்கர்களுக்காக, மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் 100 கோடி இந்தியரும் தங்கள் செüகரியங்களைத் தியாகம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவது நியாயமற்றது. இந்தியாவில் நதிகள் மாசுபட்டதற்கும், வளி மாசுபட்டதற்கும் காரணம், அதிகப் பணம் கிடைக்கிறது என்பதால் வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மேற்கொண்ட தொழில்களால் ஏற்பட்டவைதான். வளர்ந்த நாடுகளுக்குத் தேவையான, ஆனால் அந்நாட்டு இயற்கைக்குப் பாதகமான தொழில்கள் அனைத்தையும் வளரும் நாடுகளுக்குத் தள்ளிவிட்டு, இப்போது வளரும் நாடுகளைப் பலவந்தப்படுத்துகின்றனர். இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

அமெரிக்காவிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்பதற்காக அவர்கள் மனம்நோகாத படி நடப்பதால் இந்தியர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காது. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. தெளிவாகவும், முன்யோசனையுடன், எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

Last Updated on Monday, 14 December 2009 06:29
 

நிலத்தடி நீர்மட்டத்தில் பாதிப்பு பிரதமர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 11.12.2009

 


Page 17 of 42