Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.18.80 லட்சம் தொடக்க நிதி

Print PDF

தினமணி                  22.08.2012

கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.18.80 லட்சம் தொடக்க நிதி

திருவண்ணாமலை, ஆக. 21: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தைச் சேர்ந்த 47 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.18.80 லட்சம் தொடக்க நிதியை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இதற்கான விழா நடைபெற்றது. இவ் விழாவில், தொடக்க நிதிக்கான காசோலைகளை 47 ஊராட்சித் தலைவர்களிடம் வழங்கி ஆட்சியர் விஜய் பிங்ளே பேசியது:

புதுவாழ்வுத் திட்டம் என்பது தமிழக அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வறுமை ஒழிப்புத் திட்டமாகும். 2006 முதல் இத்திட்டம் செங்கம், புதுப்பாளையம், திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை, போளூர் ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மொத்தம் 219 கிராம ஊராட்சிகளில் புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம வறுமை ஒழிப்புச் சங்க தொடக்க நிதி என்பது கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் நிர்வாகச் செலவுகள், அலுவலக அமைப்புச் செலவுகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்க வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் இப்போது, போளூர் ஒன்றியம், போளூரில் உள்ள 47 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.18.80 லட்சம் தொடக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் முறையாகப் பயன்படுத்தி தங்களுடைய ஊராட்சியில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, அனைத்துத் துறைகளின் அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் வழிமுறைகள் பற்றிய வழிகாட்டி கையேட்டை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே வெளியிட்டார். இதில், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் ராஜபாண்டியன், 47 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 23 August 2012 04:27
 

விளக்கு முதல் கிரைண்டர் வரை... :குடிசை வீடுகளுக்கு மின் வரையறை அதிகரிப்பு

Print PDF

தினமலர்           24.07.2012
           
விளக்கு முதல் கிரைண்டர் வரை... :குடிசை வீடுகளுக்கு மின் வரையறை அதிகரிப்பு

ஒரு விளக்கு திட்டத்தின் கீழ், குடிசை வீடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்திற்கான வரையறை, தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், நஷ்டத்தில் தள்ளாடும் மின் வாரியம், மேலும் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம் ஏற்கனவே, ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால், தனியாரிடம் பெறும் மின்சாரத்திற்கு கூட, பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. மின் திருட்டு, மின் இழப்பு; மின் உற்பத்தி திட்டங்கள் தாமதம் போன்ற பல காரணங்களால், வாரியம் தட்டுத் தடுமாறுகிறது.

மானிய அளவு:

இந்நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு, குத்து மதிப்பாக வழங்கப்படும் மானியத் தொகையைப் போலவே, குடிசைகளுக்கான (40 வாட்) ஒரு விளக்கு திட்டத்தின் கீழும், குறிப்பிட்ட ஒரு தொகையை மானியமாக, தமிழக அரசு பெற்று வருகிறது.முன்பு ஒரு விளக்கு திட்டத்தின் கீழ், எவ்வளவு மானியத் தொகை அளிக்கப்பட்டதோ அதே அளவுக்கே தற்போதும் மானியம் வழங்கப் படுகிறது. இத்தகைய குடிசை வீடுகளில் பெரும்பாலானவற்றில், கூடுதல் மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் உள்ளது. அனைத்து குடும்பதாரர்களுக்கும், விலையில்லா தொலைக்காட்சிப் பெட்டியை (70 வாட்) தமிழக அரசு வழங்கியதால், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரப் பட்டியலில், அதுவும் சேர்க்கப் பட்டது.

அதிகரிக்குமா?

தற்போது, மாநிலம் முழுவதும், மின் விசிறி, மாவு அரவை இயந்திரம், கலவை அரவை இயந்திரம் ஆகியவற்றை, தமிழக அரசு, இலவசமாக வழங்கி வருகிறது. இவைகளை உபயோகிக்க கூடுதல் மின்சாரம் தேவை என்பதால், அவற்றையும் குடிசைகளுக்கான இலவச மின்சார வரையறைப் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப் பட்டு உள்ளது. ஆனால், அதற்கேற்ப மானியம் எப்போது அதிகரிக்கப்படும் எனத் தெரியவில்லை. இதனால், ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளால் தள்ளாடும் தமிழக மின் வாரியத்தின் சுமை அதிகரிக்கும். எனவே, குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை, தமிழக அரசு முறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

வாரியம் முன்வருமா?

மின் கட்டணம் வசூலிக்கும் வாரிய அலுவலகங்களில், குடிசை வீட்டிற்கு தரப்படும், ஒரு விளக்குக்கு 40 வாட் மற்றும் இலவச "டிவி' பயன்பாட்டிற்கு 70 வாட் என்ற குறிப்பு தற்போது, ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கிறது. இனி, எவை எல்லாம் இலவசம்; அதற்குரிய "வாட்' அளவு என்ன என்பது குறிக்கப்பட வேண்டும். அதைத் தாண்டி பயன்படுத்தும் நுகர்வோருக்கு, எந்த அடிப்படையில் கட்டணம் முறைப் படுத்தப் படும் என்பது தெரியவில்லை.

- நமது நிருபர் -

 

பிரதிபா பாட்டீல் பேச்சு வறுமையை ஒழிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு

Print PDF

தினகரன்               15.11.2010

பிரதிபா பாட்டீல் பேச்சு வறுமையை ஒழிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு

புதுடெல்லி, நவ.15: உலக அளவில் நிலவும் வறுமையை ஒழிப்பதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

தாய்மை, குழந்தை பிறப்பு மற்றும் சுகாதாரத்துக்கான 2010ம் ஆண்டின் சர்வதேச கூட்டமைப்பு மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரதிபா பேசியதாவது:

மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு சில குறைபாடுகள் ஏற்படுவதால் குழந்தை இறப்பு விகிதம் உலக அளவில் நம்நாட்டில் அதிகமாகவே இருக்கிறது. இதை போக்க தாய்மை நலம், குழந்தை பிறப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் தேவை. அதற்கான முன்சிகிச்சை முறை அனைத்தையும் சரியான முறையில் கையாள வேண்டும். நாட்டில் நிலவும் வறுமையை ஒழிப்பது என்பது இன்றை சூழலில் மிகவும் முக்கியம். அந்த நோக்கில் பார்க்கையில் இந்தியா உலக அளவில் நிலவும் வறுமைமை குறைப்பதற்கு தகுந்த அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.

இன்றைய வளர்ச்சிக்கான குறிக்கோளில் பொருளாதார மீட்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகள், அதிலிருந்து மீள வேண்டும். சிறந்த கொள்கைகள் மூலம் வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்திய எட்டி வருவதால், நடப்பாண்டின் இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மகப்பேறுவின் போது, தாய் மற்றும் குழந்தை இறப்பை குறைக்க அரசு சார்பில் தீவிர முயற்சி எடுக்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் 250 பின்தங்கிய மாவட்டங்களில் போதிய சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இதை போக்க சிறப்பு கவனம் செலுத்தி அனைத்து பகுதி மக்களும் மருத்துவ வசதி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

இந்தியாவில் முன்சிகிச்சை காரணமாக தற்போது போலியோ, அம்மை நோய் தாக்குதல் குறைந்துள்ளதாக உலக சுகாதார மைய இயக்குனர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 15 November 2010 10:15
 


Page 8 of 42