Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

எரிவாயுவை பயன்படுத்தி மின் உற்பத்தி: இலக்கை எட்டாமல் பின்தங்கிய தமிழகம்

Print PDF
தின மலர்                26.02.2013

எரிவாயுவை பயன்படுத்தி மின் உற்பத்தி: இலக்கை எட்டாமல் பின்தங்கிய தமிழகம்


புது டில்லி: இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, தமிழகத்தில், 1,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தாலும், வெறும், 330 மெகா வாட் மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதனால், எரிவாயு மூலமான மின் உற்பத்தியில், தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வது, மிகவும் எளிதானது என்பதோடு, விலை மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் எரிவாயு பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு, எரிவாயு பற்றாக்குறையே காரணம். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் கிடைக்கும் எரிவாயுவை, குழாய்கள் மூலம், தமிழகத்திற்கு எடுத்து வர, 2006ல் திட்டமிடப்பட்டது. இதற்கான பணியை, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. ஆனால், எந்தப் பணியையும், ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ளாமல், அப்படியே கிடப்பில் போட்டது. இதனால், எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தமே, கடந்த ஆண்டு, மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு விட்டது; புதிய ஒப்பந்தமும், இதுவரை போடப்படவில்லை. அதே நேரத்தில், காக்கிநாடாவில் இருந்து, குஜராத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு, எரிவாயு எடுத்துச் செல்லப்படுகிறது. மகாராஷ்டிராவுக்கும், எரிவாயு முழு அளவில் கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, குஜராத் மாநிலம், 5,133 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவில், எரிவாயு மூலம், 3,427 மெகா வாட் மின்சாரமும், ஆந்திராவில், 3,370 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, தஞ்சாவூரில் உள்ள கோவில் கலப்பலில், 107 மெகா வாட், பேசின் பிரிட்ஜில், 120 மெகா வாட், குத்தாலத்தில், 100 மெகா வாட், வழுத்தூரில், 186 மெகா வாட், கருப்பூரில், 119 மெகா வாட், வள்ளந்திரியில், 52 மெகா வாட், பி.நல்லூரில், 330 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, மின் உற்பத்தியை செய்ய முடியவில்லை. வெறும், 390 மெகா வாட் மின்சாரம் மட்டுமே, தமிழகத்தில், எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தியில் தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை அறியலாம். கேரள மாநிலம் காயங்குளத்தில், ஏற்கனவே, 700 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நிலையமும், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில், விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, செம்மேனி மற்றும் பிரம்மபுரம் என்ற இரண்டு இடங்களில், எரிவாயுவைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள், அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated on Tuesday, 26 February 2013 11:43
 

பேரிடர் காலத்தில் பயன்படுத்தும் நவீன "விளக்கு பலூன்' அறிமுகம்

Print PDF

தின மணி          17.02.2013

பேரிடர் காலத்தில் பயன்படுத்தும் நவீன "விளக்கு பலூன்' அறிமுகம்

பேரிடர் காலங்களில் இருள் சூழ்ந்த இடத்தில் பயன்படுத்தும் வகையிலான நவீன விளக்கு பலூன்(லைட் பலூன்) காரைக்காலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பேரிடர் காலங்களில் இருள் சூழ்ந்த இடத்திலும், குறிப்பாக, மின்விநியோகம் இல்லாத அனைத்துப் பகுதிகளிலும் வெளிச்சம் தரும் விதமாக, அஸ்கா என்ற பெயருடைய லைட் பலூனை புதுதில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதை புதுச்சேரி அரசு கொள்முதல் செய்து, காரைக்கால் மாவட்டத்தில் தீயணைப்புத் துறைக்கு 2, காரைக்கால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 2 என மொத்தம் 4 விளக்கு பலூன்கள் காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் ஜெ. அசோக்குமார், சார்பு ஆட்சியர் அ. முத்தம்மா, உதவி ஆட்சியர் சந்தீப்குமார்சிங் உள்ளிட்டோருக்கு காரைக்கால், சுரக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சுரேஷ், கலியமூர்த்தி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் லைட் பலூனின் பயன்பாடு, செயல்பாடு குறித்து விளக்கினர்.

இதுகுறித்துத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், 18 அடி உயரத்தில், ஒன்றரை அடி அகலத்தில் உலோகம், பாலித்தீன் முறையில் தயாரிக்கப்பட்டது. 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கில் ஆயில் கலந்த பெட்ரோல் சேர்த்து இயங்கச் செய்ய வேண்டும் என்றனர்.

Last Updated on Monday, 18 February 2013 08:43
 

நகராட்சி கமிஷனர் முதல் ஊழியர் வரை 111 பணியிடம் காலி!

Print PDF

தினமலர்         31.08.2012

நகராட்சி கமிஷனர் முதல் ஊழியர் வரை 111 பணியிடம் காலி!

மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில், கமிஷனர் முதல் கடைமட்ட ஊழியர்கள் வரை, மொத்தம், 111 பணியிடம் காலியாக இருக்கிறது. இதனால், நகராட்சி நிர்வாக பணிகள், குடிநீர் வினியோகம், சுகாதாரம் என, அனைத்து பணிகளும் ஸ்தம்பித்துள்ளது.

மேட்டூர் நகராட்சியில், 30 வார்டுகளில், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில் பெரிதான ஸ்டேன்லி அணை மற்றும் பூங்கா மேட்டூரில் இருப்பதால் தினமும், மேட்டூருக்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதியில் அணை, மின் உற்பத்தி நிலையம் இருப்பதால் மற்ற பகுதிகளை விட மேட்டூரில் பொதுப்பணித்துறை ஊழியர்கள், மின் ஊழியர்கள் உள்பட அரசு ஊழியர்களே அதிகம் உள்ளனர்.ஆனால், தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழும் மேட்டூரில், ஆங்காங்கே செப்டிக் டேங்க உடைந்து ரோட்டில் ஓடும் கழிவு நீர், தேங்கி கிடக்கும் குப்பை என, சுகாதாரகேடாக காட்சியளிக்கிறது. இது நகராட்சி மக்களை மட்டுமின்றி, வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது.

இதற்கு மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, 111 பணியிடங்கள் காலியாக இருப்பது முக்கிய காரணமாகும். மேட்டூர் நகராட்சியில், ஏப்ரல் மாதம் முதல் கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. இதுவரை கமிஷனர் பணியிடம் நிரப்பபடவில்லை.மேலும், ஒரு உதவி பொறியாளர், இரு துப்பரவு ஆய்வாளர், ஒரு நகரமைப்பு அலுவலர், ஒரு நகரமைப்பு ஆய்வர், ஐந்து இளநிலை உதவியாளர், இரு பிட்டர், நான்கு வருவாய் உதவியாளர், ஒரு பணி ஆய்வர், ஐந்து மின் பணியாளர், 42 துப்பரவு பணியாளர் உள்பட மொத்தம், 111 பணியிடங்கள் காலியாக உள்ளது.ஒவ்வொரு நகராட்சிக்கும் ஆண்டுதோறும் கிடைக்கும் வரி வருவாயில் குறிப்பிட்ட தொகை மட்டுமே ஊழியர்கள் சம்பளத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த நிதி ஒதுக்கீடுக்கு ஏற்பவே பணியாளர்கள் நியமிக்க வேண்டும். மற்ற நகராட்சிகளில் சொத்துவரி, குடிநீர் வரி அதிகமாக கிடைப்பதால், அதற்கேற்ப பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், மேட்டூர் நகராட்சியின் பெரும்பகுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்ததாலும், அருகாமையில் அணை இருப்பதாலும், வீடுகளுக்கு பட்டா வழங்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள, 70 சதவீத வீடுகளுக்கு பட்டா கிடையாது. பட்டா இல்லாத வீடுகளுக்கு சொத்து வரி குறைவாக இருக்கும்.இதனால், நகராட்சிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வரி இழப்பீடு ஏற்படுகிறது. இதனால், ஏராளமான பணியிடம் காலியாக இருந்தபோதிலும், பணியாளர்களை நியமிக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறுகிறது. அதற்கேற்ப நகராட்சி நிர்வாக பணிகளும் ஸ்தம்பித்துள்ளது, மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
 


Page 7 of 42