Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு... அகற்றம்

Print PDF
தினமலர்                27.04.2013

புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு... அகற்றம்

சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமரும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த, 13 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். முன்னறிவிப்பின்றி கடைகள் அகற்றப்பட்டதால், வியாபாரிகள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சேலம், புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பஸ்ஸுக்கு காத்திருக்கும் நடைபாதைகளில், பெட்டி கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த நடைபாதை கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கடை வியாபாரிகள், இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்றனர்.புது பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க, மாநகராட்சிக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, நேற்று, புது பஸ் ஸ்டாண்டில் நடைபாதையில் உள்ள கடைகள் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். முன்னறிவிப்பின்றி கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளை, கடை வியாபாரிகள் முற்றுகையிட்டு, கடைகளை அகற்றக் கூடாது, என்று வலியுறுத்தினர். முன்னறிவிப்பு எதுவுமில்லாமல், மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்றுவதாக, வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.பகல், 12 மணி வரை கடைகளை அகற்ற, வியாபாரிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன் பின், மாநகராட்சி மாநகராட்சி செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் சிபிசக்ரவர்த்தி தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நடைபாதையில் வைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில், புது பஸ் ஸ்டாண்டில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புது பஸ் ஸ்டாண்டில் இருந்த, 13 கடைகளை மாநகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.சில மாதங்களுக்கு முன், பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு விட்டது. புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் மாநகராட்சி நடவடிக்கை வரவேற்கத்தக்கது.இதே நிலை நீடிக்க வேண்டுமே தவிர, பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது போல், சில நாட்களில் மீண்டும் ஆளுங்கட்சி ஆதரவு பெற்றவர்களுக்கு கடை ஒதுக்கி கொடுக்கக் கூடாது, என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

சேலம் புதிய பஸ்நிலையத்தில் 13 ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம் கடைக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

Print PDF
தினத்தந்தி               26.04.2013

சேலம் புதிய பஸ்நிலையத்தில் 13 ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம் கடைக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

சேலம் புதிய பஸ் நிலையத்தில் 13 ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள்  அதிரடியாக அகற்றினர். இதனை கண்டித்து கடைக்காரர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு கடைகள்

சேலம் புதிய பஸ்நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 56 நிரந்தர கடைகளும், அனுமதி வழங்கப்பட்ட 13 ஆவின் பாலகங்கள் உள்பட 35 கடைகளும் உள்ளன. இதைதவிர அனுமதியில்லாமல் ஆக்கிரமிப்பு கடைகள் ஏராளமாக உள்ளது. இது பற்றி தொடர்ந்து வந்த புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வந்தனர்.

இதற்கிடையே, 6 மாதத்திற்கு முன்பு புதிய பஸ்நிலையத்தை ஆய்வு செய்த சட்டமன்ற உறுதிமொழி குழுவினர், ஆவின் பாலகங்கள் என்று இருந்த 13 கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்றும், குளிர்பானங்கள் போன்ற இதர பொருட்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது எனக்கூறி 13 ஆவின் பாலகங்களை அகற்றுமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடைகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையாளருக்கு கலெக்டர் மகரபூஷணம் அறிவுறுத்தினார்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்


அதன்பேரில் கடைகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் ஐகோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ளோம் என்றும் கடைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்போது கடைகள் ஏதும் அகற்றப்படவில்லை. இந்நிலையில், மாநகராட்சி செயற்பொறியாளர் காமராஜ், சூரமங்கலம் உதவி ஆணையர் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலையில் சேலம் புதிய பஸ்நிலையத்திற்கு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். அப்போது கடைகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கடைக்காரர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் ஐகோர்ட்டு உத்தரவுப்படியும், ஆவின் நிர்வாகத்தின் அனுமதியுடன் தான் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்துள்ளோம் என்றும் அதிகாரிகள் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உரிய அனுமதியின்றி செயல்பட்ட 13 ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டது. மேலும், பஸ்நிலையம் வெளிப்புறத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த 9 பழக்கடைகளும் அகற்றப்பட்டது.

ஆவின் பொருட்களை விற்பனை செய்யவில்லை

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 13 கடைகளை அகற்றுவதற்கு சென்னை ஐகோர்ட்டு, ஆவின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று மாநகராட்சியை அறிவுறுத்தியது. அதன்பேரில் ஆவின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆவின் நிர்வாகமோ அந்த 13 கடைகளுக்கும் நாங்கள் முன்னரே அனுமதி ரத்து செய்துவிட்டோம். எங்களது ஆவின் நிர்வாகத்தின் பொருட்களை விற்பனை செய்யாத காரணத்தினால் கடைகளை அகற்றிக்கொள்ளலாம் என்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் வந்துள்ளது. அதன்படிதான் ஆவின் பாலகங்களை அகற்றுகிறோம் என்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்ததால் சூரமங்கலம் உதவி கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 

புதுவையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தினமணி       20.04.2013

புதுவையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியில் சாலை பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

புதுச்சேரியில் பேனர்கள் வைக்க அரசு தடை விதித்தது. அதையும் மீறி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை அகற்ற வேண்டுமென சில அமைப்புகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து 19-ம் தேதிக்குள் பேனர்களை அகற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

அவகாசம் முடிந்ததையொட்டி, வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில், வருவாய்த்துறையினர் பேனர்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். ராஜா திரையரங்கு சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை, இந்திராகாந்தி சிலை சந்திப்பில் இருந்து நெல்லித்தோப்பு சாலை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

மேலும், சாலையோரத்தில் வணிகர்களின் விளம்பரத் தட்டிகள், ஆக்கிரமிப்பு கூரைகள், பொருள்கள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தினர். பாலாஜி திரையரங்கு அருகே ஆக்கிரமிப்பு அகற்றியபோது, அங்கிருந்த வணிகர்களும், பொதுமக்களும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்தனர்.
 


Page 16 of 204