Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

அப்பாடா... "நகருது' பழக்கடைகள் நெரிசலுக்கு விடிவு கிடைத்தது

Print PDF
தினமலர்        16.05.2013

அப்பாடா... "நகருது' பழக்கடைகள் நெரிசலுக்கு விடிவு கிடைத்தது


மதுரை:மதுரையில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான பழக்கடைகளை, சென்ட்ரல் மார்க்கெட் எதிரே இடம் மாற்றம் செய்ய உள்ளனர்.சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு, "மத்திய காய்,கனிகள் விற்பனை அங்காடி' என்ற பெயர் உண்டு. ஆனால், காய்கறிகள் மட்டுமே விற்கப்படுகிறது. பழ விற்பனை, யானைக்கல் பகுதியில் நடக்கிறது. ரோட்டோர பழக்கடைகளால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

நெரிசலும், நாளுக்கு நாள், அதிகரிக்கிறது. இதற்கு தீர்வு காண, சென்ட்ரல் மார்க்கெட் செல்ல வியாபாரிகள் முன்வந்த நிலையில், அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.இந்நிலையில், வியாபாரிகள் இடமாற தொடர்ந்து ஆர்வம் காட்டினர். இதைதொடர்ந்து, சென்ட்ரல் மார்க்கெட் வடக்கிலும், விறகு மண்டிக்கு கிழக்கிலும், அண்ணாநகர் ரோட்டிற்கு மேற்கிலும், மேலூர் ரோட்டிற்கு தெற்கிலும் பழக்கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் ஒப்புதலுக்கு பின், அங்கு கடைகள் கட்டும் பணி தொடங்கும். இதே போல், வெங்காய மண்டி, தயிர் மண்டிகளையும், சென்ட்ரல் மார்க்கெட் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய, மாநகராட்சி முன்வரவேண்டும்.
 

பழனியில் அனைத்துத் துறைகள் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF
தினமணி         09.05.2013

பழனியில் அனைத்துத் துறைகள் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்


அனைத்துத் துறைகளும் இணைந்து, பழனியில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டன.

பழனியில் சாலையோரக் கடைகளின் ஆக்கிரமிப்பு, பிளாட்பாரக் கடைகள், தள்ளு வண்டிகள் ஆகியவற்றால், இங்கு வரும் முருக பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், கடந்த பங்குனி உத்திரத் திருவிழாவின்போது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்பு அகற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில், நீண்ட காலமாக அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டது.

இது, பக்தர்கள், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதன்பின்னர் சில வாரங்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து, 3 நாள்களாகத் தொடர்ந்து அறிவிப்புகளும் செய்யப்பட்டன.

அதன்படி, பழனி அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் திருக்கோயில் நிர்வாகமும், காந்தி ரோடு, ஆர்.எப். ரோடு, சந்நிதி வீதி, கடைவீதி, மார்க்கெட் பகுதிகளில் நகராட்சி நிர்வாகமும், திண்டுக்கல் ரோடு, புதுதாராபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகமும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டன.

அப்போது, அடிவாரம் விஞ்ச் நிலையம் அருகே இருந்த பல கடைகளும், மார்க்கெட் பகுதியில் நகராட்சியின் கடைகளை விஸ்தரித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களும் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது, வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

நெடுஞ்சாலைத் துறையின் இருபக்கமும் இருந்த பிளாட்பார கடைகளும் ஜேசிபி இயந்திரத்தால் தரைமட்டமாக்கப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், பழனி ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், இணை ஆணையர் பாஸ்கரன், வட்டாட்சியர் இதாயத்துல்லாகான், டி.எஸ்.பி. குப்புராஜ், துணை ஆணையர் ராஜமாணிக்கம், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சங்கர், உதவிப் பொறியாளர் ஜெயபால், நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

சென்னை நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் 50 ஆயிரம்:வெள்ள பாதிப்பை தடுக்க படிப்படியாக அகற்ற முடிவு

Print PDF
தினமலர்        08.05.2013

சென்னை நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் 50 ஆயிரம்:வெள்ள பாதிப்பை தடுக்க படிப்படியாக அகற்ற முடிவு


சென்னை:சென்னையில் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள நீர் வழித்தடங்களில் 50 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவற்றால் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க, குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்து, படிப்படியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கணக்கெடுப்பு:சென்னையில் அடையாறு, கூவம் ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் உட்பட ஐந்து பெரிய நீர் வழித்தடங்கள் பொதுப்பணித் துறை வசமும், இதர 31 சிறிய நீர்வழித்தடங்கள் சென்னை மாநகராட்சி வசமும் உள்ளன. இந்த நீர்வழித்தடங்கள் அனைத்தும் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன.இதனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நகரம் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், குடிநீர் பிரச்னையும் அவ்வப்போது தலைதூக்கி வருகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வுகாண நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்ற மாநகராட்சியும், பொதுப்பணித் துறையும் முடிவு செய்துள்ளன. இதற்காக ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.

மாநகராட்சியில் 20 ஆயிரம்:இந்த கணக்கெடுப்பில், பொதுப்பணித் துறை நீர் வழித்தடங்களில் 30 ஆயிரம் ஆக்கிரமிப்புகளும், மாநகராட்சி நீர்வழித்தடங்களில் 20 ஆயிரம் ஆக்கிரமிப்புகளும் இருப்பது தெரியவந்துள்ளது.ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று வீடு ஒதுக்கப்பட வேண்டும். இதனால் படிப்படியாக மாற்று வீடுகளை ஒதுக்கீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல்கட்டமாக 6,000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.இதற்காக "பயோ மெட்ரிக்' முறையில் ஆக்கிரமிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக 3,000 பேர் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். வரும் ஜூலை மாதத்திற்குள் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் அவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகள் தயாராகி விடும்.இது குறித்து மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் கூறியதாவது:நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று வீடு ஒதுக்குவதற்கு இது சரியான நேரம். இதன் மூலம் ஆக்கிரமிப்பாளர்கள், அவர்களின் குழந்தைகளை புது இடத்தில் பள்ளியில் சேர்க்க வசதியாக இருக்கும். மேலும், பருவமழை துவங்குவதற்கு முன்பே, முக்கியமான நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இந்த ஆண்டு அகற்ற வேண்டிஉள்ளது. முதல்கட்டமாக 6,000 வீடுகள் நீர் வழித்தடங்களில் இருந்து அகற்றப்பட உள்ளன. மற்ற ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாழ்வான இடங்கள் 291:அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள "ரிமோட் சென்சிங்' துறை மூலம் சென்னையில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு வருகின்றன. தற்போது ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், நீர் வழித்தடங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதால், கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட தாழ்வான பகுதிகள் குறித்த புள்ளிவிவரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

புதிய கணக்கெடுப்பின் படி, சென்னையில் 291 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில், அம்பத்தூர், திருவொற்றியூர், மாதவரம், செங்குன்றம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டிய பகுதிகள் அடக்கம்.இந்த பகுதிகளுக்காக 156 நிவாரண மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வெள்ள காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
 


Page 14 of 204