Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

அயனாவரம், தியாகராயநகர் பகுதி சாலையோர வியாபாரிகளுக்கு 1185 கடைகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வழங்குகிறார்

Print PDF

மாலை மலர் 28.07.2010

அயனாவரம், தியாகராயநகர் பகுதி சாலையோர வியாபாரிகளுக்கு 1185 கடைகள் ஒதுக்கீடு மு..ஸ்டாலின் அடுத்த மாதம் வழங்குகிறார்

அயனாவரம், தியாகராயநகர் பகுதி
 
 சாலையோர வியாபாரிகளுக்கு 1185 கடைகள் ஒதுக்கீடு
 
 மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வழங்குகிறார்

சென்னை, ஜூலை.28- சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கான கடைகள் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அயனாவரம் பாலவாயல் சாலையில் நடைபாதை வியாபாரிகளுக்காக கட்டப்பட்டு வரும் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் தியாகராயநகர் பாண்டிபஜாரில் ரூ.4 கோடியே 30 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 758 சதுர அடியில் நடைபாதை வியாபாரிகளுக்காக தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் 3 மின் தூக்கிகள் மற்றும் 36 கழி வறைகளுடன் கூடிய 692 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. தரைத்தளத்தில் 170 கடைகளும், முதல்தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளத்தில் தலா 174 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதேபோன்று, அயனாவரம் பாலவாயல் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக ரூபாய் ஒரு கோடியே 23 லட்சம் செலவில் 16 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவில் நடைபாதை வியாபாரிகளுக்கான கடைகள் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வருகிறது. இதில் 363 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

ராயபுரத்தில் ரூபாய் 27 லட்சம் செலவில் 2615 சதுர அடி பரப்பளவில் நடைபாதை வியாபாரிகளுக்கான கடைகள் எம்.சி. சாலையில் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் 133 கடைகள் கட்டப்படுகின்றன.

ஆக மொத்தம் சென்னையில் சாலையோர வியாபாரிகளுக்காக 1185 கடைகள் ரூபாய் 5 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பணிகள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்கப்படும். வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்- அமைச்சர் மு..ஸ்டாலின் வழங்குவார்.

தியாகராயநகரில் உஸ்மான் சாலை, தியாகராயர் சாலை, பாண்டிபஜாரில் சிவப்பிரகாசம் சாலை, அயனாவரத்தில் பாலவாயல் சாலை, ராயபுரத்தில் மணியக்கார சத்திரத்தெருவில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் இப்பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் இல்லாதவாறு மாநகராட்சி அலுவலர்கள் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வி.எஸ்.பாபு, எம்.எல்.., மண்டலகுழுத்தலைவர் வி.எஸ்.ஜெ.சீனிவாசன், தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர் குமரேசன், பகுதி செயலாளர் சதீஷ்குமார், சிட்கோ வாசு, வட்ட செயலாளர்கள் செல்வராஜ், பிரபு, ஜெயின், வீரமணி, கவுன்சிலர் காஞ்சி துரை, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

ரூ.9.80 லட்சத்தில் நடைபாதை வாசிகளுக்கு விரைவில் தங்கும் விடுதி வேலூர் மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன் 28.07.2010

ரூ.9.80 லட்சத்தில் நடைபாதை வாசிகளுக்கு விரைவில் தங்கும் விடுதி வேலூர் மாநகராட்சி நடவடிக்கை

வேலூர், ஜூலை 28: வேலூர் மாநகராட்சி பிளாட்பாரங்களில் 107 பேர் வசிப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவர்களுக்காக ரூ.9.80 லட்சத்தில் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நகர்புறங்களில் பிளாட்பாரத்தில் தனியாகவும், குடும்பங்களாவும் பலர் வசிக்கின்றனர். மழை, குளிர் காலங்களில் எந்த பாதுகாப்பும் இன்றி தவிக்கும் இவர்களுக்கு வாழ்வுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கான நடவடிக்கையில் அந்தந்த மாநில உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. தமிழகத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பிளாட்பாரங்களில் வசிப்பவர்களை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி வேலூர் மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 107 பேர் பிளாட்பாரத்தில் வசிப்பது தெரியவந்துள்ளது. அதே போல ஆம்பூரில் 8 குழந்தைகள், 37 பெரியவர்கள், வாணியம்பாடியில் 7 பேர், ராணிப்பேட்டையில் 3 பேர், திருப்பத்தூரில் 12 பேர் என தெரிய வந்துள்ளது.

வேலூர் மாநகராட்சியில் பிளாட்பார வாசிகளை தங்க வைக்க போதிய இட வசதி எங்கும் இல்லை. இதனால், டிட்டர்லைன் ரோட்டில் ரூ.9.80 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட் டப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளது. இங்கு பிளாட்பாரவாசிகள் தங்கவும், குளியல் வசதி, பொருட்களை பாதுகாக்கும் பெட்டக வசதி, கழிப்பிட வசதி செய்துகொடுக்கப்பட உள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் 2,800 பேர் சாலையோரத்தில் வசிப்பு

Print PDF

தினகரன் 22.07.2010

சேலம் மாவட்டத்தில் 2,800 பேர் சாலையோரத்தில் வசிப்பு

சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியும், ஆத்து£ர், மேட்டூர், இடைப்பாடி, நரசிங்கபுரம் உட்பட நான்கு நகராட்சிகளும் உள்ளன. சேலம் மாவட்டத்தில் ஆண்கள் 15,63,634 பேரும், பெண்கள் 14,82,846 பேர் உட்பட 30 லட்சத்து 16 ஆயிரத்து 346 பேரும் வசிக்கின்றனர். மாநகராட்சி எல்லைக்குள் சுமார் 7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சேலம் நகரில் கடைவீதி, சுகவனேஸ்வரர் கோயில், பழைய பேருந்து நிலையம், புதியபேருந்து நிலையம், ஜங்சன், டவுன் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலானோர் சாலையோரங்களில் வீடில்லாமல் வசித்து வருகின்றனர். சேலம் மாநகர காவல் துறையின் கணக்கெடுப்பின் படி சேலம் மாநகர எல்லைக்குள் 340 குடும்பங்களில் 1800 பேர் வரை சாலையோரத்தில் வசிக்கின்றனர். இதே போல் சேலம் மாவட்ட அளவில் நான்கு நகராட்சி பகுதிகளிலும் சுமார் ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 2,800 பேர் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். கணக்கெடுக்கும் பணி துவங்கியது

இதையடுத்து தமிழக அரசு சமூக நலம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் தங்கும் விடுதிகள் அமைக்க உள்ளது. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் துறை செயலர் ராமமோகனராவ் கடந்த 11.5.2010ம் தேதி நகராட்சி நிர்வாக செயலர் நிரஞ்சன் மார்டிக்கு தங்கும் விடுதிகள் குறித்து செயல்படுத்த கடிதம் அனுப்பினார். இதன் பேரில் நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் கடந்த 8.6.10ல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் வீடின்றி சாலை யோரம் வசிப்பவர்களை கணக்கெடுக்க வேண்டும். எண்ணிக்கைக்கேற்ப எத்தனை விடுதிகள் அமைக்க வேண்டும் என்பது குறித்த விரிவான அறிக்கையை (ஆக்சன் பிளான்) ஒரு மாதத்திற்குள் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் நகர்புறங்களில் வீடின்றி வசிப்பவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. சேலம் மாநகராட்சி சார்பில் சாலையோரங்களில் தங்குபவர்களை பற்றி கணக்கெடுக்கும் பணியில் மாநகர் நல அலுவலர் பொற்கொடி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வீதி வீதியாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர்.

இது பற்றி சேலம் மாநகராட்சி ஆணையர் பழனிசாமி கூறியதாவது: உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தமிழக அரசின் உத்தரவின் பேரில் சேலம் மாநகராட்சி எல்லைக்குள் வீடில்லாத குடும்பங்கள், ஆதரவற்றவர்கள், அனாதைகள், முதியவர்கள் உள்ளிட்ட சாலையோர வாசிகள் பற்றி கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவர்களுக்கு பங்கர் டைப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. ஏற்கனவே இது போன்று சேலத்தில் விடுதிகள் நடத்தி வரும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடு செயல் திட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஆணையர் பழனிசாமி கூறினார்.

 


Page 16 of 34