Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

பொருளாதார வளர்ச்சி ஏழைகளுக்கும் வேண்டும்

Print PDF

தினகரன் 16.08.2010

பொருளாதார வளர்ச்சி ஏழைகளுக்கும் வேண்டும்

ஜாம்ஷெட்பூர், ஆக. 16: இந்திய பொருளாதார வளர்ச்சியின் வாய்ப்புகள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 25 சதவீதம் பேருக்கு கிடைக்க வேண்டும் என்று டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குனர் எச்.எம்.நெரூர்கர் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் 64வது சுதந்திர தின விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நெரூர்கர் ஊழியர்கள் முன்னிலையில் பேசியதாவது:

நாட்டில் 4ல் ஒருவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார். அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் 25 கோடி பேர் தவிப்பது உண்மையிலேயே அவமானம் ஆகும்.

சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் இந்த மக்கள் பங்கு கொள்ளாதது, வரும் காலத்தில் நாட்டில் அபாயகரமான சூழலை உருவாக்கும்.

எனவே இவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் செயல்பட வேண்டும். டா டா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் கோத்ரெஜ் நிறுவனங்கள் கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சிகள் எடுத்து வருகின்றன.

ஏழை மக்களும் காரில் செல்ல வேண்டும் என்ற நோக்கில் குறைந்த விலையில் டாடா மோட்டார், நானோ கார் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து கோத்ரெஜ், மினி ரெப்ரிஜிரேட்டர் (குளிர்சாதன பெட்டி) தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. நாம் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளை கடந்து விட்டோம்.

ஆனால் உலகமயமாக்கல் மூலம் 20 ஆண்டுகளாகத்தான் பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

 

குடிசைகள் அற்ற இந்தியா உருவாக்குவது ஐந்து ஆண்டுகளுக்குள் சாத்தியமில்லை

Print PDF

தினமலர் 16.08.2010

குடிசைகள் அற்ற இந்தியா உருவாக்குவது ஐந்து ஆண்டுகளுக்குள் சாத்தியமில்லை

புதுடில்லி : "குடிசைகள் அற்ற இந்தியாவை உருவாக்க குறைந்த பட்சம் 20 ஆண்டுகளாவது தேவைப்படும்' என, பரீக் கமிட்டி கூறியுள்ளது.

இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 2009 ஜூன் 4ம் தேதி பார்லிமென்டில் உரையாற்றிய போது, "அடுத்த ஐந்து ஆண்டுகளில், குடிசைகளே இல்லாத இந்தியாவை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது' என்றார். இந்த திட்டத்திற்கு, "ராஜிவ் ஆவாஸ் யோஜனா' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அதன்படி, இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக ஆய்வு செய்து, திட்ட மதிப்பீட்டை உருவாக்க, எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரீக் தலைமையில் எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழு, கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.இந்த குழு, கடந்த ஏப்ரல் மாதம் தனது ஆய்வறிக்கையை அளித்தது. அதில், ஐந்து ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க சாத்தியமில்லை என்றும், இந்த திட்டத்திற்கான கால அவகாசத்தை 20 ஆண்டுகளாக நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து லோக்சபாவில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் செல்ஜா கூறியதாவது:பரீக் கமிட்டி அளித்த ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், "ராஜிவ் ஆவாஸ் யோஜனா' திட்டம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இதற்கு முன்னோட்டமாக, "குடிசைகள் அற்ற நகரம்' மற்றும் "குடிசைகள் அற்ற மாநிலம்' ஆகிய திட்டங்கள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, குடிசைகளை கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த திட்டங்களுக்காக, 2009-10 ஆண்டில், பட்ஜெட்டில் 20 மாநிலங்களுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில்,60 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. "ராஜிவ் ஆவாஸ் யோஜனா' திட்டத்திற்காக 2010-11ம் ஆண்டில் 1,270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.குடிசையில் வசிப்பவர்களுக்கு, சொத்துரிமை அடிப்படையில், இருப்பிட பாதுகாப்பை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று பரீக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.நகரங்களில் குடிசைப் பகுதிகள், பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. குடிசைவாசிகளுக்கு, அவர்களுக்கு வசிக்கும் பகுதியிலேயே வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் அக்கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.இவ்வாறு செல்ஜா கூறினார்.

 

மானிய வட்டியுடன் வீட்டு கடன்

Print PDF

தினமலர் 03.08.2010

மானிய வட்டியுடன் வீட்டு கடன்

மதுரை : மத்திய அரசின் நகர்ப்புற ஏழை மக்களுக்கான மானிய வட்டியுடன் கூடிய, வீடுகட்ட கடன் பெற ஏற்கனவே பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் வங்கிக்கு அளிக்க வேண்டிய முறையான விண்ணப்ப படிவத்தை, நேரில் பெற்று பூர்த்தி செய்து, மதுரை எல்லீஸ்நகரில் உள்ள வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் வழங்க வேண்டும்.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மேற்கண்ட விபரம் தொடர்பாக வரைவு அலுவலர் அசோகனை 94437 96786 ல் தொடர்பு கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வரைவு அலுவலர் டி.தர்மரை 93452 00708லும், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டத்தினர், வரைவு அலுவலர் பாலசுப்ரமணியத்தை 99941 68214லும் தொடர்பு கொள்ளலாம் என செயற்பொறியாளர் பி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 


Page 14 of 34