Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

மகளிர் குழுக்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி

Print PDF

தினமணி 20.08.2009

மகளிர் குழுக்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி

பேரையூர், ஆக. 19: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் "பெட்கிராட்' தொண்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பெட்கிராட் நிறுவன நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, கனரா வங்கி மேலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சித் தலைவர் கருமலையான், உறுப்பினர் கோபால், மகளிர் திட்ட அலுவலர் மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர் எஸ்தர் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

கேரள உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு

Print PDF

தினமணி 20.08.2009

கேரள உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு

திருவனந்தபுரம், ஆக. 19: கேரள மாநில உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அந்த மாநில அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறியதாவது:

மகளிருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டு வருவதற்காக சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8-ம் தேதி முதல் 17-ம் வரை நடைபெறும் என்றார்.

தற்போது கேரள உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனினும் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்கத் தேவையான சட்டத் திருத்தம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த விஷயத்தில் பிகார், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளன.

பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் நிலைக்குழுக்கள் போன்ற உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளில் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க இதன் மூலம் வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏராளமான நலத் திட்டங்கள் மகளிரையும், குழந்தைகளையும் சார்ந்தே அமைகின்றன. இவை உள்ளாட்சி அமைப்புகள் மூலமே நிறைவேற்றப்படுகின்றன என்றார்.

கேரள மாநிலத்தில் தற்போது 999 கிராமப் பஞ்சாயத்துகள், 152 வட்டாரப் பஞ்சாயத்துகள், 14 மாவட்டப் பஞ்சாயத்துகள், 53 நகராட்சிகள், 5 மாநகராட்சிகள் உள்ளன.

 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும்: ப.சிதம்பரம் நம்பிக்கை

Print PDF

தினமணி 14.08.2009

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும்: .சிதம்பரம் நம்பிக்கை


தாம்பரம், ஆக. 12: இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

தாம்பரம்-சென்னை கடற்கரை, அரக்கோணம்-சென்னை கடற்கரை மற்றும் சென்னை கடற்கரை-வேளச்சேரி ஆகிய புறநகர் பிரிவுகளில் நெரிசல் நேர மகளிர் மட்டும் சிறப்பு புறநகர் மின் தொடர் ரயில்கள் அறிமுக விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பச்சைக்கொடி அசைத்துத் துவக்கிவைத்துப் பேசியதாவது:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைத்துப் பிரிவு மக்களின் தேவைகளையும் ஆராய்ந்து அவைகளை நிறைவேற்றி வருகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஏழைத் தொழிலாளர்களுக்கும், பெண்களுக்கும் என்ன தேவை என்று ஆராய்ந்து அண்மையில் மும்பை, கோல்கத்தா ஆகிய நகரங்களில் தனி புறநகர் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கென தனி சிறப்பு ரயில் இயக்குவதால் இருபாலருக்கும் பொதுவான ரயிலை ஆண்களின் ரயிலாக மாற்றி விடாதீர்கள். மகளிர் ரயிலில் 9 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 4500 பேர் பயணம் செய்யலாம். 6000 பேர் பயணம் மேற்கொள்ளும் வகையில், ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துமாறு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் வலியுறுத்துவேன்.

மேலும் ரயிலில் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணிகளில் பெண்களை அமர்த்தி, பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ப.சிதம்பரம். பொது மேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் பேசியதாவது: நெரிசல் மிகுந்த புறநகர் மின்சார ரயில் பிரிவாகத் திகழும் தாம்பரம்-சென்னை கடற்கரைப் பிரிவில் தினமும் 4.5 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அரக்கோணம் -சென்னை கடற்கரைப் பிரிவில் தினமும் 3.7 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். வேளச்சேரி-சென்னை கடற்கரை பறக்கும் ரயில் பிரிவில் தினமும் 75 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் நடைபாதைகள் குறுகியதாக உள்ளதால் அதை அகலப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் எம்.எஸ்.ஜெயந்த்.

விழாவில் மத்திய ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன், வட சென்னை மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், தாம்பரம் நகர்மன்றத் தலைவர் இ.மணி, சென்னை மண்டல மேலாளர் எஸ்.கே.குல்சிரேஸ்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 38 of 41