Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மதுரையில் பிப். 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை

Print PDF

தினகரன்             01.02.2014

மதுரையில் பிப். 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை

மதுரை, :வைகை அணை நீர்மட்டம் சரிந்துள்ளதால் 3ம் தேதி முதல் மதுரை நகரில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குழாயில் குடிநீர் சப்ளை செய்யப்படும் என மாநகராட்சி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மதுரை நகரில் சப்ளையாகும் குடிநீருக்கும், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்ட நீரும் வைகை அணையில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 35.56 அடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 49.80 அடி இருந்தது. முல்லை பெரியாறு அணையில் 111.30 அடியாக குறைந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் 113 அடி இருந்தது. தற்போதைய நிலையில் பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட வை கைக்கு வந்து சேரவில்லை.

தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம்தான் ஆரம்பமாகும் நிலையில் தற்போதைய நிலவரப்படி வைகையில் ஏப்ரல், மே கோடை வரை குடிநீருக்கு இருப்பு இல்லை. அணை நீர்மட்டம் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால். இப்போதே குடி நீர் சப்ளை அளவு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தினமும் 60 கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்தது. இதை 40 கன அடியாக குறைத்துள்ளனர். வைகை ஆறு வறண்டு கிடப்பதால், அதிலுள்ள குடிநீர் திட்ட கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் அளவும் குறைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பா நிருபர்களிடம் கூறியதாவது:

மதுரை நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. வைகை அணையில் நீர் இருப்பு குறைந்து தற்போது 640 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது. இதை வைத்து மே இறுதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்க இயலாது. எனவே 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குழாயில் குடிநீர் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வழங்கினால் 90 நாட்களுக்கு சமாளிக்க வாய்ப்புள்ளது.

இதுதவிர மண்டலத்திற்கு 125 போர்வெல் வீதம் மொத்தம் 500 போர்வெல் அமைக்கப்பட உள்ளது. நகரை சுற்றிலும் 55 தனியார் கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்து சப்ளை செய்து கோடையை சமாளிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினார். ஆணையர் கிரண்குராலா, நகர பொறியாளர் மதுரம் உடன் இருந்தனர்.

பிப்ரவரி 3ம் தேதி (நாளை மறுநாள்) முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யும் திட்டத்தை அமலாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி தற்போது 2 நாட்களுக்கு ஒரு முறை குழாயில் வரும் குடிநீர் 4 நாட்களுக்கு ஒரு முறை தான் வரும். லாரிகள் மூலம் சப்ளை எத்தனை நாட்களுக்கு ஓரு முறை என்பது ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்.

மாநகராட்சியின் இந்த அபாய சங்கு, கோடைக்கு 2 மாதங்களுக்கு முன்பே குடிநீர் பஞ்சமா என மதுரை மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து ஆய்வு

Print PDF

தினத்தந்தி          29.01.2014 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து நேற்று கூட்டாய்வு நடைபெற்றது.

ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ராஜகோபால்நகர், சின்னகண்ணுபுரம், நிகிலேசன் நகர், ராஜீவ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் சரியாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி ஆகியோர் நேற்று காலையில் கூட்டாய்வு மேற்கொண்டனர். மில்லர்புரம் வீட்டு வசதி காலனி, ராஜகோபால்நகர், சின்னகண்ணுபுரம், நிகிலேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடந்தது.

நடவடிக்கை

மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுக்குழுவினர் கோரம்பள்ளம் குளத்தையும் பார்வையிட்டனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள கிணறுகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கோகிலா, மாநகராட்சி என்ஜினீயர் ராஜகோபால், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

மாநகராட்சி குடிநீர்த் திட்டம்: ஜப்பான் அதிகாரிகள் பார்வை

Print PDF

தினமணி           29.01.2014 

மாநகராட்சி குடிநீர்த் திட்டம்:  ஜப்பான் அதிகாரிகள் பார்வை

கோவை மாநகராட்சியின் பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டத்தை ஜப்பான் நாட்டு குடிநீர் வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.

 கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களில் பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ஆம் ஆண்டு ஜன. 24-ஆம் தேதி துவங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் கோவைக்கு நாளொன்றுக்கு 63 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கிறது. இத்திட்டம் சுரங்கப்பாதை வழியாகச் செயல்படுத்தப்படுகிறது.

 இத்திட்டத்தை பவர் பாயின்ட் மூலம் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ஞானேஸ்வரன், ஜப்பான் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு விளக்கினார்.

 கோவை மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான தொழில்நுட்ப உதவிகளை ஜப்பானிடம் இருந்து பெற உள்ளதாகவும், இங்குள்ள குடிநீர்த் திட்டங்கள் குறித்து ஜப்பான் அலுவலர்களுக்கு விளக்கப்பட்டதாகவும் ஆணையர் ஜி.லதா தெரிவித்தார்.

 ஜப்பான் குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குநர் சுகனோ தகாஷி தலைமையில் 4 பேர் கோவைக்கு வந்து பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டம் குறித்துத் தெரிந்து கொண்டனர்.

 


Page 14 of 390