Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மதுரையில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு

Print PDF

தினமணி             01.02.2014

மதுரையில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு

வைகையில் குடிநீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதால், இரண்டு வைகைத் திட்டங்களின் மூலம் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இது ஓரிரு நாளில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

வைகையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 35.56 அடி தண்ணீர்தான் உள்ளது. அதாவது, 640 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. இதில், மதுரை மாநகராட்சிக்கான ஒதுக்கீட்டுப்படி, 2 வைகை குடிநீர்த் திட்டங்களின் மூலம் தண்ணீர் எடுத்தால் குறைந்த நாள்களுக்குத் தான் விநியோகிக்க முடியும்.

இதைத் தவிர்க்க, தற்போதுள்ள தண்ணீரை 4 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்தால், முந்தைய 72 வார்டுகளுக்கு மட்டும் 90 நாள்களுக்கு குடிநீர் வழங்க முடியும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தெந்தப் பகுதியில் எந்தெந்த தேதியில் குடிநீர் விநியோகம் செய்யலாம் என்பது குறித்த சுழற்சி முறையிலான விநியோகப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் இறுதியானவுடன், 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் குறித்து முறைப்படி அறிவிப்பு செய்து நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், முன்னேற்பாடுகளும் செய்து வருகிறோம். நான்கு மண்டலங்களிலும் புதிதாக தலா 125 ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் நல்ல தண்ணீர் இருப்பு இருப்பதால், பிரச்னை ஏற்படவில்லை. இருந்தபோதிலும், அப்பகுதிகளுக்கு வைகை குடிநீர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விநியோகம் தொடரும்.

மேலும், மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல தண்ணீர் வளம் உள்ள 55 கிணறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு, மாநகரில் விநியோகம் செய்யப்படவுள்ளது.

பெரியாரிலிருந்து மாநகர தேவைக்காக தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், அந்த அணையிலிருந்து தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  மாநகரில் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 3ஆவது வைகை குடிநீர்த் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே வைகையில் மதுரை மாநகருக்கு ஒதுக்கீடு செய்துள்ள 1,500 மில்லியன் கனஅடியுடன், மேலும் 600 மில்லியன் கனஅடி தண்ணீர் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 3ஆவது திட்டத்துக்கான ஆய்வுப் பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.  பேட்டியின்போது, ஆணையர் கிரண்குராலா, நகரப் பொறியாளர் மதுரம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

அரசுப் பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

Print PDF

தினமணி             01.02.2014

அரசுப் பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

அரசுப் பள்ளிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என பூந்தமல்லி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பூந்தமல்லி நகராட்சி மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் திருமலை தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, துணைத்தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீர்மானங்கள்: நகராட்சிக்குள்பட்ட 3 அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆகியவற்றுக்கு ரூ.15 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதர வேண்டும்.தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் கட்டடம் அமைக்க வேண்டும்.

நகராட்சிப் பணியாளர்களின் தகவல் பரிமாற்றத்துக்கு ரூ.7 லட்சம் செலவில் வாக்கி டாக்கிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

 

இனி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சுவையானகுடிநீர் கிடைக்கும் சுத்திகரிப்பு கலன் அமைக்க ரூ.19 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினகரன்             01.02.2014

இனி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சுவையானகுடிநீர் கிடைக்கும் சுத்திகரிப்பு கலன் அமைக்க ரூ.19 லட்சம் ஒதுக்கீடு

திண்டுக்கல், : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.19 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்வோருக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என பொதுமக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டு உள்ளது. பயணிகள், தனியாருக்கு சொந்தமான கட்டண கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.

பஸ் ஸ்டாண்டில் ஒரே ஒரு இடத்தில் சின்டெக்ஸ் தொட்டி வைத்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே தண்ணீர் வரும். சுத்தமான குடிநீர் கிடைக்காததால் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் பாட்டில் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் சென்றது.

இதையடுத்து பஸ் ஸ்டாண்டை நவீனப்படுத்தி அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன் நவீன வசதிகளுடன் கூடிய ஆண், பெண் இலவச கழிவறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இரண்டு சுத்திகரிப்பு கலன் பஸ் ஸ்டாண்டிற்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.  இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஓரிரு வாரத்திற்குள் சுத்திகரிப்பு குடிநீர் கலன் அமைக்கப்படும் என்றார்.

 


Page 13 of 390