Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குழாயில் ஒரு சொட்டு நீர் கூட கசியக்கூடாது; பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் அறிவுரை

Print PDF

தினமலர்       20.04.2017

குழாயில் ஒரு சொட்டு நீர் கூட கசியக்கூடாது; பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் அறிவுரை

சென்னை : சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை சமாளிக்க, பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள குடிநீர் வாரியம், நிலத்தடி நீரை மோட்டார் மூலம் உறிஞ்ச, ஒன்பது மணிநேரம் இடைவெளி தர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பருவமழை பொய்த்ததால், சென்னையில் ஏரிகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இருப்பினும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைத்திட, சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளை முறையாக பயன்படுத்துவதுடன் வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். மேலும், குடிநீர் தட்டுப்பாட்டை

சமாளிக்க குடிநீர் வாரியத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.

சென்னை நகரின் குடிநீர் தேவை, 830 மில்லியன் லிட்டர். கடந்த மாதம் வரை, இந்தளவு குடிநீரை வாரியம் வினியோகித்து வந்தது. தற்போது பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மீண்டும் பருவமழை பெய்து, குடிநீர் ஆதாரம் கிடைக்கும் வரை குடிநீர் வினியோகத்தின் அளவு, 550 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த அளவை மேலும் குறைக்காமல் இருக்க, வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், வீடுகளில் பயன்படுத்தும் குழாயிலோ, தெருக்குழாயிலோ ஒரு சொட்டு நீர் கூட கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குழாயில், ஒரு சொட்டு நீர், 10 மணிநேரம் தொடர்ந்து கசிந்தால், 20 லி., தண்ணீர் வீணாகும். ஒரு வீட்டில், 20 லி., தண்ணீர் என, சென்னையில் உள்ள, 10 லட்சம் வீடுகளில் நீர் கசிந்தால், தினமும், 2 கோடி லி., நீர் வீணாகும்.

இதை கருத்தில் கொண்டு, குழாய்களை மூடி வைக்க வேண்டும். மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தும் போது, ஒன்பது மணிநேர இடைவெளி தர வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீரூற்று சீராக இருக்கும். மின்மோட்டாரை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மின்சாரம் வீணாவது மட்டுமல்லாது நிரூற்றிலும் தடை ஏற்படும்.

வானிலை ஆய்வு மையம், இந்த ஆண்டு கோடை மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். அவற்றை நல்ல முறையில் பராமரித்து தயார் நிலையில் வைத்தால், மழை பெய்யும் போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்வதோடு, நிலத்தடி நீரின்

தன்மையும் மேம்படும்.பொதுமக்களுக்கும் அத்தகைய குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பொறுப்புள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

முறைகேடான 1,732 குடிநீர் இணைப்புகள்...துண்டிப்பு!மாவட்டத்தில் 173 மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்        19.04.2017

முறைகேடான 1,732 குடிநீர் இணைப்புகள்...துண்டிப்பு!மாவட்டத்தில் 173 மோட்டார்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில், முறைகேடாக பயன்படுத்தி வந்த 1,732 குடிநீர் இணைப்புகளை உள்ளாட்சி அதிகாரிகள் துண்டித்துள்ளனர். மேலும், 173 மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க, அதன் எதிரொலியாக, குடிநீர் பிரச்னையும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம், 2015ல் பெய்த பெருமழைக்கு பின் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு, வட கிழக்கு பருவ மழை பொய்த்த பின், குடிநீர் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது என, நீராதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், செய்யாறு, பாலாறு, வேகவதி ஆறு, ஓங்கூர் ஆறு மற்றும் 912 ஏரிகள், நுாற்றுக்கணக்கான குளங்கள் என, மாவட்டம் முழுவதும் ஏராளமான நீர்நிலைகள் இருந்த போதும், குடிநீர் பிரச்னை தீராமல் உள்ளது.

குடிநீர் திருட்டு

குடிநீர் பிரச்னைக்கு மற்றொரு காரணமாக, முறைகேடான குடிநீர் இணைப்புகள், ஊராட்சிகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் முளைத்து வருகின்றன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில், திருட்டுத்தன மாக குழாய் அமைத்து மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுகிறது.சில இடங்களில் வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுமே இந்த முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் உள்ளது. அவற்றை முறையாக கண்காணித்து உடனடியாக அந்த குடிநீர் இணைப்புகளை துண்டிக்க சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சிகளில் முறைகேடான குடிநீர் இணைப்புகளை கண்டறிதல், மோட்டார்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.கோடைகாலம் துவங்கியது முதல் முறைகேடான இணைப்புகள் குறித்து, மாவட்ட ஆட்சியர், பொன்னையாவிடம் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஊராட்சி ஒன்றியங்களில் 2,036 முறைகேடான இணைப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதில், 1,627 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 41 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போல், நகராட்சிகளில், 23 முறைகேடான இணைப்புகள் துண்டிக்கப் பட்டு, 109 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நடவடிக்கை

பேரூராட்சிகளில், 82 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 23 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முறையாக வரி செலுத்தாமல், உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் குடிநீரை, முறைகேடாக உறிஞ்சும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. முறைகேடான குடிநீர் இணைப்புகள் அனைத்தும் விரைவில் துண்டிக்கப்படும் என, உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கோடையின் ஆதிக்கம் தொடங்கியது: வறட்சியை எதிர்கொள்ள குடிநீர் வாரியம் யோசனை

Print PDF

தினமணி           12.04.2017

கோடையின் ஆதிக்கம் தொடங்கியது: வறட்சியை எதிர்கொள்ள குடிநீர் வாரியம் யோசனை

metro-water

சென்னை, சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வறட்சியை எதிர்கொள்வது குறித்தும், எஞ்சியுள்ள குடிநீர் ஆதாரங்களை தக்க வைத்துக்கொள்வது தொடர்பாகவும் பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

சென்னையின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட 4 ஏரிகளில் மொத்த கொள்ளளவில் (11 டிஎம்சி) தற்போது 10 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. அதேபோன்று நிலத்தடி நீரின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில் 0.70 மீட்டரும், அதிகபட்சமாக திரு.வி.க.நகர் பகுதியில் 2.88 மீட்டரும் குறைந்துள்ளது.

இருப்பினும் பிற குடிநீர் ஆதாரங்கள் மூலம் மொத்த தண்ணீர் தேவையில் 70 சதவீதம் வரை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் சென்னையின் குடிநீர் தேவையைச் சமாளிக்க மாதத்துக்கு 1 டிஎம்சி (1,000 மில்லியன் கன அடி) தண்ணீர் தேவைப்படும். வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தால் ஆவியாதல் முறையில் அதிகளவு தண்ணீர் வீணாவதோடு, குடிநீர் தேவை அதிகரிக்கும்.

எனினும் எஞ்சியுள்ள குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்தல், ஆழ்துளை கிணறுகளை முறையாக பயன்படுத்துதல், மழை நீர் கட்டமைப்புகளைச் சீரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடியும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:

சென்னையில் கடந்த 2000, 2002-ஆம் ஆண்டுகளில் தற்போது உள்ள குடிநீர் வறட்சியைக் காட்டிலும் 2 மடங்கு மோசமான நிலை இருந்தது. அந்த கால கட்டங்களில் 4 ஏரிகளிலும் தண்ணீர் முற்றிலும் வறண்டது. அந்த நிலையிலும் குடிநீர் லாரிகள், வீராணம் தண்ணீர் மூலமாக பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்தது. இதனால் நிகழாண்டிலும் குடிநீர்த் தட்டுப்பாட்டை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

70 லிட்டர் தண்ணீர் வரை...:சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு நபருக்கு சராசரியாக 125 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது பற்றாக்குறை காரணமாக 70 லிட்டர் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவு மேலும் குறைந்து விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறோம்.

வீட்டில் குடிநீர் குழாயில் ஒரு சொட்டு நீர் கசிந்தாலும் கூட 10 மணி நேரத்தில் 20 லிட்டர் தண்ணீர் வீணாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குளிப்பது, துணிகளைத் துவைப்பது போன்றவற்றுக்கு மொத்த தேவையில் 40 சதவீதம் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்த தண்ணீரை கல்வாழையைப் பயன்படுத்தி எளிமையான கட்டமைப்புகள் மூலம் மறுசுழற்சி செய்தால் அந்த நீரை செடிகள், கழிவறைகளுக்கு மீண்டும் பயன்படுத்த முடியும். இதற்கான திட்டத்தை பொதுமக்கள் குடிநீர் வாரியத் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பலன் பெறலாம். ஒரு வீட்டில் 10 லிட்டர் தண்ணீர் வீணாவதைத் தடுத்தால் 15 லட்சம் வீடுகளில் தினமும் 1.50 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.

வீடுகளில் மின் மோட்டார்களை பயன்படுத்தும் பொதுமக்கள் காலையில் 1 மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு முறை பயன்படுத்துவதற்கும் அடுத்த முறை பயன்படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 9 மணி நேரம் இடைவெளி தேவை. அப்போதுதான் நீருட்டல் சீராக இருக்கும். மின் மோட்டாரை தொடர்ச்சியாக இயக்குவதால் மின்சாரம் வீணாவதோடு, நீருட்டலில் பெரும் தடை ஏற்படும்.

இந்தாண்டு கோடை மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டும். மழை நீரை எளிதில் உட்கிரகிக்கும் வகையில் அதில் உள்ள குப்பை, கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில ஆண்டுகளாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயலாகும்.

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும் சவால்களை எதிர்கொண்டு பொதுமக்களின் குடிநீர்த்தேவைகளை கட்டாயம் பூர்த்தி செய்வோம். அதே நேரத்தில் குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கும் இருக்கிறது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

 


Page 2 of 390