Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

சாதாரண பஸ் பாஸ் உள்ள மாணவர்கள் சுவர்ணா பேருந்தில் பயணம் செய்ய அனுமதி

Print PDF

தினமணி 25.09.2009

சாதாரண பஸ் பாஸ் உள்ள மாணவர்கள் சுவர்ணா பேருந்தில் பயணம் செய்ய அனுமதி

பெங்களூர், செப். 24: சாதாரண பேருந்துக்கு பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள், முதியோர் இனி சுவர்ணா, புஷ்பக் பேருந்துகளிலும பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

பெங்களூர் இரட்டைச் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் வோல்வோ மல்டி ஆக்ஸில் பஸ் சேவையை வியாழக்கிழமை அமைச்சர் அசோத் தொடங்கிவைத்தார்.

பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

விஜயதசமி பண்டிகையையொட்டி மாணவர்கள், முதியோர்களுக்கு சில சலுகைகளை அறிவிக்க பெங்களூர் நகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

தற்போது பஸ் பாஸ் பெற்றுள்ள மாணவர்கள், முதியோர்கள் சாதாரண நகரப் பேருந்துகளிலேயே பயணம் செய்ய முடியும். இனி அவர்கள் புஷ்பக், சுவர்ணா ரக பேருந்துகளிலும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். செப்டம்பர் 28-ம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.

முதியோர்களுக்கு தற்போது பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணத்தில் அவர்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் வோல்வோ பேருந்துகளில் அவர்கள் பயணம் செய்தால் இந்த சலுகை இல்லை. இனி வோல்வோ பேருந்துகளிலும் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

60 வயதை அடைந்ததற்கான முதியோர் சான்றிதழை நடத்துனரிடம் காட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. எனவே, இனி அவர்கள் 60 வயதை அடைந்ததற்கான ஏதாவது ஓர் ஆதாரத்தைக் காட்டினால் போதும்.

பேருந்துகளில் பெண்கள் இருக்கையில் அமர்ந்தபடி ஆண்கள் பயணம் செய்வதாக புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு பயணம் செய்வோருக்கு அபராதம் விதிக்க நடத்துனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை கடுமையாக அமல்படுத்தவில்லை. இனி பெண்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் விதிப்பது கட்டாயமாக்கப்படும்.

தற்போது சர்வதேச விமானநிலையம், எலக்ட்ரானிக்சிட்டி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் வோல்வோ பேருந்துகளில் மட்டும் பயணிகளுக்கு தின்பண்டம் விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே, இனி நகரில் இயக்கப்படும் எல்லா வோல்வோ பேருந்துகளிலும் தின்பண்டம் விநியோகத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார் அவர்.

Last Updated on Friday, 25 September 2009 06:02
 

திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி 24.09.2009

திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம்

திருக்கோவிலூர், செப். 23: திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி புதன்கிழமை நேரில் பார்வையிட்டார்.

வளர்ந்து வரும் திருக்கோவிலூரில் போதிய அளவுக்கு பஸ் நிலையம் இல்லாத நிலையில் நாளுக்குநாள் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந் நிலையில் திருக்கோவிலூர் பஸ் நிலையத்துக்கு மேற்கு திசையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சிவராஜிக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தை புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தானமாக கொடுப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி, மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக இந்த இடத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன் நேரில் பார்வையிட்டனர்.

இந் நிலையில் மீண்டும் புதன்கிழமை திருக்கோவிலூருக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி இந்த இடத்துக்குச் சென்று வரைபடத்தைக் கொண்டு அதற்கான இடங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் இந்த புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்த வேலைகளைத் தொடங்க உத்தரவிட்டார்.

Last Updated on Thursday, 24 September 2009 06:56
 

பேருந்து நிறுத்தத்துக்கு இடங்கள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி 23.09.2009

பேருந்து நிறுத்தத்துக்கு இடங்கள்: ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர், செப். 22: பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக, துறைமங்கலம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை பேருந்து நிறுத்தத்துக்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் நேரில் பார்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தத்துக்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் துறைமங்கலம் மூன்று சாலை பகுதி, பொறியாளர் குடியிருப்புப் பகுதி, அரசு அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி, பாலக்கரை என்.பி.எஸ். கட்டடம் அருகில், கிருஷ்ணா திரையரங்கம், சங்குப்பேட்டை அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், ஆக்ஸிஸ் வங்கி, தலைமை அரசு மருத்துவமனை, கனரா வங்கி, நகராட்சி அலுவலகம், காமராஜர் வளைவு, நான்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட 10 இடங்களைப் பார்வையிட்டு பயணியர் நிழற்குடை அமைக்க ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் கூறியது:

தேர்வு செய்யப்பட்ட இடங்களில் முதல் கட்டமாக பெரம்பலூர் நகராட்சி மூலம் நிழற்குடை அமைக்கப்படும். போக்குவரத்தை சீரமைக்கும் வகையில், ஷேர் ஆட்டோக்கள் வரன்முறைக்கு உட்படுத்தப்படும். மேலும், நிழற்குடை அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் விரைவில் பேருந்து நிறுத்தம் என்னும் விளம்பரப் பலகைகள் வைக்கப்படும் என்றார் அவர்.

இந்த ஆய்வின் போது, பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமகிருஷ்ணராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வம், ஆய்வாளர் சரவணபவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ம. ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 23 September 2009 06:26
 


Page 52 of 57