Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

ரூ5 கோடியில் கட்டப்பட்டது தாம்பரத்தில் பஸ் நிலையம் திறப்பு

Print PDF

தினகரன்            07.11.2013

ரூ5 கோடியில் கட்டப்பட்டது தாம்பரத்தில் பஸ் நிலையம் திறப்பு

தாம்பரம், : தாம்பரம் நகராட்சி சார்பில் சானடோரியத்தில் ரூ5கோடி மதிப்பில் பஸ் நிலையம் கட்ட கடந்த திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணி பல்வேறு பிரச்னைகளுக்கிடையே கடந்த மாதம் நிறைவுற்றது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இதை திறந்து வைத்தார். புதிய பஸ் நிலையத்தில் திறப்பு விழாவுக்காக ஏற்படுகள் செய்யப்பட்டது.

இதில் கலெக்டர் பாஸ்கரன், மண்டல நகராட்சி நிர்வாக ஆணையர் லட்சுமி, தாம்பரம் நகர மன்ற தலைவர் கரிகாலன், ஆணையர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கு பிறகு அனைத்து மாநகர பஸ்களும் அங்கு நின்று சென்றன. 

புதிய பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பெரம்பாக்கம், போந்தூர், எழிச்சூர், மேட்டுப்பாளையம், வல்லக்கோட்டை, வாலாஜாபாத், வேலூர், ஆரணி, சித்தூர், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கான பஸ்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பஸ்கள் ஏற்கனவே நின்ற இடத்தில் கிழக்கு தாம்பரம் வழியாக செல்லும் பஸ்கள் மாற்றப்படும். இந்த பஸ்கள் நின்ற இடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர்  திடீர் மாற்றம்

புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் முதலில் தாம்பரம் நகராட்சி பஸ் நிலையம் என பெயர் பலகை வைக்கப்படது. பிறகு திடீரென அறிஞர் அண்ணா பஸ் நிலையம் என பெயர் மாற்றப்பட்டது.

 

தாம்பரம் பேருந்து நிலையம் திறப்பு

Print PDF

தினமலர்            07.11.2013

தாம்பரம் பேருந்து நிலையம் திறப்பு

தாம்பரம் : ஐந்து கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, தாம்பரம் பேருந்து நிலையத்தை, காணொலி மூலம், முதல்வர் இன்று திறந்து வைக்கிறார். அதேநேரம், கிழக்கு தாம்பரத்தில், விரைவில் பேருந்து நிலையம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரியுள்ளனர். தாம்பரத்தில் இதுவரை நிரந்தர பேருந்து நிலையம் என்பது இல்லை. அதனால், ஜி.எஸ்.டி., சாலையில், காந்தி சாலை சந்திப்பு முதல் முடிச்சூர் சாலை சந்திப்பு வரை, பல்வேறு போக்குவரத்து கழகங்களின் பேருந்து நிலையங்கள் இயங்கி வருகின்றன.3.78 ஏக்கர் பரப்பளவில்... ரயில் நிலைய நுழைவாயில் எதிரே உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில், சில பேருந்துகளை நிறுத்துவதற்கு மட்டுமே இடவசதி உள்ளது. மற்ற பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.இதனால், 10 ஆண்டுகளுக்கு முன், சானடோரியத்தில் தொழுநோய் மருத்துவமனையை ஒட்டி, சுகாதாரத் துறைக்கு சொந்தமான 3.78 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த இடம் போதுமானதாக இருக்காது என்பதால், அப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, மேற்கு தாம்பரத்தில், ராணுவத்திடம் இருந்த 13 ஏக்கர் இடம் ஒன்று தேர்வு செய்யப்பட்டது. பின்பு, அந்த இடத்தில் நடந்த ஆய்வில், அது தமிழக அரசுக்கு சொந்தமான இடம் தான் என, தெரியவந்தது. இதையடுத்து, அந்த இடத்தை ஒப்படைக்குமாறு, ராணுவத்திடம், தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், 2ம் உலக போருக்கு முன்பிருந்தே, அந்த இடம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால், ஒப்படைக்க முடியாது எனவும் ராணுவம் பதிலளித்தது.

இதையடுத்து, ஏற்கனவே சானடோரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 3.78 ஏக்கர் நிலத்திலேயே பஸ் நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 19 நடைமேடைகள் தொடர்ந்து, 5 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் கட்டும் பணி, கடந்த, 2011ம் ஆண்டு துவங்கியது. இடையில், அருகேயுள்ள தொழுநோய் மருத்துவ மனையை இடிக்க வேண்டும் என்று, எழுந்த பிரச்னை உள்ளிட்ட சில காரணங்களால், பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

அதன்பின், பணிகள் மீண்டும் துவங்கி முடிந்தன. தற்போது தாம்பரத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய பேருந்து நிலையத்தில், சுற்றுச்சுவர், பேருந்துகள் நிற்பதற்கான, 19 நடைமேடைகள், 30 கடைகள், நேரக் காப்பாளர் அறை, பொது கழிப்பிடம், பயணிகள் ஓய்வறை, ஓட்டல் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.கிழக்கு தாம்பரத்தில்?இதுவரை, அண்ணா பேருந்து நிலையத்தில் நின்று சென்ற, 80 வழித்தட பேருந்துகள் அனைத்தும், புதிய பேருந்து நிலையத்தில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மற்ற பேருந்துகளும் இங்கு வந்து செல்லும்.கிழக்கு தாம்பரத்தில் இருந்து, வேளச்சேரி சாலை வழியாக, பிராட்வே, அடையாறு, திருவான்மியூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அங்கு பேருந்து நிலையம் இல்லாததால், பேருந்துகள் அனைத்தும், வேளச்சேரி சாலையிலேயே வரிசையாக நிறுத்தப்படுகின்றன.இதனால், நெரிசல் நேரங்களில் கடும் சிக்கல் ஏற்படுகிறது. வேளச்சேரி சாலையை ஒட்டியுள்ள ரயில்வே லைனில் பல ஏக்கர் நிலம் பயன்பாடின்றி உள்ளது.அதில், சில ஏக்கர் நிலத்தை ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பெற்று, பேருந்து நிலையம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேயர் விஜிலா சத்தியானந்த் தொடங்கி வைத்தார் நெல்லை போக்குவரத்து கோட்டத்துக்கு 26 புதிய பஸ்கள்

Print PDF

தினத்தந்தி           24.10.2013

மேயர் விஜிலா சத்தியானந்த் தொடங்கி வைத்தார் நெல்லை போக்குவரத்து கோட்டத்துக்கு 26 புதிய பஸ்கள்

நெல்லை அரசு போக்குவரத்து கோட்டத்துக்கு 26 புதிய பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. அந்த பஸ்களை மேயர் விஜிலா சத்தியானந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

புதிய பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 610 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த 610 புதிய பஸ்களின் சேவையை சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நெல்லை அரசு போக்குவரத்து கழகத்துக்கு 26 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இந்த பஸ்களின் தொடக்க விழா நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று நடந்தது.

மேயர் தொடங்கி வைத்தார்

நெல்லை மேயர் விஜிலா சத்தியானந்த் கொடி அசைத்து, 26 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். அப்போது ஒரு பஸ்சில் ஏறி டிரைவர் இருக்கையில் அமர்ந்து, அந்த பஸ்சை மேயர் விஜிலா சத்தியானந்த் சற்று தூரம் ஓட்டினார்.

விழாவில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துகருப்பன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், மாநகராட்சி துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், மண்டல தலைவர்கள் எம்.சி.ராஜன், தச்சை மாதவன், மோகன், ஹைதர்அலி, யூனியன் தலைவர் கல்லூர் வேலாயுதம், கூட்டுறவு ஒன்றிய மாநில துணை தலைவர் தச்சை கணேசராஜா, சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஜெயலலிதா பேரவை செயலாளர் சுதா பரமசிவன், முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர்முத்தையா, போக்குவரத்துகழக மண்டல மேலாளர்கள் டைட்டஸ், காளிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய பஸ்கள் நெல்லையில் இருந்து தேனி, மதுரை, சேலம், கோவை, திருச்செந்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டன.

 


Page 5 of 57