Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

சென்னை நகரில் 201 அம்மா உணவகங்களை கண்காணிக்க நவீன கேமரா: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

மாலை மலர்         22.11.2013

சென்னை நகரில் 201 அம்மா உணவகங்களை கண்காணிக்க நவீன கேமரா: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
 
சென்னை நகரில் 201 அம்மா உணவகங்களை கண்காணிக்க நவீன கேமரா: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, நவ. 22 - சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது.

துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு:–

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-வது மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ– மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தர வரிசையில் இடம் பெற்றால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங், கலை– அறிவியல் பட்டப்படிப்புகள், சட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கிறது.

தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு இனி ரூ.45 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். சட்டக்கல்லூரி, நர்சிங் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். எம்.எஸ்.சி. உள்ளிட்ட 5 ஆண்டு படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சி பள்ளி, சிறப்பு வகுப்புகளில் படிக்கும் 10–வது மற்றும் பிளஸ் 2 மாணவ– மாணவிகளுக்கு சுண்டல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பகுதி பள்ளி மாணவ– மாணவிகளுக்கும் சுண்டல் வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சி பகுதியில் 201 அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றின் செயல்பாட்டை கண்காணிக்க மொத்தம் 600 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

ரூ.1 கோடியே 33 லட்சம் செலவில் இவை அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் மாநகராட்சியில் இருந்தவாரே உணவகத்தை கண்காணிக்க முடியும்.

சென்னை மாநகராட்சி பகுதியில் விளம்பர பலகைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர பலகைகளை கண்காணிக்க போதிய ஊழியர்கள் இல்லை.

எனவே விளம்பர பலகை வைக்கவும், அதை கண்காணிக்கவும் கூடிய அதிகாரம் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வழங்கும் வகையில், உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்படுகிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 195 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் வசதிக்காக காங்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கியுள்ள முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.

இசை மற்றும் கலைக்கு பொதுவான பாடத்திட்டம், இசை கல்லூரிகளுக்கு 13 துறைகள் ஏற்படுத்தி பல்கலை கழகம் அமைத்துள்ள முதல்– அமைச்சருக்கு வாழ்த்து.

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழை– எளிய மக்களுக்கு கொசுவலை, நொச்சி செடி, பப்பாளி மரக்கன்றுகள் வழங்கி ஏழை மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கான போட்டி தேர்வு பயிற்சி யையும் தொடங்கி வைத்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. ஆகிய சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

 

இணையதளம் மூலமாக தொழில் வரி செலுத்தும் திட்டம் அறிமுகம்

Print PDF

தினமணி          21.11.2013

இணையதளம் மூலமாக தொழில் வரி செலுத்தும் திட்டம் அறிமுகம்

கோவை மாநகராட்சி சார்பில் இணையதளம் வழியாக தொழில் வரி மற்றும் தொழில் உரிமக் கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.ccmc.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.  அவ்வாறு பதிவு செய்யும் பொது மக்களுக்கு பயனீட்டாளர் பெயர் மற்றும் ரகசியக் குறியீடு ஆகியவை குறுஞ்செய்தியாக வழங்கப்படும். இதில், ஏற்கெனவே வரி செலுத்துபவர்கள் தங்களது பழைய வரி விதிப்பு எண் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

 தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் விவரங்களை தனித்தனியாகப் பதிவு செய்வதன் மூலமாக தொழில் வரி செலுத்த முடியும். இதில், தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் அடையாள எண்ணுடன், மொத்த வருமானத்துக்கு ஏற்றாற் போல் தொழில் வரியைக் கணக்கிட்டுச் செலுத்த வேண்டிய தொகை கணினி வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

 கடன் அட்டைகள் மூலமாகவும் தொழில் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக முந்தைய ஆண்டின் நிலுவைத் தொகையையும் செலுத்த முடியும். இதே போல, தொழில் உரிமக் கட்டணத்தையும் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மாநகராட்சியில் அறிமுகம் ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி

Print PDF

தினகரன்          20.11.2013

மாநகராட்சியில் அறிமுகம் ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி

கோவை, : கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரியை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி துவக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் தொழில்வரி செலுத்துவோர் 4,299 பேர் உள்ளனர். இவர்கள், கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 82 லட்சம் தொழில் வரி செலுத்தியுள்ளனர். இவர்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று தொழில் வரி செலுத்துவதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி துவக்க விழா மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் லதா தலைமை தாங்கினார். மேயர் செ.ம.வேலுசாமி ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி மற்றும் அபாயகரமான கடைகள் தொழில் உரிமம் தொகை (டி அண்ட் ஓ) செலுத்தும் வசதியை துவக்கிவைத்தார். இதற்காக,   ஷ்ஷ்ஷ்.நீநீனீநீ.ரீஷீஸ்.வீஸீ   என்னும் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை பதிவுசெய்து, தொழில் வரி மற்றும் உரிமம் கட்டணம் செலுத்தலாம். பயனாளர்கள் தங்களது முந்தைய ஆண்டின் செலுத்தாத நிலுவை தொகையையும் இதன்மூலம் செலுத்த முடியும்.

நிகழ்ச்சியில், துணை கமிஷனர் சிவராசு, மண்டல தலைவர் ராஜ்குமார், உதவி ஆணையாளர்கள் அமுல்ராஜ், சுந்தரராஜ், செந்தில்குமார், பிரபாகரன், நகர் நல அலுவலர் அருணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 4 of 41