Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

நகர்ப்புறம், பேரூராட்சி மின்நுகர்வோர்களுக்காக தானியங்கி மின்தடை குறை கேட்கும் மையம்

Print PDF

தினமணி            17.01.2014

நகர்ப்புறம், பேரூராட்சி மின்நுகர்வோர்களுக்காக தானியங்கி மின்தடை குறை கேட்கும் மையம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புறம், பேரூராட்சிப் பகுதிகளில் தானியங்கி மின்தடை குறை கேட்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருநெல்வேலி மேற்பார்வைப் பொறியாளர் ஏ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி நகர்ப்புறக் கோட்டம், சமாதானபுரத்தில் மின்தடை குறை தீர்க்கும் மையம் இயங்கி வருகிறது. இம் மையத்தில் மின்தடை சம்பந்தமாக ஏற்படும் குறைகளை 0462-2562900 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தெரியப்படுத்தலாம். மின்தடை சம்பந்தப்பட்ட குறைகளைப் பதிவு செய்யும்போது மின் இணைப்பு எண்ணையும் தெரியப்படுத்துவது அவசியம். இதற்காக மின்வாரிய அலுவலகத்தை நேரில் அணுகத் தேவையில்லை. பதிவு செய்யப்பட்ட மின்தடை தொடர்பான குறைகள் உடனடியாக அந்தந்த பகுதி கம்பியாளரிடம் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

திருநெல்வேலி நகர்ப்புறப் பகுதியில் உள்ள திருநெல்வேலி சந்திப்பு, பெருமாள்புரம், மகாராஜநகர், மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், தச்சநல்லூர், பேட்டை, பழையபேட்டை, சமாதானபுரம், வி.எம். சத்திரம், சாந்திநகர், ரெட்டியார்பட்டி, வண்ணார்பேட்டை பகுதி மின்நுகர்வோர் இந்த மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

இதுதவிர பேரூராட்சிப் பகுதிகளில் ஆலங்குளம், தாழையூத்து, நான்குனேரி, கீழப்பாவூர், திருவேங்கடம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், முக்கூடல், வள்ளியூர், பணகுடி, திசையன்விளை, ஏர்வாடி, களக்காடு, திருக்குறுங்குடி, சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர், சுந்தரபாண்டியபுரம், வடகரை ஆகிய பிரிவு அலுவலகங்களைச் சேர்ந்த மின்நுகர்வோரும் இந்த குறைதீர் மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

பிற பகுதியினர், அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கணினி மயமாகிறது மாநகராட்சி, நகராட்சி வரவு-செலவு கணக்குகள்

Print PDF

தினமணி               06.01.2014

கணினி மயமாகிறது மாநகராட்சி, நகராட்சி வரவு-செலவு கணக்குகள்

மாநகராட்சிகள், நகராட்சிகளின் வரவு, செலவு கணக்குகளை கணினி மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

 தமிழகத்திலுள்ள, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் வரவு, செலவு கணக்குகள் முறையாக கையாளப்படுவதில்லை என்ற புகார்கள் உள்ளது. அவ்வப்போது, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிகளைக் கூட முறையாக செலவிடாமல், பெரும்பாலான அமைப்புகள் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த அமைப்புகளில் வரிவருவாய் எவ்வளவு, செலவு எவ்வளவு, மத்திய, மாநில அரசுகளில் திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களில் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்களுக்கு விவரங்களும் தெளிவற்ற நிலையில் வைக்கப்படுவதாகவும், பெரும்பாலான திட்டப்பணிகள் மீதான தணிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது.

  சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் முறையாக வரவு, செலவு திட்ட அறிக்கைகளை தயாரித்து மாமன்றத்தில் தாக்கல் செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதற்கான நடைமுறைகள் ஜன. 15, 16இல் தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது.

அவ்வப்போது, சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மத்திய தணிக்கை அலுவலகத்திலுள்ள அலுவலர்கள் மாவட்ட வாரியாகச் சென்று வரவு, செலவுகளை தணிக்கை செய்து வருகின்றனர். இதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்து வருகின்றன. மேலும், கணக்குகளின் ஆவணங்கள் பராமரிப்பிலும் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முறையாக நிதிகள் செலவிடப்படுவதை உறுதிசெய்யும் வகையிலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகள் கணினி மூலம் சென்னை நகராட்சி நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலகங்களுடன் இணைக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக, 10 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கணக்குகள் கணினி மயமாக்கப்படவுள்ளன. இதற்கான பிரத்யேக கணினி மென்பொருள்(சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  மேலும் அவர் கூறியது: இந்த மென்பொருளை கையாள்வது குறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் கோவை சாய்பாபா காலனியிலுள்ள தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிலையத்தில் பகுதி பகுதியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இதில், முக்கியமாக, ஆண்டுதோறும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வரவு செலவு திட்டஅறிக்கை தயாரித்து செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்குகளை கணினியில் முறையாக பராமரிக்கவும்,   இதற்கான மென்பொருள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

  ஜனவரி 15ஆம் தேதி மாநகராட்சிகளிலும், ஜனவரி 16ஆம் தேதி முதல் நகராட்சிகளிலும் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.

 

மாநகராட்சி தொழில்வரி, தொழில் உரிம கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம்

Print PDF

தினமணி             29.11.2013

மாநகராட்சி தொழில்வரி, தொழில் உரிம கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம்

தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கட்டடங்களுக்குமான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி அமலில் உள்ளது.

பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி உரிய காலத்தில் நிலுவையின்றி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணங்களைச் செலுத்தலாம்.

நகரில் உள்ள பல்வேறு கட்டடங்களின் உரிமையாளர்கள் சுயமதிப்பீட்டுப் படிவம் சமர்ப்பிக்கப்படாமலும், கட்டட உபயோகத்திற்கு ஏற்றவாறு சொத்துவரி நிர்ணயம் செய்யாமலும் இருந்து வருகின்றனர்.

கள ஆய்வில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் உபயோக மாற்றப்பட்டுள்ள கட்டடங்கள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக குடிநீர் இணைப்புத் துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, நிலுவைத் தொகையினை உடனடியாகச் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையைத் தவிர்க்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.

 


Page 3 of 41