Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

மாநகராட்சி வரி வசூலர்களுக்கு "டேப்லெட்' கணினிகள்

Print PDF

தினமணி             12.02.2014

மாநகராட்சி வரி வசூலர்களுக்கு "டேப்லெட்' கணினிகள்

கோவை மாநகராட்சியில் வரி வசூலர்களுக்கு டேப்லெட் கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி மைய அலுவலகக் கூட்ட அரங்கில் மேயர் செ.ம.வேலுசாமி டேப்லெட் கணினிகளை வழங்கினார். ஆணையர் க.லதா முன்னிலை வகித்தார். இவற்றை வழங்கி மேயர் செ.ம. வேலுசாமி பேசியது:

÷டேப்லெட் கணினி வழங்கப்பட்டதன்மூலம் விரைவாக மக்களுக்கு சேவை வழங்கப்படும். சொத்துவரி விதிக்கத் தேவையான விவரங்கள் இதில் பதிவு செய்யப்பட்டு, சொத்துவரி கணக்கீடு கணினி மூலம் விரைவாக மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சிப் பகுதியில் விடுபட்ட கட்டடங்கள் மற்றும் உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டடங்களை புகைப்படம் எடுத்து கணினியில் பதிவு செய்து உரிய வரிவிதிப்புக் கணக்கீடு மேற்கொள்ளப்படும்.

÷டேப்லெட் கணினியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்களைப் பதிவு செய்யத் தேவையான மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. 60 வரி வசூலர்களுக்கும் 5 உதவி வருவாய் அலுவலர்களுக்கும் டேப்லெட் கணினி வழங்கப்படும்.

மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் 2,944 மாதாந்திர வாடகைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை வாடகை உரிமம் பெற்றுள்ளவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் வாடகை பாக்கி செலுத்த வேண்டிய விவரங்களை கைபேசி வழியாக தெரிந்துகொள்ளும் வசதியும் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வணிக வளாகக் கடைகளுக்கும் புதிய வாடகை புத்தகம் மற்றும் அந்தந்தக் கடைகளுக்கான விவரங்கள் அடங்கிய உரிம அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் மூலம் கடை வாடகை உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனுக்குடன் வாடகை நிலுவைகளை ரொக்கமாகவோ, வரைவோலையாகவோ அந்தந்த மண்டலங்களில் செலுத்தலாம் என்று மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.

உதவி ஆணையர்கள் சுந்தரராஜ், செந்தில்குமார், சுப்ரமணியன், சரவணன், அமல்ராஜ், மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

பொதுமக்களின் மனுக்கள் மீது மாநகராட்சி வருவாய்த்துறை எடுக்கும் நடவடிக்கை

Print PDF

தினகரன்              07.02.2014

பொதுமக்களின் மனுக்கள் மீது மாநகராட்சி வருவாய்த்துறை எடுக்கும் நடவடிக்கை

சென்னை, : மாநகராட்சி வருவாய்த்துறை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு கணினி வழி ஒப்புகை சீட்டு வழங்கிடவும், பெறப்படும் மனுக்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டும் தனியே மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளின்படி, புதிய கட்டிடத்திற்கான சொத்துவரி மதிப்பீடு, கூடுதல் கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் சொத்துவரி விதிப்பு, சிறப்பு வகை கட்டிடங்களுக்கான சொத்துவரி மதிப்பீடு, உரிமை பாத்தியம் இல்லாத நிலங்களின் மீது கட்டப்பட்ட கட்டிடத்திற்கான சொத்துவரி விதிப்பு, பெயர் மாற்றம் செய்தல், சொத்துவரி விதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து ஆட்சேபணை மனு, ஏற்கனவே விதிக்கப்பட்ட சொத்துவரி மதிப்பீடு ஆணையில் பிழை திருத்தங்கள் மேற்கொள்ளுதல், விண்ணப்பதாரரின் பெயர் விவரம் மற்றும் விண்ணப்பதாரரின் கோரிக்கை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் தொடர்பு மையத்தின் உதவியாளரால் கணினியில் பதிவு செய்யப்பட்டு, கணினியால் தானாகவே வரிசை எண் இடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு உடனே ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.

மேலும், விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒப்புகை எண், விவரம் மனுதாரரின் கைபேசிக்கு குறுந்தகவல் மூலமும் உடன் அனுப்பப்படும். ஒவ்வொரு நாளின் முடிவில் பொதுமக்கள் தொடர்பு மையத்தின் மூலம் பெறப்படும் அனைத்து மனுக்களும் மண்டல அலுவலரின் ஒப்புதலுடன் வருவாய்த்துறை பிரிவின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட கள ஆய்வாளரின் அறிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, குறிப்புரைகள் பெறப்பட்டு, கணினி வாயிலாகவே பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பதாரருக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்ட பின்னர், மனுவின் விவரமானது நிலுவையிலிருந்து தானாகவே சுழிக்கப்படும். ஒவ்வொரு நாளும் எத்தனை மனுக்கள், என்னென்ன கோரிக்கைகளுக்காக பெறப்பட்டன என்பதை உதவி வருவாய் அலுவலர், மண்டல அலுவலர், வட்டார இணை/துணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் முதன்மை செயலர்/ஆணையர் ஆகியோர் எளிதில் கணினி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

மண்டல வாரியாக பெறப்பட்ட மனுக்கள் எத்தனை, நடவடிக்கை எடுக்கப்பட்ட மனுக்கள் எத்தனை என்பன போன்றவற்றை கண்காணிக்கலாம். வார்டு வாரியாகவும் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை, நடவடிக்கை எடுக்கப்பட்ட மனுக்கள் எத்தனை என்பதையும் அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு வார்டுகளிலும் எத்தனை மனுக்கள் பெறப்பட்டன, எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டன, நிலுவையில் உள்ள மனுக்கள் விவரத்தையும் எளிதில் அறிந்து உடனுக்குடன் ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்கலாம். இத்திட்டம் முதலில் வருவாய்த்துறையில் பெறப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலிக்க தொடங்கப்படுகிறது.

பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சியின் அனைத்து துறை பிரிவுகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய வசதிகளை கொண்ட மென்பொருள் பயன்பாட்டினை மேயர் சைதை துரைசாமி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கணினி மூலம் அறியும் வசதி மேயர் தொடங்கி வைத்தார்.

 

"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Print PDF

தினமலர்             01.02.2014

"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், பொதுமக்களின் வசதிக்காக,"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 3ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை செலுத்துவதற்காகவும்; புகார்களை தெரிவிக்கவும் பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். பொதுமக்களின் வசதிக்காக, இருப்பிடத்திலேயே தகவலை அறிந்து கொள்ளும் வகையில்,"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வீண் அலைச்சல் தவிர்க்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இதன் துவக்க விழா நேற்று நகராட்சி வளாகத்தில் நடந்தது.

நகராட்சித்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். கமிஷனர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொதுமக்களின் வசதிக்காக "குறுந்தகவல் சேவை திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பொள்ளாச்சி நகராட்சியின் சேவைகளை பெற மொபைலிலிருந்து, "GRV ' என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு, தங்கள் கோரிக்கைகளை பதிவு செய்து, 98652 55510 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின், பதிவு எண்ணிட்டு ஒப்புகை குறுந்தகவல் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தங்கள் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் மீண்டும் குறுந்தகவல் மூலம் தங்களுக்கு தெரிவிக்கப்படும்.வரியினங்களின் நிலுவைத்தொகை விவரம் குறுந்தகவல் அனுப்பினால், வரி நிலுவை உடனடியாக தங்களுக்கு கிடைக்கும்.சொத்து வரி மற்றும் காலியிட வரிக்கு,HT (Space) (Assessment No), குத்தகை இனத்திற்கு NT(Space) (Assessment No)என்றும், WT(Space) (Assessment No) என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

சேவைகளை குறுந்தகவல் மூலம் மட்டுமே பெற முடியும். இந்த எண்ணில் பேசுவதற்கான வசதியில்லை. இதுதவிர, தெருவிளக்கு கோரிக்கை, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஜிஆர்வி என டைப் செய்து சம்பந்தப்பட்ட கோரிக்கை மற்றும் தெரு பெயர் அல்லது தெருவிளக்கு எண்ணை அனுப்பலாம்.இந்தத்திட்டம் வரும் 3ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏப்., 1ம்தேதி முதல் கட்டண தொகை குறித்த விவரம் அச்சிட்ட தாளில் வழங்கப்படாமல், குறுந்தகவல் மூலமே வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

 


Page 2 of 41