Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

மாநகராட்சி சொத்துவரி விதிப்பு கள ஆய்வில் நவீனமயம் தாமதம் தவிர்க்க அலுவலர்களுக்கு "டேப்லெட்'

Print PDF

தினமலர்         18.11.2013 

மாநகராட்சி சொத்துவரி விதிப்பு கள ஆய்வில் நவீனமயம் தாமதம் தவிர்க்க அலுவலர்களுக்கு "டேப்லெட்'

கோவை :கோவை மாநகராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு, சொத்து வரி விதிக்க, காலவிரயம் ஏற்படுவதை தவிர்க்க, வரிவசூலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கு "டேப்லெட்' வழங்கவும், பணிகளை கம்ப்யூட்டர் மயமாக்கி வேகப் படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சொத்து வரி விதிக்க வேண்டிய கட்டடங்களை, அளவீடு செய்யும் வரி வசூலர்கள், அலுவலகத்துக்கு வந்து கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றனர். அதன்பின், உதவி வருவாய் அலுவலர் ஆய்வு செய்து, வரி விதிப்பு செய்கிறார். இதனால், காலவிரயமும் ஏற்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து புகார்கள் வருவதால், வரி விதிப்பு முறையை நவீனப்படுத்தவும், ஆன்-லைனில் பதிவு செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக, வரி வசூலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கு கையடக்க (டேப்லெட்) கம்ப்யூட்டர் வழங்க முடிவு செய்யப்பட்டு, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரி வசூலர்களுக்கு வழங்கும் "டேப்லெட்' மூலம் கட்டடத்தின் நான்கு பக்கத்தில் இருந்தும், கட்டடத்தின் உள்பக்க அளவுகள், தளங்களின் எண்ணிக்கையை போட்டோ எடுக்க வேண்டும். போட்டோக்களையும், கட்டட அளவுகளையும், "டேப்லெட்'ல் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். உதவி வருவாய் அலுவலர்கள் உடனுக்குடன் பைலை ஆய்வு செய்து, உத்தரவுகளை கம்ப்யூட்டர் வாயிலாக வழங்குவார்.

அந்த ஆவணங்களை கம்ப்யூட்டரில் "டவுன்லோடு' செய்து பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பிரத்யோக "சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டு, தனியார் நிறுவனத்தின் உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் வரி வசூலர்களால் புதிய வரிவிதிப்பு செய்யப்பட வேண்டிய கட்டடங்கள், கூடுதலாக கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள், உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டடங்கள் அளவீடு செய்து, கோவை மாநகராட்சி சட்டம் - 1981, பிரிவு 126ன்படி வரிவிதிப்பு செய்யப்படுகிறது.

சொத்து வரி விதிப்பு செய்ய, தற்போதைய நடைமுறையால் கால விரயம் மற்றும் வரி வசூலர்களின் பணிச்சுமை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், நவீன முறையில் "டேப்லெட்' கம்ப்யூட்டர் கருவியை உபயோகித்து, மிக எளிய முறையில் உடனுக்குடன் கட்டடங்களை படம் எடுத்து, கட்டடத்தின் அளவீடுகளை கள ஆய்வு செய்து, அளவீடு செய்யும் நேரத்திலே, இந்த "டேப்லெட்' கருவியில் பதிவு செய்யப்படும்.

இதற்காக, கோவை மாநகராட்சியில் வரி வசூலர், உதவி வருவாய் அலுவலர்கள் 60 பேருக்கு, ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் "டேப்லெட்' வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை கையாள வரி வசூலர், உதவி வருவாய் அலுவலர்களுக்கு "சாப்ட்வேர்' பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குப்பை அகற்றும் பணிகள்: செல்போன் மூலம் கண்காணிப்பு

Print PDF

தினமணி            06.11.2013

குப்பை அகற்றும் பணிகள்:  செல்போன் மூலம் கண்காணிப்பு

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பை அகற்றும் பணிகளைக் கண்காணிக்க துப்புரவு ஆய்வாளர்களுக்கு ஜி.பி.எஸ்.தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது நவீன தொழில்நுட்ப முறையில் குப்பை அகற்றும் பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் குப்பைத் தொட்டிகள் அமைந்துள்ள இடம், தொட்டியின் எண், அதன் புகைப்படம், குப்பை அகற்றுவதற்குரிய நேரம் உள்ளிட்ட தகவல்கள் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப முறையில் நவீன செல்போன்களில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த செல்போன்களைக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க முடியும். மேலும் அந்த செல்போன்களில் இருந்து குப்பை அகற்றும் பணிகள் குறித்த தகவல்களை மாநகராட்சி வலைதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யலாம்.

இதனால் மாநகராட்சியின் தலைமை இடத்திலிருந்தே நகரில் உள்ள குப்பைத் தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணிகளைக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்துக்குள் குப்பைகளை அகற்றாத துப்புரவுப் பணியாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியும்.

இதன் முதல்கட்டமாக, துப்புரவு ஆய்வாளர்களுக்கு ஜி.பி.எஸ்.தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி செல்போன்களை வழங்கினார். மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துணை மேயர் பெஞ்சமின் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

தில்லி மாநகராட்சி இணையதளம்: மீண்டும் செயல்பட தொடங்கியது

Print PDF

தினமணி             02.11.2013

தில்லி மாநகராட்சி இணையதளம்: மீண்டும் செயல்பட தொடங்கியது

கடந்த சில நாள்களாக செயல்படாமல் இருந்த தில்லி மாநகராட்சிகளின் இணையதளம் (www.mcdonline.gov.in) தில்லி உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து மீண்டும்  செயல்பட தொடங்கியது.

இணையதளத்தைப் பராமரித்து வரும் டெக் மஹிந்திரா நிறுவனத்துக்கு மாநகராட்சிகள் அளிக்க வேண்டிய நிலுவை காரணமாக இணையதள செயல்பாட்டை அந்நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது.

இதை தொடர்ந்து மாநகராட்சி சேவைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்த விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று தெற்கு தில்லி மாநகராட்சி கோரிக்கை வைத்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்ற தில்லி உயர் நீதிமன்றம் இணையதள செயல்பாட்டை மீண்டும் தொடங்குவதற்கு டெக் மகேந்திரா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன், பாக்கி நிலுவை பிரச்னையில் இணக்கமான முடிவை எட்ட அறிவுறுத்தியது.

இந்தத் தகவல் தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 5 of 41