Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

தனியார் பள்ளிக்கு இணையான கல்வி மாநகராட்சி கல்வி அலுவலர் அறிவுரை

Print PDF
தினமலர்        12.05.2013

தனியார் பள்ளிக்கு இணையான கல்வி மாநகராட்சி கல்வி அலுவலர் அறிவுரை


கோவை:"மாநகராட்சி பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பிக்க வேண்டும்' என, துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கல்வி அலுவலர் வசந்தா தலைமையில் நடந்தது. துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 41 பேரும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 15 பேரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கல்வி அலுவலர் வசந்தா பேசியதாவது:கோவை மாநகராட்சியில் மொத்தம் 83 பள்ளிகள் உள்ளன. அதில், 16 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநகராட்சி பள்ளிகள் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒப்பணக்கார வீதி, வெங்கிட்டாபுரம், ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பலத்த போட்டி நிலவுகிறது.

வரும் ஆண்டுகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் மற்றும் மதிப்பெண் அதிகம் பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதனால், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு துவக்கப்பள்ளியில் இருந்து தரமான கல்வி வழங்க வேண்டும். அரசு புத்தகங்களை அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் வீடு தேடிச்சென்று பள்ளி சேர்க்கையை துவங்க வேண்டும். இடைநிற்றலை தவிர்க்க வேண்டும்.

பள்ளிகளில் குடிநீர், கழிப்பிட வசதிகளை உறுதி படுத்த வேண்டும். போதுமான அடிப்படை வசதிகள் இல்லாவிட்டால், மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கி, சிறப்பு பயிற்சி கொடுக்க வேண்டும். மாதாந்திர தேர்வு நடத்தி, தேர்ச்சி நிலையை பெற்றோருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள், பெற்றோர்களுடன் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி போதிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபற்றி பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால்தான், மாநகராட்சி பள்ளிகளை மக்கள் தேடி வருவார்கள்.இவ்வாறு, வசந்தா அறிவுரை கூறினார்.
 

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: மதுரை மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி விகிதம் கூடியது சென்னை, கோவை பள்ளிகளை விட அதிகம்

Print PDF
தினத்தந்தி                   11.05.2013

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: மதுரை மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி விகிதம் கூடியது சென்னை, கோவை பள்ளிகளை விட அதிகம்


பிளஸ்-2 தேர்வில் மதுரை மாநகராட்சி பள்ளிகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளை பின்னுக்கு இந்த சாதனை மதுரை மாநகராட்சி படைத்து உள்ளது.

93.14 சதவீதம் தேர்ச்சி

தமிழகத்தில் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் மதுரை மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. அதாவது சென்னை மாநகராட்சி பள்ளிகள் 85 சதவீதமும், கோவை மாநகராட்சி 90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் மதுரை மாநகராட்சி பள்ளிகள் 93.14 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்து உள்ளது.

அதுமட்டுமின்றி வரலாற்றிலேயே முதன் முறையாக மதுரை மாநகராட்சி சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

8 பள்ளிகள்


மேலும் கணித பாடத்தில் ஒரு மாணவரும், வணிகவியலில் 2 மாணவர்களும், கணக்கு பதிவியலில் 2 மாணவர்களும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று உள்ளது. மொத்தம் 14 மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 8 பள்ளிகள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 11 பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது. அதே போல் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தில் இந்தாண்டு 1 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல் 90 மாணவர்கள் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று உள்ளனர்.

பாராட்டு

சாதனை படைத்த மாணவர்களையும், பள்ளி தலைமை ஆசிரியர்களையும் மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் கமிஷனர் நந்தகோபால் ஆகியோர் பாராட்டினர். அதுமட்டுமின்றி மேயர் தனது சொந்த நிதி வழங்கி பாராட்டினார்.
 

மாநகராட்சியில் சதமடித்த சேதுபதி பாண்டித்துரை பள்ளி

Print PDF
தினமணி         10.05.2013

மாநகராட்சியில் சதமடித்த  சேதுபதி பாண்டித்துரை பள்ளி


மதுரை மாநகராட்சி பள்ளிகளில், சேதுபதி பாண்டித்துரை பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதன் மூலம் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மதுரை மாநகராட்சியிலுள்ள 14 மேல்நிலைப் பள்ளிகளில் 574 மாணவர்களும், 1,909 மாணவிகளும், ஆக மொத்தம் 2,483 பேர் தேர்வு எழுதினர். இதில், 358 மாணவர்களும், 1,954 மாணவியரும், ஆக மொத்தம் 2,312 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.11.

சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 41 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியுடன் மாநகராட்சி அளவில் முதலிடம் பிடித்துள்ளது. திரு வி.க. மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 246 பேரில் 244 பேரும் (தேர்ச்சி விகிதம் 99.19) தேர்ச்சி பெற்றதன் மூலம் இரண்டாவது இடத்தையும், பொன்முடியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 141 பேரில் 139 பேரும் (தேர்ச்சி விகிதம் 98.58) தேர்ச்சி பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

மாசாத்தியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி 98.44 தேர்ச்சி விகிதமும், கம்பர் இருபாலர் மேல்நிலைப் பள்ளி 98.31 தேர்ச்சி விகிதமும், வெள்ளிவீதியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி 96.77 தேர்ச்சி விகிதமும், காக்கைபாடினியார் மேல்நிலைப் பள்ளி 93.38 தேர்ச்சி விகிதமும், ஈவெரா நாகம்மையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி 93.10 தேர்ச்சி விகிதமும், பாரதிதாசனார் மேல்நிலைப் பள்ளி 90.57 தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ளன.

இதில், அவ்வை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி. மீனலோசினி 1,158 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடத்தையும், வெள்ளிவீதியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். ஜோதி 1,147 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், இதே பள்ளி மாணவி எஸ். ஜெயலட்சுமி 1,122 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
 


Page 15 of 111