Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிய கனரா வங்கி

Print PDF
தினமணி          24.05.2013

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிய கனரா வங்கி


கோவையில் உள்ள 16 மாநகராட்சிப் பள்ளிகளிலும் முதல் 20 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியரின் உயர்கல்விக்காக கனரா வங்கி வியாழக்கிழமை கல்விக்கடன் ஆணையை வழங்கியது.

ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கல்விக்கடன் ஆணைகளை வழங்கிய மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:

கோவை மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த 318 மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலுவதற்கு மாவட்ட நிர்வாகமும் மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து பள்ளிக்கு 20 பேர் வீதம் முன்னோடி வங்கியே தேர்வு செய்து கல்விக் கடன் ஆணை வழங்குகிறது.

பெற்றோரின் கடமையை நிறைவேற்றும் வகையிலும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் நோக்கம் நிறைவேறும் வகையிலும், அவர்களுக்கு கல்வி அடித்தளம் அமைத்துக் கொடுப்பதில் மாநகராட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாணவர்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

கல்வியறிவே சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வை நீக்கும். எனவே மாணவர்கள் சிறந்த அறிவாற்றலை வளர்த்துக்கொண்டு நல்ல நிலையை குடும்பத்திற்கும், நாட்டிற்கும் உருவாக்க வேண்டும் என்றார் மேயர் செ.ம. வேலுசாமி.

மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன், மாநகராட்சி ஆணையர் க.லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிளஸ் 2 தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளில் முதலிடம் பெற்ற ஆர்.இந்துமதிக்கு ரூ. 10 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற ஜே.மோகனாம்பாளுக்கு ரூ. 7,500, மூன்றாமிடம் பெற்ற எஸ்.சூர்யா, எஸ்.வெங்கடேஷ் ஆகியோருக்கு தலா ரூ. 5,000 வீதம் ரொக்கப் பரிசுகள் கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினர் சேலஞ்சர் துரை, துணை மேயர் லீலாவதி உண்ணி, மண்டலத் தலைவர்கள் கே.ஏ.ஆதிநாராயணன், கே.ஆர்.ஜெயராம், பி.ராஜ்குமார், பி சாவித்திரி, சுகாதாரக்குழுத் தலைவர் எஸ்.தாமரைச் செல்வி, கல்விக்குழுத் தலைவர் ஆர்.சாந்தாமணி, நியமனக் குழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கே.ரங்கராஜ், எஸ்.மணிமேகலை ஆகியோர் பங்கேற்றனர்.
 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

Print PDF
தினமணி         22.05.2013

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை


மாநகராட்சி பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கிராஸ்கட் சாலை வணிகர் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

கோவை கிராஸ்கட் சாலை வணிகர் சங்கத்தின் தலைவர் செந்தில்ரத்னா தலைமையில், செயலாளர் ஜோதிமணி முன்னிலையில் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா நடைபெற்றது.

வடகோவை மாநகராட்சி பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த விக்னேஷ், பிரியங்கா, செய்யது முகமது ஆகிய மாணவர்களுக்கு விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி கல்வி உதவித் தொகையை  வழங்கினார்.

கிராஸ்கட் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் நடைபெறுவது போல் கிராஸ்கட் சாலை வணிகர்களை ஒருங்கிணைந்து ஷாப்பிங் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

விழாவையொட்டி நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தேர்வு முடிவுகள் விடுபட்ட மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியருக்கு மே 27-ல் மதிப்பெண் பட்டியல்: கல்வி அலுவலர் தகவல்

Print PDF
தினமணி        15.05.2013

தேர்வு முடிவுகள் விடுபட்ட மதுரை மாநகராட்சி  பள்ளி மாணவியருக்கு மே 27-ல் மதிப்பெண் பட்டியல்:  கல்வி அலுவலர் தகவல்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விடுபட்ட மதுரை மாநகராட்சி பொன்முடியார் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 54 பேருக்கும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மே 27-ம் தேதி மதிப்பெண் பட்டியல் முறையாக வழங்கப்படும் என மாநகராட்சி கல்வி அலுவலர் மதியழகராஜ் தெரிவித்தார்.

 கடந்த மே 9 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

 மதுரை மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளின் தேர்வு முடிவுகளையும், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் பழனிச்சாமி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி ஆகியோர் வெளியிட்டனர்.

 இதில், மதுரை மாநகராட்சி பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 54 பேரின் தேர்வு முடிவுகள் விடுபட்டிருந்தன.

 இதனால், மாணவியரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக இணை இயக்குநர் பழனிச்சாமி, சென்னை தேர்வுகள் துறை இணை இயக்கநருக்கு தகவல் கொடுத்தார்.

 உடனடியாக, தேர்வுகள் துறையில் இருந்து, மின்னஞ்சல் மூலம் 54 மாணவியரின் தேர்வு முடிவுகளையும் அனுப்பி வைத்தனர்.

 இந்த மின்னஞ்சல் பொன்முடியார் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

 இதில், மாணவியரின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விவரங்கள் தெரிவிக்கப்பட்டனவே ஒழிய, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. இதனால், தேர்ச்சி பெற்ற மாணவியர், உயர்கல்விக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 இதனால், குழப்பமடைந்த மாணவியரின் பெற்றோர், மதிப்பெண் சான்றிதழைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி நிர்வாகத்திடம் கோரினர்.

 இதனைத் தொடர்ந்து, தேர்வுகள் துறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் மாணவியரின் மதிப்பெண்களை தனித்தனி பட்டியலாகத் தயாரித்து, முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்புதல் பெற்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி முதன்மைக் கல்வி அலுவலர் மதியழகராஜ் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

 அவர் மேலும் கூறுகையில், தேர்வுத்துறை மூலம் முறையான மதிப்பெண் பட்டியல் பெறப்பட்டு மே 27 ஆம் தேதி விநியோகிக்கப்படும். எனவே, மாணவியரும், பெற்றோரும் குழப்பமடைய தேவையில்லை, என்றார்.
 


Page 14 of 111