Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு வரவேற்பு:ஆசிரியைகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் சிறப்பு பயிற்சி

Print PDF

தினமலர்             17.06.2013

மாநகராட்சி பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு வரவேற்பு:ஆசிரியைகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் சிறப்பு பயிற்சி

சென்னை:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மற்றும் மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் நான்கு நாட்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

99 பள்ளிகள்:சென்னை மாநகராட்சியில் பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் உள்ளன. இதில், 99 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி உள்ளது. மாநகராட்சி பள்ளியில், தமிழ் வழிக்கல்வியை காட்டிலும், ஆங்கில வழிக்கல்வியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்களை சேர்க்கவே அதிகமான விண்ணப்பங்கள் கேட்கப்படுகின்றன. இந்த ஆண்டு, கூடுதலாக, 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த நான்கு தினங்களில், இந்த பள்ளிகளில் மட்டும், 395 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அடுத்த மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால், இது மேலும் அதிகரிக்கும்.

மாநகராட்சி சார்பில், 30 இடங்களில் ஏற்கனவே மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக, 10 மழலையர் பள்ளிகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த பள்ளிகளுக்கும் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.

எல்.கே.ஜி., வகுப்பு:குறைந்தபட்சமாக பாலவாய் என்ற இடத்தில், 20 மாணவர்களும், அதிகபட்சமாக எம்.ஜி.ஆர்., நகர் இரண்டாவது பள்ளியில், 99 மாணவர்களும் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வரும் 17ம் தேதி துவங்கி நான்கு நாட்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பயிற்சி வகுப்புகள், பெங்களூருவில் இயங்கி வரும் முன்னணி நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது.

ஆசிரியைகள் தேர்வு:இதற்காக, 60 ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். முதல் இரண்டு நாட்களுக்கு துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கான, 30 ஆசிரியைகளும், அடுத்த இரண்டு நாட்களுக்கு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைகளும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வர். மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எளிதாக பயிற்றுவிக்கும் முறை குறித்து இதில் விளக்கப்பட உள்ளது.இது குறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அமெரிக்க தூதரகம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் 60 ஆசிரியைகளுக்கு நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதைத்தவிர ஆங்கில பயிற்சிக்கு மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆங்கில வழிக்கல்வி பெற்றோரிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது' என்றார்.
 

ஆம்பூர் நகராட்சி துவக்கப் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்புகள் துவக்கம்

Print PDF

தினமணி               15.06.2013

ஆம்பூர் நகராட்சி துவக்கப் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்புகள் துவக்கம்

ஆம்பூர் அழகாபுரி மற்றும் கஸ்பா - ஏ நகராட்சி துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடக்க விழா மற்றும் நகராட்சி சார்பில் பாய்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அழகாபுரி நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவுக்கு நகரமன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தலைமை வகித்து ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளைத் தொடங்கி வைத்தார்.  மேலும் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க பாய்களை வழங்கினார்.

ஆம்பூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல்.குமார், மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் டி.நடராஜன், பள்ளித் தலைமை ஆசிரியை வி.விஜயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் வி.செல்வராணி, பி.எம்.ரஸியா பேகம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பி.ஜீவரத்னம், நகராட்சி இளநிலை உதவியாளர் பிரேம் ஆனந்தன், ஜேசீஸ் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.சரவணன், கனகம்மாள் அறக்கட்டளை நிர்வாகி ஈ.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆம்பூர் நகரில் உள்ள 11 நகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பாய்கள் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை மேயர் வழங்கினார்

Print PDF
தினத்தந்தி                11.06.2013

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை மேயர் வழங்கினார்


கோவை டாடாபாத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ– மாணவிகளுக்கு இலவச சீருடை, பாட புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தக பை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு மேயர் செ.ம.வேலுசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் லதா, எம்.எல்.ஏ. சேலஞ்சர்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாணவ–மாணவிகளுக்கு சீருடை மற்றும் பொருட்களை வழங்கி மேயர் செ.ம.வேலுசாமி பேசும் போது கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சரின் சீரிய திட்டம், கோவை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்படு கிறது. இதன்படி 26 ஆயிரத்து 118 பேருக்கு மாணவர்களுக்கு இவை வழங்கப்படுகிறது. சீருடைகள் மட்டும் 8,711 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படு வதால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் மாணவ–மாணவிகள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது போல் பிளஸ்–2 தேர்விலும் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். 8 மாநகராட்சி பள்ளிகள் ஐ.எஸ்.ஓ. தரசான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் 9 பள்ளிகளுக்கு தர சான்றிதழ் கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

இதில், துணைமேயர் லீலாவதி உண்ணி, மண்டல தலைவர்கள் கே.ஆதிநாராயணன், சாவித்திரி பார்த் திபன், நிலைக்குழு தலைவர்கள் சாந்தாமணி, அர்ச்சுணன், கணேசன், கவுன்சிலர் ரங்கநாயகி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 


Page 12 of 111