Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு ரூ.2.40 லட்சம் புத்தகங்கள்

Print PDF

தினமணி              24.07.2013

மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு ரூ.2.40 லட்சம் புத்தகங்கள்

  மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு ரூ. 2.40 லட்சம் மதிப்பிலான நூல்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டன.

  மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா, செவ்வாய்க்கிழமை மடீட்சியா அரங்கில் நடைபெற்றது. இதில், பள்ளிகளிலுள்ள நூலகங்களுக்கு புதிதாக ரூ. 2.40 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள புத்தகங்களை, அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா வழங்கிப் பேசியதாவது:   புத்தகங்கள் படிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எந்த வகையிலும கிடைக்காது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிறந்த புத்தகங்களின் மதிப்பு குறையாது. ஆசிரியர்கள் பாடத்தைக் கற்றுக் கொடுப்பதுடன், மாணவர்களுக்குப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். புத்தகங்களை வாசித்தவர்கள் வாழ்வில் தோற்றதில்லை.

  எளிமையான வாக்கியங்களைக் கொண்ட புத்தகங்கள் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வாங்கித் தரப்பட்டுள்ளன. பாடப் புத்தகங்களை படிக்கும் நேரம் போக, மீதியுள்ள நேரங்களில் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். 10-க்கும் மேற்பட்ட புத்தகங்களை படிக்கும்போது, எழுதும் பழக்கம் தானாக வந்துவிடும். நல்ல எழுத்தாளர்களாகவும் உருவாகலாம். மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் நல்ல எழுத்தாளர்களாகவும் வரவேண்டும், என்றார்.

  விழாவுக்கு முன்னிலை வகித்த ஆணையர் ஆர். நந்தகோபால் பேசியது: மதுரை மாநகராட்சியில் 28 ஆரம்பப் பள்ளிகள், 14 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 15 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 66 பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகள் தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களில் இயங்கி வருகின்றன. மாணவர்கள் தாம் படிக்கும் பள்ளியின் பெயரைத் தாங்கி நிற்கும் சான்றோர்களின் சிறப்புக்களையும் அறிந்து கொள்ளவேண்டும். மாணவப் பருவத்தில் புத்தகங்கள் தான் சிறந்த தோழர்களாகவும், வழிகாட்டியாகவும் திகழும்.

  மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களைப் படித்து, சிறந்த அறிஞர்களாகவும், மேதைகளாகவும் உருவாக வேண்டும், என்றார்.

  பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளி நூலகத்தை நல்ல முறையில் பராமரித்து வருவதற்காகவும், அதிக நூல்களை நூலகத்துக்கு வாங்கித் தந்தமைக்காகவும், நூலகர் கனகதுர்க்காவுக்கு சிறந்த நூலகருக்கான பாராட்டுச் சான்றிதழை மேயர் வழங்கினார்.

  இந்த விழாவில், துணை மேயர் ஆர். கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ஆ. தேவதாஸ், மண்டலத் தலைவர்கள் ஜெயவேல், ராஜபாண்டியன், கல்விக் குழுத் தலைவர் சுகந்தி அசோக், மாநகராட்சி கல்வி அலுவலர் மதியழகராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 2,536 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர், மேயர் வழங்கினார்கள்

Print PDF

தினத்தந்தி          12.07.2013

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 2,536 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர், மேயர் வழங்கினார்கள்


மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரத்து 536 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை அமைச்சர், மேயர் வழங்கினார்கள்.

விலையில்லா மடிக்கணினி

மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரத்து 536 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று காலை நடந்தது. விழாவிற்கு மேயர் ராஜன்செல்லப்பா தலைமை தாங்கினார். டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கமிஷனர் நந்தகேபால் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், அண்ணாத்துரை, மண்டல தலைவர் சாலைமுத்து, ஜெயவேல், ராஜபாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:–

எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பல்வேறு சிறந்த திட்டங்களை முதல்–அமைச்சர் வழங்கி வருகிறார். அதிலும் கல்வித்துறைக்கென முதல்வர் ஏராளமான நிதிகளை ஒதுக்கி உள்ளார். இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.19 ஆயிரத்து 965 கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை எந்த ஒரு மாநிலத்திலும் கல்வி ஒதுக்கப்பட்டதாக வரலாறு இல்லை.

உயர்கல்வி செல்லும் நீங்கள் கல்வி தரத்தை மேம்படுத்தக்கொள்ள வேண்டும் என்று நோக்கத்தோடு முதல்வர் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வருகிறார். இதன் மூலம் 2023–ம் அண்டு தமிழகம் அனைத்திலும் முதன்மை அடைய வேண்டும் என்ற லட்சியத்தோடு திட்டங்களை வகித்து வருகிறார்.. முதல்வராக இருந்து இத்தனை சாதனைகளை செய்து வரும் அவரை, நீங்கள் இந்திய நாட்டை ஆளும் பிரதமராக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் துரைப்பாண்டியன், ஆவின் தலைவர் தங்கம், பொருளாளர் ராஜா, மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் ராஜலிங்கம், ஜெயபாலன், சுகந்தி, கவுன்சிலர்கள் அண்ணாநகர் முருகன், அபுதாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

"100 சதவீத தேர்ச்சியே மாநகராட்சி பள்ளிகளின் இலக்கு': ஆலோசனைக்கூட்டத்தில் பெருமிதம்

Print PDF
தினமலர்        10.07.2013

"100 சதவீத தேர்ச்சியே மாநகராட்சி பள்ளிகளின் இலக்கு': ஆலோசனைக்கூட்டத்தில் பெருமிதம்

கோவை : ""மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்'' என, மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்திறன் மேம்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி மற்றும் அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் (எ.ஐ.எப்.,) சார்பில், மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்திறன் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், தேசிய அளவில் டிஜிட்டல் ஈகுவலைசர் புரோகிராம் செயல்படும் பள்ளிகளுக்கு இடையே "சிறிய யோசனை பெரிய வித்தியாசம்' என்ற தலைப்பில் நடந்த போட்டியில், மாநிலத்தில் முதலிடம் பெற்ற மூலிகை தோட்டம் என்ற செயல்திட்டத்திற்கு, வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

கோடை கால கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு மேயர், கமிஷனர் லதா ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். மேலும், பல்வேறு தலைப்புகளில் குறும்படம் தயாரித்த, ஐந்து பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அப்போது, கோவை மேயர் பேசியதாவது : அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் சார்பில், மாநகராட்சி பள்ளிகளில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களில் ஐந்து சதவீதம் பேரை தேர்வு செய்து, சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சிவிட்டன, என்றார்.

மாநகராட்சி கமிஷனர் லதா பேசியதாவது : அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன், மாநகராட்சி நிர்வாகம், ஆசிரியர்கள் இணைந்து செயல்படுவதால், "டிஜிட்டல்' கல்வி முறை மாணவர்களை சென்றடைந்துள்ளது. வரும் ஆண்டில், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை தேர்வு செய்து, சிறப்பு பயிற்சி கொடுக்கும் போது, தேர்வில் யாரும் தோல்வி அடையமாட்டார்கள். இந்த கல்வியாண்டில், மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும், என்றார்.

அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் மாநில ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் பேசியதாவது :

மாநகராட்சி மற்றும் பவுண்டேஷன் சார்பில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில், கம்ப்யூட்டர் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஐந்து பள்ளி மாணவர்களுக்கு குறும்படம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது, என்றார்.
 


Page 9 of 111