Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 45 லட்சம் நிதி

Print PDF

தினமணி                30.07.2012

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 45 லட்சம் நிதி

பரமக்குடி, ஜூலை 29: பரமக்குடி நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சிக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், புதிய டம்பர் பிளேசர் வாகனத்தை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் சனிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகாமுனியசாமி தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.முனியசாமி, குணா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் கே.அட்ஷயா வரவேற்றார்.

  திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் புதிய டம்பர் பிளேசர் வாகனத்தை துவக்கி வைத்து அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் பேசியது: பரமக்குடி நகராட்சி சுகாதாரமாக விளங்கிட திடக்கழிவுகளை அகற்றிட ரூ. 16.50 லட்சத்தில் புதிய டம்பர் பிளேசர் வாகனமும், அனைத்து வார்டுகளிலும் குப்பைகளைக் கொட்டி வைப்பதற்காக ரூ. 23 லட்சத்தில் புதிய டம்பர் பிளேசர் தொட்டிகளும், ரூ. 5.75 லட்சத்தில் மூன்று சக்கர சைக்கிள்களும் வாங்கி பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

 மேலும் பரமக்குடி நகராட்சி சிறந்து விளங்கிட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் ரூ. 3.5 கோடி நிதியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட உள்ளது. தற்போது முதுகுளத்தூர் ரயில்வே கேட் பகுதியிலிருந்து ரயில்வே துறையின் அனுமதியுடன் இருபுறமும் கழிவுநீர் செல்ல வாறுகால் தோண்டப்பட்டுள்ளது.

 அனைத்து நகர் பகுதிகளைப் போன்று கிராமப் பகுதிகளிலும் திடக் கழிவுகளை அகற்ற ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் மகளிருக்காக சுகாதார வளாகங்கள் கட்டித் தர இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

  நகர் பகுதியை சுகாதாரமாக வைத்துக் கொள்ள நகராட்சி மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும் நகராட்சி சார்பில் வைக்கப்படும் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைக் கொட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

   விழாவில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர் எம்.நாகராஜன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஐ.கிருஷ்ணமூர்த்தி, பிரகாசம், வழக்கறிஞர் பிரிவு சரவண பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ப பலர் கலந்துகொண்டனர். நகராட்சி பொறியாளர் என்.குருசாமி நன்றி கூறினார்.

 

மதுரை மாநகராட்சிக்கு அரசு ரூ.100 கோடி வழங்குகிறது : கூடுதல் தொகைக்கு கடன் வாங்க திட்டம்

Print PDF

தினமலர்        22.12.2011

மதுரை மாநகராட்சிக்கு அரசு ரூ.100 கோடி வழங்குகிறது : கூடுதல் தொகைக்கு கடன் வாங்க திட்டம்

மதுரை :மதுரை மாநகராட்சியில் பாதியில் நிற்கும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற, ரூ.100 கோடி வழங்க தமிழக அரசு முன் வந்துள்ளது. கூடுதல் நிதிக்கு வங்கி கடன் வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத்திட்டம், மழைநீர் வடிகால் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மாநகராட்சி பங்களிப்புத்தொகை இன்றி, பணிகள் நிறைவு பெறவில்லை. தமிழக அரசிடம் ரூ.300 கோடி உதவி கேட்டு, மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்தது.

இதற்கான பரிசீலனை நடந்த நிலையில், கமிஷனர் நடராஜனை நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்தனர். சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் செயலர்களுடன் நடந்து பேச்சு வார்த்தையில், மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வழங்க அரசு முன்வந்தது.

இந்நிதியை கொண்டு ஓராண்டிற்குள் மாநகராட்சியில் கிடப்பில் உள்ள பணிகளை நிறைவு செய்ய வலியுறுத்தப்பட்டது. 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்தால், மத்திய அரசின் மானியத்தொகை, ரூ.100 கோடி கிடைக்கும் என்பதால், வங்கி கடனாக ரூ.100 கோடி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் நடராஜன் கூறியதாவது: சென்னையில் இரு நாட்கள் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. தேவையான வசதிகள் குறித்து அதிகாரிகள் கேட்டனர். முடங்கிய பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர், என்றார்.

 

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ளூர் கேபிள் டி.வி.க்கான டெண்டர்: அதிகபட்சத் தொகை ரூ.7.43 லட்சம்

Print PDF

தினமணி       30.11.2011

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ளூர் கேபிள் டி.வி.க்கான டெண்டர்: அதிகபட்சத் தொகை ரூ.7.43 லட்சம்

சேலம், நவ. 29:  சேலம் மாவட்டத்தில் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களை நடத்துவதற்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக ரூ.7.43 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

மாவட்டங்களில் கேபிள் டி.வி. நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஒப்பந்த புள்ளியில் மாவட்டத் தலைநகரம், நகராட்சி, பேரூராட்சி, தாலுகா என 4 பிரிவுகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

ஒப்பந்தப் புள்ளியின் மூலம் பெறப்படும் அதிகபட்சத் தொகை ஏலத்தின்போது அடிப்படை நிர்ணயத் தொகையாக கருதப்படும் என்றும், விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டிகளில் போடலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.

இதன்படி, சேலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆட்சியர் க. மகரபூஷணம், வருவாய் அலுவலர் பிரசன்ன வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் டெண்டர் பெட்டி திறக்கப்பட்டு, மனுக்கள் எண்ணப்பட்டன. மொத்தம் 82 மனுக்கள் போடப்பட்டிருந்த நிலையில், 2 மனுக்கள் விசாரணை நிலையிலேயே நிராகரிக்கப்பட்டன. சுமார் 40 மனுக்கள் சேலம் மாநகராட்சிப் பகுதிக்கு மட்டுமே வந்திருந்தன.

இதைத் தொடர்ந்து, இரவு 9 மணி வரை மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான டெண்டர் அதிகபட்சமாக, ரூ.7.43 லட்சத்துக்கு ஏலம் போனது.

நகராட்சி, தாலுகா அளவில் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரியவரின் மனுக்கள் நள்ளிரவு வரை பரிசீலிக்கப்பட்டது. இதில், டெண்டர் தாக்கல் செய்தவர்கள், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர். ஏலத்தையொட்டி, காலை முதலே ஆட்சியர் அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

 


Page 9 of 37