Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

சுகாதார பணிகள் தனியாரிடம் : ஆண்டு தோறும் ரூ.31.8 லட்சம் மிச்சம்

Print PDF

தினமலர் 05.02.2010

சுகாதார பணிகள் தனியாரிடம் : ஆண்டு தோறும் ரூ.31.8 லட்சம் மிச்சம்

மேட்டுப்பாளையம் நகராட்சியின் 11 வார்டுகளில் குப்பை அள்ளி, சுகாதாரத்தை மேம்படுத்தும் பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. இதன் மூலமாக, நகராட்சி நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 31.8 லட்சம் ரூபாய் மிச்சமாகிறது.மேட்டுப்பாளையம் நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள 210 துப்புரவு பணியாளர்கள் தேவை; ஆனால், 162 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். பணியாளர் பற்றாக்குறையால் பல வார்டுகளிலும் குப்பை அகற்றப்படாமல் மலைபோல் குவிந்துள்ளது.

இதை சுத்தம் செய்ய அவ்வப்போது ஒட்டுமொத்த பணியாளர்களையும் திரட்டி, "மாஸ் கிளீனிங்' முறையில் குப்பை அள்ளப்படுகிறது. இப்பணி நடக்கும் போது, பிற வார்டுகளில் குப்பை தேங்கி, மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண முதற்கட்டமாக, 3, 5, 8, 10, 11, 12 ,25, 27, 30, 31, 32 ஆகிய 11 வார்டுகளில் குப்பை அகற்றி, சுகாதாரத்தை மேம்படுத்தும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மாதம் 4.97 லட்சம் ரூபாய்க்கு புள்ளி குறித்து டெண்டர் எடுத்துள்ளது; இத்தொகை நகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்ட துவக்கவிழா, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. நகராட்சித் தலைவர் சத்தியவதி தலைமை வகித்து, சுகாதார பணியாளர் சீருடைகள் மற்றும் சாதனங்களை வழங்கினார். நகராட்சி துணைத்தலைவர் ஆறுமுகம், நகர்நல அலுவலர் பிரதீப், கவுன்சிலர்கள் உமா, வெள்ளிங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுகாதார பணியை கான்ட்ராக்ட் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் கூறுகையில், "நகராட்சியின் 11 வார்டுகளில் குப்பை அள்ள டெண்டர் எடுத்துள்ளோம். இந்த வார்டுகளில் குப்பை அள்ளுவது, கொசு மருந்து தெளிப்பது, சாக்கடை சுத்தம் செய்வது உள்பட துப்புரவு பணிகளும் மேற்கொள் ளப்படும். நகராட்சி பணியாளர்களின்றி நாங்கள் மட்டுமே இதற் கான பணியில் ஈடுபடுவோம்' என்றனர்.

தனியார் மய திட்டம் குறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தனியார் திட்டம் துவங்கியுள்ள 11 வார்டுகளில், இதற்கு முன் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாதம் தோறும் 7.62 லட்சம் ரூபாயை நகராட்சி செலவிட்டு வந்தது. இதில், வாகன பராமரிப்பு, டீசல் செலவு, பணியாளர் சம்பளம் உள்ளிட்ட அனைத்தும் அடக்கம். ஆனால், சுகாதார பணியை மேற் கண்ட 11 வார்டுகளில் மேற்கொள்ள, ஆரணியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மாதம் தோறும் 4.97 லட்சம் ரூபாயில் மேற் கொள்ள டெண்டர் எடுத்துள்ளது. இதன் மூலமாக நகராட்சிக்கு ஆண்டு தோறும் இந்த 11 வார்டுகளில் மட்டும் 31.8 லட்சம் ரூபாய் மிச்சம் ஆகிறது. மேலும், கண்காணிப்பு, வாகன பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. பணியாளர் பற்றாக்குறை தவிர்க்கவே தனியார் திட்டத்தை துவக்கியுள்ளோம். பணியில் இருக்கும் ஆட்களை குறைக்கும் திட்டம் எதுவுமில்லை. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்

Last Updated on Friday, 05 February 2010 06:29
 

போடி நகராட்சியில் ரூ.26 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம்

Print PDF

தினமணி 04.02.2010

போடி நகராட்சியில் ரூ.26 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம்


போடி, பிப். 3: போடி நகராட்சியில் ரூ. 26.28 கோடி மதிப்பீட்டில், பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி, அதற்கான பணிகளை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.

தேனி மாவட்டம், லட்சுமிநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தை, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 16-ம் தேதி திறந்துவைத்து, ரூ. 85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். போடி நகராட்சியில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களையும் அவர் திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து, போடி நகர்மன்றத் தலைவர் ரதியாபானு சாகுல் கூறியதாவது:

மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றபின், தேனி மாவட்டத்திற்கு முதன்முறையாக வருகிறார். ஏற்கெனவே, போடி நகராட்சியின் நீண்டநாள் கோரிக்கையான, பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளார். இந்த பணிகள் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கிவைக்க உள்ளார்.

மேலும், போடி நகராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கட்டங்களையும் ஸ்டாலின் திறந்துவைக்கிறார். இதில், ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம், ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கணினிக் கூடம், ரூ.7 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள நவீனக் கழிப்பறை ஆகியவற்றை அவர் திறந்துவைக்கிறார்.

போடி நீதிமன்ற வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரூ.20 லட்சம் மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தொட்டி, தென்றல் நகரில் ரூ. 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஆகியவற்றை அவர் திறந்துவைக்கிறார்.

நகராட்சிப் பகுதி-2 நிதியின் மூலம் ரூ. 20 லட்சம் செலவில் பெரியாண்டவர் ஹைரோட்டில் நவீன ஆடு அடிக்கும் இறைச்சிக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்துவைத்து பயன்பாட்டிற்கு வழங்க உள்ளார்.

போடி நகராட்சியில் ரூ.69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, கட்டடங்களை ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். அவரை வரவேற்க, போடி நகராட்சி சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

நகர்மன்றத் துணைத் தலைவர் எம். சங்கர், நகராட்சி ஆணையாளர் கே. சரவணக்குமார், மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் முன்னேற்பாட்டு பணிகளை செய்து வருகின்றனர்.

Last Updated on Thursday, 04 February 2010 11:23
 

முதல்வர் அறிவித்தபடி செவிலிமேடு பேரூராட்சிக்கு ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF
தினகரன் 04.02.2010

முதல்வர் அறிவித்தபடி செவிலிமேடு பேரூராட்சிக்கு ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீடு

காஞ்சிபுரம்: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு காஞ்சிபுரம் வந்திருந்த முதல்வர் கருணாநிதி, செவிலிமேடு பேரூராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு அறிவித்தார்.

அதன்படி, பல்லவன்நகர் பூங்கா அழகுப்படுத்தும் பணிக்காக ரூ.22 லட்சமும், கன்னிகாபுரத்தில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.4 லட்சமும், காமராஜர் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சமும், சர்க்யூட் ஹவுஸ் பின்புறம் மற்றும் மிலிட்டரி ரோடு ஜங்ஷன் ஆகிய இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க ரூ.8 லட்சம், திருப்பருத்திகுன்றத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.60 லட்சம் என ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா, செவிலிமேடுக்கு நேற்று வந்தார். கன்னிகாபுரம் மற்றும் பல்லவன்நகர் பூங்கா ஆகிய இடங்களில் நடக் கும் பணிகளை பார்வையிட்டார். பணிகளை விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பேரூராட்சி தலைவர் ஏழுமலை, துணைத்தலைவர் விஸ்வ நாதன், செயல் அலுவலர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் முரளிதரன் உட்பட பலர் உடன் வந்திருந்தனர்.

Last Updated on Thursday, 04 February 2010 07:53
 


Page 27 of 31