Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

கோவை மாநகராட்சியில் ரூ. 381.13 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: ரூ. 21.30 கோடி பற்றாக்குறை

Print PDF

தினமணி 23.03.2010

கோவை மாநகராட்சியில் ரூ. 381.13 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: ரூ. 21.30 கோடி பற்றாக்குறை

கோவை, மார்ச் 22: கோவை மாநகராட்சியில் ரூ. 381.13 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 21.30 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதிக்குழுத் தலைவர் அ.நந்தகுமார் தாக்கல் செய்தார். கூட்டத்துக்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார்.

மாநகராட்சியின் செலவு ரூ. 381.13 கோடி என்றும், செலவு ரூ. 359.83 கோடி என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 21.30 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வருவாய் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பாதசாரிகளின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உயர்மட்ட நடைபாதைகள் அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி புல்வெளிகளுடன் கூடிய நடைபாதைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தியாகி குமரன் மார்க்கெட், அண்ணா மார்க்கெட்களை நவீனமயமாக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூர், சத்தி சாலையில் எரிவாயு மயானங்கள் அமைக்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 8 மேனிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் பள்ளியில் கூடுதல் உபகரணங்கள் வாங்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 3 திட்டச்சாலைகள் அமைப்பதற்கான நில ஆர்ஜித பணிகளுக்காக ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் சுற்றுச்சூழல் இயக்கம் துவக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலர் சிறப்புநிதியாக தலா ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 3.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் ரூ. 25 லட்சமும், மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ரூ. 10 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அம்சங்கள்

ஆண்டுக்கு
4 புதிய திட்டச்சாலைகள் உருவாக்கம்

ஏழை மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம்

மேனிலைப் பள்ளிகளுக்கு ஐ
.எஸ்.. தரச்சான்று பெறும் திட்டம்

கட்டட வரைபட தயாரிப்பு பிரிவு துவக்கம்.

இரு இடங்களில் நவீன உயர்மட்ட நடைபாதைகள்

நவீனமயமாகிறது தியாகி குமரன் மார்க்கெட்
, அண்ணா மார்க்கெட்

மேட்டுப்பாளையம் சாலையில் அனைத்து வசதிகளுடன்கூடிய திருமண மண்டபம்.

கவுன்சிலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டம்

துப்புரவாளர் போதை மறுவாழ்வு மையம்

நடப்பு ஆண்டுக்குள் பில்லூர் 2-வது கூட்டுக்குடிநீர்த் திட்டம் அமல்

8 குளங்களை தனியார் பங்களிப்புடன் சீரமைக்கும் திட்டம்

24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்.

Last Updated on Tuesday, 23 March 2010 10:56
 

மாநகராட்சி பட்ஜெட்டில் பற்றாக்குறை; சமாளிப்பது எப்படி? வருவாய் பெருக்கும் புது திட்டங்கள் பட்டியல்

Print PDF

தினமலர் 23.03.2010

மாநகராட்சி பட்ஜெட்டில் பற்றாக்குறை; சமாளிப்பது எப்படி? வருவாய் பெருக்கும் புது திட்டங்கள் பட்டியல்

கோவை: நேற்று வெளியான கோவை மாநகராட்சி பட்ஜெட்டில், ரூ.21.30 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க, பல்வேறு வருவாய் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

சொத்துவரி விடுபட்ட இனங்களை கண்டறிதல்: தற்போதைய, எதிர்கால செலவின தேவைகளை சந்திக்க, அனைத்து வருவாய் இனங்களையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி, பிற வரியினங்கள் முழுமையாக கண்டறியப்படவுள்ளன. விடுபட்ட இனங்கள், உபயோக மாற்றங்கள், கூடுதல் கட்டடங்கள் எதுவும் விடுபடாமல் துல்லியமாக வரிவிதிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. அனைத்து சொத்து வரி விதிப்புகளையும் மறுஆய்வு செய்து, வரி விதிக்கப்பட்டுள்ளதற்கும், விதிக்கப்படாததற்கும் இடையிலான இடைவெளி கண்டறியப்பட்டு, முழுமையாக வரிவிதிப்பு செய்யப்படும்.தொலைதொடர்பு கோபுரங்களுக்கு வரி: மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், காலியிடங்களில் வாடகை அடிப்படையில் தொலைதொடர்பு மற்றும் மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை கட்டடங்கள், காலியிடங்களுக்கு ஒரே மாதிரியாக அரையாண்டுக்கு 15,000 ரூபாய் சொத்து வரி நிர்ணயிக்கப்படவுள்ளது. தொலை தொடர்பு கோபுரங்களை ஒழுங்குபடுத்தவும், வருவாயை உயர்த்தவும் இது உதவும். குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு: அனைத்து குடிசைப்பகுதி குடியிருப்புகள், நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து குடியிருப்புக்கும், வைப்புத் தொகை இல்லாமல் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும். இதனால் இலவச பொது குடிநீர் குழாய்கள் குறைந்து, வீட்டு உபயோக குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் குடிநீர் கட்டணம் உயர வாய்ப்பு கிடைக்கும்.

பாதாள சாக்கடை இணைப்புகளின் எண்ணிக்கை உயர்வதாலும், சேவைக் கட்டணம் கூடுதலாக கிடைக்கும். தொழில் வரி: தொழில் வரி விதிக்கப்படாத தகுதி வாய்ந்த தனிநபர், மத்திய, மாநில அரசு ஊழியர், சிறு,பெரு தொழில் நிறுவனங்களை கண்டறிந்து, தொழில் வரி உயர்த்த வாய்ப்பு கிடைக்கும். திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள் ளதால், இந்த ஆண்டு முதல் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு, வருவாயை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் விற்பனை: உக்கடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை, வியாபார நிறுவனங்களுக்கு குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கு விற்பனை செய்து, இதன் மூலமும் வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகரில் அமைக்கப்படும் நவீன பயணியர் நிழற்குடைகள், பிரதான சாலைகளில் அமைக்கப்படும் பாதசாரிகளுக்கான நடைபாதைகள், பஸ் ஸ்டாண்டுகள் பராமரிப்பு, விளம்பரம், கட்டண கழிப்பிடங்கள் ஆகியவற்றில் தனியார் விளம்பரம் மூலம் வருவாய் பெருக்கப்படவுள்ளது.

Last Updated on Tuesday, 23 March 2010 08:16
 

மாநகராட்சி பட்ஜெட்டில் வழக்கம்போல பற்றாக்குறைதான்: கல்விக்கும், கட்டமைப்புக்கும் முக்கியத்துவம்

Print PDF

தினமலர் 23.03.2010

மாநகராட்சி பட்ஜெட்டில் வழக்கம்போல பற்றாக்குறைதான்: கல்விக்கும், கட்டமைப்புக்கும் முக்கியத்துவம்

கோவை: கோவை மாநகராட்சியின் 2010-2011ம் ஆண்டுக்கான பட்ஜெட், ரூ.21.30 கோடி பற்றாக்குறையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வி, கட்டமைப்பு வசதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் 2010-2011ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் முன்னிலையில் மேயர் வெங்கடாசலம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதிக்குழுத் தலைவர் நந்தகுமார் நிதிநிலை அறிக்கையை படித்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2010-2011 நிதியாண்டின் மொத்த வருவாய் வரவு மற்றும் மூலதன வரவு ரூ.359.83 கோடி என்றும், மூலதன செலவுகள் ரூ.381.13 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. நிகரப் பற்றாக்குறை ரூ.21.30 கோடியாக இருக்கும். பற்றாக்குறையை சமாளிக்க, பல்வேறு வருவாய் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டை வெளியிட்டு மேயர் வெங்கடாசலம் பேசியதாவது: கோவை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 33.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, உள்ளூர் திட்டக்குழும நிதியை பயன்படுத்தி மூன்று திட்ட சாலைகளை ரூ.13.25 கோடி செலவில் நிறைவேற்ற அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி பெற்றவுடன் பணிகள் துவக்கப்பட்டு, மாநாட்டுக்கு முன் பூர்த்தி செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் மிக்க மேட்டுப்பாளையம் பிரதான ரோடு, பாரதி பார்க் பிரதான ரோடு சந்திப்பு, அரசு மருத்துவமனை முன்புறம் உள்ள சாலை ஆகியவற்றை எளிதாக கடக்க, பாதசாரிகளின் வசதிக்காக உயர்மட்ட நடைபாதை அமைக்கப்படவுள்ளது. தியாகி குமரன் மார்க்கெட், மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா மார்க்கெட் ஆகியவை நவீனமயமாக்கப்படும். மாநகராட்சியில், கட்டட வரைபட தயாரிப்பு பிரிவு துவங்கப்படும். மாநகராட்சிப் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் உடல், மன நலம் காக்க மருத்துவ பரிசோதனை, யோகா பயிற்சிகள் அளிக்கப்படும். பணியாளர்களின் குழந்தைகளுக்கு வங்கி உதவியுடன் கல்விக்கடன் வசதியும் செய்யப்படும்.

மாநகர பகுதிகளை 112 மண்டலங்களாக பிரித்து, 31 மண்டலங்களில் முதல் கட்டமாக சாலையோர மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு, ரூ.180 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் கோரப்படும். நடப்பு ஆண்டு முதல் ஒரு மண்டல பகுதிக்கு ஒரு திட்டசாலை வீதம், ஆண்டுதோறும் நான்கு திட்ட சாலைகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லையில் உள்ள எட்டு நீர்நிலைகள் தனியார் பங்களிப்புடன் புனரமைப்பு செய்து மேம்படுத்தப்படும். இருபத்து நான்கு மணி நேர குடிநீர் வினியோகம், ரோடு மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து கவுன்சிலர்களின் உதவியுடன், புகையில்லா பசுமைமிக்க மாநகராட்சியாக மாற்றியமைக்கப்படும். இவ்வாறு, மேயர் வெங்கடாசலம் பேசினார். முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலையில் பள்ளியில் சிற்றுண்டி வழங்குவது, தரமான மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ஐ.எஸ்.., தரச்சான்றிதழ் பெறுவது ஆகிய திட்டங்கள் அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளன. பட்ஜெட்டின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

போலீஸ் பாதுகாப்பு: மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் வேல்முருகன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நேற்றைய பட்ஜெட் கூட்டத்தில் வேல்முருகன் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் நடந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தையடுத்து, நேற்று பட்ஜெட் கூட்டத்தின்போது, மாமன்ற அரங்கத்தின் வெளியே போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Last Updated on Tuesday, 23 March 2010 07:54
 


Page 22 of 31