Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சொத்து வரி நிலுவை: அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு

Print PDF
தினமணி         10.10.2014

சொத்து வரி நிலுவை: அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு

சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் வீடு, சொத்து உள்ளவர்களிடம் சொத்து வரியை சென்னை மாநகராட்சி வசூலிக்கிறது. மாநகராட்சிக்குக் கிடைக்கும் வருவாயில் கணிசமான அளவுக்குச் சொத்து வரியின் பங்கு உள்ளது. நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சுமார் ரூ.276 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரியை பொதுமக்கள் சரிவரச் செலுத்துவதில்லை என்ற புகார் உள்ளது. மாநகராட்சிப் பணியாளர்கள் சொத்து வரியைச் செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் அவை முழுமையாகப் பலன் தராத நிலை உள்ளது.

மாநகராட்சியின் கடும் நடவடிக்கை என்பது, வாசலில் போஸ்டர் ஒட்டுவது, குப்பைத் தொட்டியை தள்ளி வைப்பது என்ற அளவிலேயே உள்ளது. மற்ற மாநகராட்சிகளில் உள்ளது போல அபராதம் விதிக்கும் நடைமுறை சென்னையில் இல்லை.

இந்த நிலையில், சென்னையிலும் சொத்து வரி செலுத்தாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க தமிழக அரசிடம் மாநகராட்சி அனுமதி கோரியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

இப்போது சொத்து வரியை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல வசதிகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். ஆனாலும், சொத்து வரி செலுத்தும் ஆர்வம் குறைவாகவே உள்ளது.

இதற்குக் காரணம், கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே ஆகும். நாட்டில் உள்ள பிற மாநகராட்சிகளில் சொத்து வரி செலுத்தாதோரிடம் இருந்து 10 முதல் 15 சதவீதம் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலும் இது போன்ற கடுமையான நடவடிக்கை தேவை என்று கருதப்படுகிறது. சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்களிடம் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரிக்கு அபராதம் வசூலிக்க வேண்டுமென்றால், தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும். அதற்காக அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.

இதற்கான சட்டத் திருத்தத்தை அரசு மேற்கொண்டால், சென்னையிலும் அபராதம் வசூலிக்கப்படும். இப்போது உத்தேசிக்கப்பட்டுள்ள அபராதம் மிகக் குறைவு. ஆனாலும் இந்த நடவடிக்கை ஓரளவு வரி வசூலை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியில் சுமார் 14 ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

உள்வட்ட சுற்றுச் சாலையில் சுங்க கட்டணத்தை 8 சதவீதம் உயர்த்தி வசூலிக்க முடிவு

Print PDF
தினமணி     29.09.2014

உள்வட்ட சுற்றுச் சாலையில் சுங்க கட்டணத்தை 8 சதவீதம் உயர்த்தி வசூலிக்க முடிவு

மதுரை மாநகராட்சி பராமரிப்பிலுள்ள உள்வட்ட சுற்றுச் சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும், நவம்பர் 1ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு 8 சதவீதம் உயர்த்தி கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரை மாநகராட்சி பராமரிப்பிலுள்ள உத்தங்குடி-கப்பலூர் வரையிலான உள்வட்டச் சுற்று சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் 1.11.2000 முதல் 31.10.2015ஆம் ஆண்டு முடிய வசூல் செய்துகொள்ள, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி அளித்துள்ளது. வசூலித்த கட்டணத்தை, 15 ஆண்டு காலத்துக்குள் தவணை முறையில் கடன் தொகையாக செலுத்துவதற்கும், செலுத்த முடியாதபட்சத்தில் மேலும் 2 ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுங்க வரியை 8 சதவீதம் உயர்த்திக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 1.11.2014 முதல் 31.10.2015 முடிய உள்வட்டச் சுற்றுச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு தற்போது வசூல் செய்து வரும் கட்டணத்தில் 8 சதவீதம் உயர்த்தி வசூல் செய்ய, மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, நவம்பர் 1ஆம் தேதி முதல் உத்தங்குடி-கப்பலூர் வரையிலான உள்வட்டச் சுற்றுச் சாலையிலுள்ள 8 சுங்கச் சாவடிகளிலும், தற்போது வசூல் செய்து வரும் கட்டணத்துடன் 8 சதவீதம் உயர்த்தி வசூல் செய்யப்படவுள்ளது.
 

வணிக நிறுவன குப்பைகளை அகற்ற சேவை வரி நிர்ணயம்

Print PDF

தினமணி        29.09.2014

வணிக நிறுவன குப்பைகளை அகற்ற சேவை வரி நிர்ணயம்

மதுரை மாநகராட்சிப் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி சேவை வரி நிர்ணயம் செய்துள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஆணையர் சி.கதிரவன் கொண்டு வந்த தீர்மானம் வருமாறு:

மதுரை மாநகராட்சிப் பகுதியில் தினமும் 700 முதல் 720 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. இக்குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வாகனங்கள் மூலமாக வெள்ளைக்கல் குப்பை சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகின்றது.

இந்த குப்பைகளை அகற்றும் பணிக்கு துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஊதியம், டீசல் செலவினம், வாகனங்கள் பராமரிப்பு செலவினம் மற்றும் வெள்ளைக்கல் குப்பை சேகரிப்பு மைய மாதாந்திர பராமரிப்பு செலவினம் என ஆண்டுக்கு ரூ.45.62 கோடி செலவாகிறது. இதனால், அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதில் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு வணிக நிறுவனங்களுக்கு குப்பைகளை அகற்ற சேவை வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள சேவை வரி விவரம்(நாள் ஒன்றுக்கு):

உணவு விடுதி மற்றும் உணவகங்கள்: வகுப்பு ஏ-நட்சத்திர வகுப்பு-ரூ.500, வகுப்பு பி-(21 மேஜைகளுக்கு மேல்)-ரூ.200, வகுப்பு சி-(11 முதல் 20 மேஜைகள் வரை)-ரூ.100, வகுப்பு டி-(10 மேஜைகள் வரை)-ரூ.50.

திருமண மண்டபம்: வகுப்பு ஏ-(5,000-ம் ச.அடிக்கு மேல்)-ரூ.100, வகுப்பு பி-(4001-5,000 சஅடி வரை)-ரூ.75, வகுப்பு சி-(3001-4,000 சஅடி வரை)-ரூ.55, வகுப்பு டி-(2001-3,000 ச.அடி வரை)-ரூ.45, வகுப்பு இ-(2,000 சதுரடிக்குள்)-ரூ.25.

மருத்துவமனைகள்: வகுப்பு ஏ-(50 படுக்கைகளுக்கு மேல்)-ரூ.500, வகுப்பு பி-(21 முதல் 50 படுக்கைகள் வரை)-ரூ.200, வகுப்பு சி-(11 முதல் 20 படுக்கைகள் வரை)-ரூ.100, வகுப்பு டி-(10 படுக்கைகள் வரை)-ரூ.50.

தங்கும் விடுதிகள்: வகுப்பு ஏ-நட்சத்திர வகுப்பு-ரூ.500, வகுப்பு பி-(50 அறைகளுக்கு மேல்)-ரூ.300, வகுப்பு சி-(21 முதல் 50 அறைகள் வரை)-ரூ.200, வகுப்பு டி-(11 முதல் 20 அறைகள் வரை)-ரூ.100, வகுப்பு இ-(10 அறைகள் வரை)-ரூ.50.

திரையரங்குகளுக்கு ரூ.500, தொழில் மற்றும் அலுவலக வளாகங்களுக்கு ரூ.150, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.75, பிற சிறு நிறுவனங்களுக்கு ரூ.50.

சந்தை வளாகங்கள் (மார்க்கெட், ஷோரூம், ஷாப்பிங் மால்): வகுப்பு ஏ-(2,000 சதுரஅடிக்கு மேல்)-ரூ.500, வகுப்பு பி(1001-2000 சதுரஅடிக்குள்)-ரூ.300, வகுப்பு சி-(501 முதல் 1000 சதுரடிக்குள்)-ரூ.200, வகுப்பு டி-(250-500 சதுர அடி வரை)- ரூ.100, வகுப்பு இ-250 சதுரடிக்குள்-ரூ.50 நிர்ணயம் செய்து வசூல் செய்வதற்கு மான்ற அனுமதி கோரப்படுகிறது, என தெரிவித்தார். இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 


Page 4 of 148