Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

இதுவரை ரூ. 340 கோடி சொத்து வரி வசூல்; தொழில் வரி ரூ. 148 கோடி

Print PDF

தினமணி               15.02.2014

இதுவரை ரூ. 340 கோடி சொத்து வரி வசூல்; தொழில் வரி ரூ. 148 கோடி

சென்னை மாநகராட்சியில் இந்த நிதியாண்டில் இதுவரை ரூ.340 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் வீடு வைத்துள்ளோரிடம் சொத்து வரியை சென்னை மாநகராட்சி வசூலிக்கிறது. மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி திகழ்கிறது. இந்த நிலையில் 2013-14-ஆம் நிதியாண்டில் ரூ. 340 கோடி மட்டுமே சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: 2013-14-ஆம் நிதியாண்டில், பிப்ரவரி 14-ஆம் தேதி வரையில் ரூ. 340 கோடி, சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் ரூ. 550 கோடி சொத்து வரி வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ. 461 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டு முடிய இன்றும் ஒரு மாதம் வரை உள்ளதால், மேலும் வரி வசூலிக்கப்படும். இதன் மூலம் இலக்கு ஓரளவுக்கேனும் எட்டப்படும். இதேபோல, தொழில் வரியாக ரூ. 148 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ. 220 கோடி வசூல் செய்யப்பட்டது. இப்போது வருவாய் துறை அதிகாரிகளுக்கு அம்மா உணவகப் பணி, தேர்தல் பணி போன்ற பல்வேறு பணிகள் இருக்கின்றன. இந்த நிலையிலும் இவ்வளவு அதிகமான வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வரி வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

அனைத்து வரிகளையும் ஒரே இடத்தில் செலுத்த சென்னையில் 200 இடங்களில் பொதுச்சேவை மையங்கள்

Print PDF

மாலை மலர்            13.02.2014

அனைத்து வரிகளையும் ஒரே இடத்தில் செலுத்த சென்னையில் 200 இடங்களில் பொதுச்சேவை மையங்கள்
 
அனைத்து வரிகளையும் ஒரே இடத்தில் செலுத்த சென்னையில் 200 இடங்களில் பொதுச்சேவை மையங்கள்

தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:–

நகர்ப்புறங்களில் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் பொது மக்கள் ஒரே இடத்தில் செலுத்திட வசதியாக, சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் நகர்ப்புற பொதுச் சேவை மையங்களை முதல்– அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த பொதுச்சேவை மையங்கள் பொது மக்களுக்கான மின்னணுச் சேவைகளையும், பிற சேவைகளையும் வழங்கும்.

சென்னை மாநகரத்தில் மேலும் இதுபோன்ற 200 பொதுச்சேவை மையங்கள் தொடங்கப்படுவதுடன் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் இத்தகைய வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். தகவல் தொழில் நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட மின் ஆளுமைச் சங்கங்கள் மூலம் இந்தப் பொதுச் சேவை மையங்கள் நிருவகிக்கப்படும். இதுபோன்ற அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள், மூலமாக, நிர்வாகத்திலும் பொதுச் சேவைகள் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.

மனுநீதி முகாம்கள் உட்பட மக்கள் குறை தீர்க்கும் வழிமுறைகள் மீது தொடர்ந்து இந்த அரசு கவனம் செலுத்தும். இந்த வகையில், அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகள் வழங்குவதன் மூலம் அம்மா திட்டம் பாராட்டத்தக்க ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.

வருவாய்த்துறையின் பணிகளை பொதுமக்களுடைய இல்லங்களுக்கே கொண்டு சேர்ப்பதுடன், அவர்களுடைய குறைகளை விரைவாகத் தீர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் குறை தீர்க்கும் வழி முறைகளைத் திறம்படச் செயல்படுத்துவதன் மூலம் பொதுச்சேவைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த அரசு 104.79 கோடி ரூபாயை தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது. 2013–2014–ம் ஆண்டில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும், விருதுகள், பரிசுகள், ஆகியவற்றை அளித்திடவும் 46.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு 31.61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டிற்கு, இப்பல்கலைக் கழகத்திற்கு 6.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். 2014–2015–ம் ஆண்டுக்கு 39.29 கோடி ரூபாய் தமிழ் வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

நரசிங்கபுரம் நகராட்சியில் தொழில்வரி உயர்வு 25 சதவீதம் அதிகரிப்பு

Print PDF

தினகரன்                03.02.2014

நரசிங்கபுரம் நகராட்சியில் தொழில்வரி உயர்வு 25 சதவீதம் அதிகரிப்பு

ஆத்தூர்,: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையாளர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 138, 13 உட்பிரிவு(2)ன் படியும் நகரமன்ற தீர்மானத்தின்படியும் நகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு 25 சதவீத தொழில்வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரையாண்டிற்கான மொத்த வருமானம் ரூ21,001 வரை உள்ளவர்களுக்கு தொழில்வரி விதிப்பு இல்லை ரூ21,001 முதல் ரூ30,000 வரை உள்ளவர்களுக்கு ரூ125ம், ரூ30,001 முதல் ரூ45,000 வரை உள்ளவர்களுக்கு ரூ313ம், ரூ45,001 முதல் ரூ 60,000 வரை உள்ளவர்களுக்கு ரூ625ம், ரூ60,001 முதல் ரூ75,000 வரை உள்ளவர்களுக்கு ரூ938ம், ரூ75,001 முதல் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ1250 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பின்படி நகராட்சி பகுதியில் உள்ளவர்கள் தொழில்வரி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 


Page 6 of 148