Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

'ரூ.29 கோடி பாக்கியை வசூலிங்க...'மாநகராட்சிக்கு அரசு உத்தரவு

Print PDF

 தினமலர்     17.09.2014

'ரூ.29 கோடி பாக்கியை வசூலிங்க...'மாநகராட்சிக்கு அரசு உத்தரவு

மதுரை: மதுரை மாநகராட்சியில் கிடப்பில் இருக்கும் ரூ.29 கோடியை உடனே வசூலிக்க அரசு தரப்பில் வலியுறுத்தியுள்ளதால் நேற்று கமிஷனர் கதிரவன் அவசர கூட்டம் நடத்தினார்.மாநகராட்சியில் கட்டுமானம் தொடர்பான அனுமதி மற்றும் ஒப்புதல் பெற வருவோர் 'உள்கட்டமைப்பு மேம்பாடு' கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம். இதுதொடர்பான அரசின் ஆணை நடைமுறையில் இருந்த போதும் மாநகராட்சியில் அதை கடந்த காலங்களில் பின்பற்றவில்லை.வணிக வளாகம், குடியிருப்புகளுக்கு என அளவைக்கு ஏற்பட கட்டணம் மாறுபடுகிறது. பெறப்படும் கட்டணம் மூலம் மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்ளலாம். தவிர அது தொடர்பான அறிக்கையை அரசுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.அந்த வகையில் மதுரையில் ரூ.29 கோடி உட்கட்டமைப்பு மேம்பாடு கட்டணம் பாக்கி இருப்பது அரசுக்கு தெரியவந்துள்ளது. உடனே அவற்றை வசூலிக்க அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து கமிஷனர் கதிரவன் நேற்று நகரமைப்பு பிரிவினர் மற்றும் வருவாய் பிரிவினருடன் அவசர கூட்டம் நடத்தினார். பாக்கியுள்ள ரூ.29 கோடியை வசூலிக்க உத்தரவிட்ட கமிஷனர், அது தொடர்பான சம்மந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 

அக்டோபர் 1 முதல் சொத்து வரி சுய மதிப்பீடு செய்ய புதிய நடைமுறை அமல்!

Print PDF
தினமலர்      08.09.2014

அக்டோபர் 1 முதல் சொத்து வரி சுய மதிப்பீடு செய்ய புதிய நடைமுறை அமல்!

சென்னை : சென்னையில் கட்டட உரிமையாளர்களே, தங்கள் கட்டடத்தை அளந்து (சுய மதிப்பீடு), சொத்துவரி செலுத்தும் புதிய நடைமுறை, வரும், அக்.,1ம் தேதி முதல், அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம், வரி மதிப்பீட்டாளரை, கட்டட உரிமையாளர்கள் எதிர்பார்க்க வேண்டிய அவசியம், இனி இல்லை.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களையும் சேர்த்து, தற்போது 12 லட்சம் பேர், சொத்துவரி செலுத்துகின்றனர். மேலும், ஒரு வாரத்திற்கு, 3,000 பேர் வீதம், புதிய சொத்துவரி விதிப்பிற்காக மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கின்றனர். மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தினால் தான், குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்இணைப்பு என, பல்வேறு அடிப்படை வசதிகளை பெற முடியும். சொத்துவரி ரசீது, முக்கிய ஆவணமாக கருதப்படுவதால், முறையாக வீடு கட்டி இருப்போர், சொத்துவரி விதிக்க, மாநகராட்சியை நாடுவது வழக்கம். ஆனால், இந்த கிராக்கியை அடிப்படையாக வைத்து, சொத்துவரி மதிப்பீடு செய்வதில், வீணாக தாமதிப்பதையும், கட்டட உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறுவதையும், வரி மதிப்பீட்டாளர்கள், வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

இதனால், பல கட்டடங்களுக்கு, உரிய நேரத்தில் சொத்துவரி விதிப்பு செய்ய முடியவில்லை. இதன் மூலம், கட்டட உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மாநகராட்சிக்கு, வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வாக, கட்டட உரிமையாளர்களே, தங்கள் சொத்தை, சுயமதிப்பீடு செய்து வரி செலுத்தும் திட்டத்தை, மேயர், சைதை துரைசாமி அறிவித்தார்.இந்த புதிய நடைமுறையை, வரும் அக்.,1ம் தேதி முதல் அமல்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்காக, மாநகராட்சியிடம் சாலை வெட்டு அனுமதிபெற கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கும்போதே, தங்கள் கட்டடத்தை சுய மதிப்பீடு செய்து, சொத்து வரி செலுத்தலாம்.

இந்த சுய மதிப்பீடு, மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற 'லைசென்ஸ் சர்வேயரால்' செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர், சான்று அளித்திருக்க வேண்டும். இவ்வாறு, சுய மதிப்பீடு செய்து சொத்து வரி செலுத்திய பிறகு, அதற்கான ஆவணங்களை மாநகராட்சியிடம், வரி செலுத்தியோர் ஒப்படைத்தால் போதும்.அதன் பிறகே, மாநகராட்சி வரி மதிப்பீட்டாளர்கள், அந்த கட்டடத்தை ஆய்வு செய்து, மதிப்பீடு சரியாக உள்ளதா என, அறிக்கை தர முடியும். சரியாக இருந்தால், கட்டட உரிமையாளருக்கு, இறுதி ஆணை வழங்கப்படும்.சுய மதிப்பீட்டில் தவறு இருந்தால், திருத்தம் செய்து, கூடுதல் வரி விதிப்பு செய்து, அதை உரிமையாளர் செலுத்திய பின், இறுதி ஆணை வழங்கப்படும்.

இந்த புதிய நடைமுறையின் மூலம், கட்டட உரிமையாளர்கள், வரி மதிப்பீட்டாளருக்கு லஞ்சம் கொடுப்பது தவிர்க்கப்படுவதுடன், மாநகராட்சிக்கும் உரிய நேரத்தில் வருவாய் கிடைக்கும்.இந்த புதிய நடைமுறையை வரும், அக்., 1ம் தேதி முதல் அமல்படுத்தும் வகையில், இம்மாதம் நடைபெற உள்ள மாநகராட்சி கூட்டத்தில், அதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சுய மதிப்பீட்டின் மூலம், இணையதளம் மூலமும், மண்டல அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்கள் மூலமும், சொத்துவரி செலுத்த வசதி செய்யப்படும். இந்த நடைமுறை மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு லட்சம் பேர், மாநகராட்சிக்கு கூடுதலாக சொத்து வரி செலுத்துவர்,'' என்றார்.
 

சொத்து வரி முரண்பாடுகளைக் களைய சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள்

Print PDF

தினமணி     04.09.2014

சொத்து வரி முரண்பாடுகளைக் களைய சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள்

சொத்து வரி விவரங்களில் உள்ள முரண்பாடுகளைக் களைய சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

2014-15-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்தும் காலக்கெடு முடிவடைந்துவிட்டது. எனவே, நிலுவைத் தொகை இருந்தால், அதை மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டும்.

மேலும் ஏற்கெனவே செலுத்தப்பட்ட சொத்து வரி விவரத்தில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதை சம்பந்தப்பட்ட உதவி வருவாய் அலுவலருக்குத் தெரிவிக்கலாம். இதற்காகத் தனியே சிறப்பு முகாம்கள் செப்டம்பர் மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் நடத்தப்படும். முகாம்கள் மண்டல அலுவலகங்களில் நடைபெறும்.

காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் உரிய விவரங்களுடன் உதவி வருவாய் அலுவலரை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு 1913 என்ற இலவச எண்ணிலோ, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

மண்டலம்    உதவி வருவாய்    கோட்டங்கள்    கைப்பேசி            அலுவலர்  

1     எஸ். பாஸ்கரன்    1 முதல் 14    9445190081

2     என். பாலசந்தர்    15 முதல் 21    9445190082

3    என். பாலசந்தர்     22 முதல் 33     9445190083

4    ஆர். மோகன் சாய்    34 முதல் 48    9445190084

5     கே. சுந்தர்ராஜ்     49 முதல் 63     9445190085

6     எஸ். ரவி     64 முதல் 78    9445190086

7    எம்.டி. கிஷோர் குமார்    79 முதல் 93     9445190087

8    கே.பி. பானுசந்திரன்     94 முதல் 108     9445190088

9     பி.பி. மகேந்தர்     109 முதல் 126     9445190089

10    கே. ரவிச்சந்திரன்     127 முதல் 142    9445190090

11     ஜி.டி. கிரிதர்     143 முதல் 155     9445190091

12    அந்தோணி   அற்புதராஜ்     156 முதல் 167     9445190092

13     பி. தமிழ்     170 முதல் 182     9445190093

14     பி. ஜோசப் தங்கராஜ்     168, 169, 183, முதல் 191    9445190094

15    எம்.கே. அப்துல் ரவூப்     192 முதல் 200 9445190095

 


Page 5 of 148