Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

"பல்லாவரம் பாதாள சாக்கடைத் திட்டத்தில் கட்டணத்தைக் குறைக்க இயலாது'

Print PDF

தினமணி               15.02.2014

"பல்லாவரம் பாதாள சாக்கடைத் திட்டத்தில் கட்டணத்தைக் குறைக்க இயலாது'

பல்வேறு கடனுதவிகள் மூலம் நிறைவேற்றப்படும் குடிநீர்,பாதாளச்சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய கட்டமைப்பு மேம்பாடுத் திட்டங்களில் கட்டணத்தைக் குறைக்க இயலாது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும். இந்தப் பணியில் அரசுக்கு சேவை நோக்கம் மட்டுமே உள்ளது.

வணிகநோக்கு துளியும் கிடையாது என்று பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.தன்சிங் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக வேகமாக முன்னேறி வரும் பல்லாவரம் நகராட்சியில்,உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில்,2006ல் தொடங்கப்பட்ட பாதாளச்சாக்கடைத் திட்டம்,ஆட்சி மாற்றம்,கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு தடைகளையும்,சிரமங்களையும் தாண்டி 2012ல் நிறைவேற்றப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

சுமார் ரூ.32 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இத்திட்டம் ரூ.74 கோடியாக உயர்ந்து,6 ஆண்டுகளுக்குப்பின் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு நிதி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கடனுக்கான வட்டி அதிகரித்து,திரும்பச் செலுத்த வேண்டிய தொகையும் உயர்ந்து விட்டது.

கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் பாதாளச் சாக்கடைத்திட்டத்திற்காகப் பெறப்பட்ட கடனுக்கு ஏற்ப,கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு,ஒரு வீட்டிற்கு கழிவுநீர் கட்டணம் ரூ150 விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பல்லாவரம் நகராட்சியில் உள்ள பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மாநகராட்சியைவிட இங்கு கழிவுநீர் கட்டணம் அதிகமாக உள்ளது. கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி வருவாய்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோதுபாதாளச் சாக்கடைத் திட்டம் தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முறையாக விவாதித்து,அனுமதி பெற்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி,பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகளை அதிகரிக்கும்போது வரி மட்டுமல்லாமல்,சொத்தின் மதிப்பு,வீட்டு வாடகை உள்ளிட்டவை உயர்வதும் தவிர்க்க முடியாது. தற்போது நிறைவேற்றப்பட்டுவரும் பல்லாவரம் -பம்மல் கூட்டுக்குடிநீர் திட்டம்,திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களினால் பயன்பெறும் பொதுமக்கள், அவற்றையெல்லாம் அரசு வழங்கும் விலையில்லா நலத்திட்டப் பொருட்கள் போன்று இலவசமாகப் பெற சாத்தியமல்ல என்பதை உணர வேண்டும்.

இவற்றை மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்கள்,படித்த பண்பாளர்கள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தான் பொதுமக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் நிசார் அகமது,ஆணையர் ராமமூர்த்தி ஆகியோர் கூறியதாவது, மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் நகராட்சி நிர்வாகத்திற்கு,அதிக வரி விதித்து துன்புறுத்தும் நோக்கம் இல்லை.

வசதிகளைப் பெறும்போது அதற்கான நியாயமான விலையும் தரவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றனர்.

 

நெல்லை மாநகராட்சியில் நிலுவை வரிபாக்கிகளை வசூல் செய்ய நடவடிக்கை புதிய ஆணையாளர் லட்சுமி பேட்டி

Print PDF

தினத்தந்தி               15.02.2014

நெல்லை மாநகராட்சியில் நிலுவை வரிபாக்கிகளை வசூல் செய்ய நடவடிக்கை புதிய ஆணையாளர் லட்சுமி பேட்டி

“நெல்லை மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்துவரி, குடிநீர் வரி பாக்கிகளை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்“ என புதிய ஆணையாளர் லட்சுமி தெரிவித்தார்.

புதிய ஆணையாளர்

நெல்லை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பு வகித்த மோகன் மறைவுக்கு பிறகு, அந்த பொறுப்புகளை மாநகர பொறியாளர் ஜெய்சேவியர் கவனித்து வந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சிகளின் மண்டல இயக்குனராக பணியாற்றிய லட்சுமி, நெல்லை மாநகராட்சி புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நெல்லை மாநகராட்சி நிதி நிலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், சொத்துவரி மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் வசூல் செய்யவும், சென்னையை போல் நெல்லை மாநகராட்சியையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதாள சாக்கடை திட்டம்

2–ம் கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவு படுத்தப்படும். மக்களுக்கு தேவையான சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு புதிய ஆணையாளர் லட்சுமி கூறினார்.

அவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகும். தூத்துக்குடி மாநகராட்சியில் 2007 முதல் 2009 வரை பணியாற்றினார். அதன்பிறகு திண்டுக்கல் நகரசபை ஆணையாளராக இருந்தார். பின்னர் சென்னை மறைமலை நகர் நகரசபை ஆணையாளராக பணியாற்றினார். அதன்பிறகு செங்கல்பட்டு நகராட்சிகளின் மண்டல இயக்குனராக பதவி வகித்தவர் ஆவார்.

புதிய ஆணையாளராக பதவி ஏற்ற லட்சுமிக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன்              14.02.2014

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆலந்தூர்,  : ஆதம்பாக்கம் குளம் அருகே மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடத்தின் அடித்தளம் இடித்து தள்ளப்பட்டது.

ஆதம்பாக்கம் கிழக்கு கரிகாலன் தெருவில் ஒரு குளம் உள்ளது. இதன் நுழைவாயில் அருகே புதிய ஆக்கிரமிப்பு கட்டிடம் முளைத்தது. அடித்தளம்வரை கட்டப்பட்ட இந்த கட்டிடம் மாநகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து மண்டல செயல் பொறியாளர் மகேசன், உதவி செயற் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர் சேதுபதிராஜா ஆகியோர் நேற்று அந்த இடத்தைப் பார்வையிட்டு ஊழியர்கள் மூலம் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றினர்.

 


Page 9 of 506