Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

வடவள்ளியில் பூங்கா திறப்பு

Print PDF

தினமணி               08.01.2014

வடவள்ளியில் பூங்கா திறப்பு

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வடவள்ளியில் ஸ்ரீ தக்சா பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.30 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட பூங்காவை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சியின் 17-ஆவது வார்டுக்கு உள்பட்ட நவாவூர் பிரிவு அருகே உள்ளது குருசாமி நகர். இங்குள்ள 1 ஏக்கர் ரிசர்வ் சைட்டில் புதிய பூங்கா உருவாக்க ஸ்ரீ தக்சா பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிறுவனம், மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, மாநகராட்சியின் அனுமதியுடன் ரூ.30 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், கான்கிரீட் நடைபாதை, இருக்கைகள், திறந்த வெளி அரங்கு, புல்வெளிகள், மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள், குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டன.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்த பூங்கா திறப்பு விழாவிற்கு, ஸ்ரீ தக்சா பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிர்வாக இயக்குநர் ஆர்.மோகன், மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் சாவித்ரி பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிறுவனத்தின் பொதுமேலாளர் ராம.வேலாயுதம் அறிமுக உரையாற்றினார். மேயர் செ.ம.வேலுசாமி தலைமை வகித்து பூங்காவைத் திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார்.

  மாநகராட்சி ஆணையர் ஜி.லதா, சட்டப்பேரவை உறுப்பினர் மலரவன், மண்டல உதவி ஆணையர் டி.சுப்பிரமணியம், துணை மேயர் லீலாவதி உண்ணி, ஸ்ரீ தக்சா நிறுவன இயக்குநர்கள் ஆர்.ராமநாராயணன், அருள் ஆண்டனி மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தக்சா நிறுவனத் தகவல் தொடர்பு அலுவலர் கணேசன் செய்திருந்தார்.

 

அம்மா உணவகத்தில் "பயோ காஸ்' பயன்பாடு துவக்கம் : தினமும் 60 சதவீதம் காஸ் செலவு சேமிப்பு

Print PDF

தினமலர்                03.01.2014

அம்மா உணவகத்தில் "பயோ காஸ்' பயன்பாடு துவக்கம் : தினமும் 60 சதவீதம் காஸ் செலவு சேமிப்பு

கோவை : சரவணம்பட்டி அம்மா உணவகத்தில், காய்கறி மற்றும் ஓட்டல் கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் "பயோ காஸ்' பயன்பாடு துவங்கியது.கோவை மாநகராட்சி நிர்வாகம், மார்க்கெட், ஓட்டல் கழிவுகளை பயன்படுத்தி, "பயோ காஸ்' உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.சரவணம்பட்டி அம்மா உணவகத்தில், "பயோ காஸ்' திட்டம், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து, மீத்தேன் வாயு உற்பத்திக்காக, இரண்டு டன் மாட்டுச்சாணம், 50 கிலோ யூரியா கொட்டப்பட்டது. அதன்பின், காய்கறி கழிவு, ஓட்டல் கழிவுகள் கொட்டியதால், பாக்டீரியா பெருகி, மீத்தேன் வாயு உற்பத்தியாகி, "பயோ காஸ்' பயன்பாட்டுக்கு தயாரானது.

பயோ காஸ் பயன்பாட்டை, மாநகராட்சி மேயர் வேலுசாமி துவக்கி வைத்தார். "பயோ காஸ்' உற்பத்தி திட்டத்தில், தினமும் இரண்டு டன் கழிவு கொட்டி, 25 கனமீட்டர் காஸ் உற்பத்தி செய்ய முடியும். முதல் கட்டமாக 300 கிலோ கழிவுகள் கொட்டப்பட்டு, தினமும் 21 கிலோ பயோ காஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. மேயர் வேலுசாமி கூறுகையில், ""தமிழகத்தில் முதல் முறையாக, கோவை மாநகராட்சியில், அம்மா உணவகத்தில் பயோ காஸ் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தினமும் 1,500 ரூபாய் வீதம், மாதத்துக்கு 45 ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படும். இங்கு மாதம் 38 காஸ் சிலிண்டர் செலவிடப்படுகிறது. பயோ காஸ் திட்டத்தால் 60 சதவீதம் சமையல் காஸ் செலவு சேமிப்பாகிறது. மாநகராட்சியிலுள்ள மற்ற அம்மா உணவகத்திலும், பயோ காஸ் திட்டம் துவங்கப்படும்,'' என்றார்.

இன்னும் மூன்று திட்டங்கள்! கோவையில் காய்கறி மார்க்கெட், மொத்த காய்கறி, பழ மார்க்கெட், ஓட்டல்களில் தினமும் 40 டன் கழிவு ஏற்படுகிறது. இக்கழிவை கொண்டு மாநகரில் தேவையான இடங்களில் பயோ காஸ் உற்பத்தி திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையர்பாளையம் காமராஜ் நகரில் பயோ காஸ் முறையில், சமுதாய சமையல் கூடம் அமைக்கவும், சொக்கம்புதூர் மயானத்தில், பயோ காஸ் உற்பத்தி செய்து பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையத்தில் புதிதாக அமையும், மார்க்கெட் வளாகத்தில், ஐந்து மெட்ரிக் டன் கொள்ளளவில் "பயோ மீத்தனேஷன்' மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பள்ளிகளில் காய்கறி தோட்டம் : சத்துணவு தேவைக்கு தன்னிறைவு

Print PDF

தினமலர்              02.01.2014

பள்ளிகளில் காய்கறி தோட்டம் : சத்துணவு தேவைக்கு தன்னிறைவு

கோவை : கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப்பள்ளிகளில், காய்கறி தோட்டம் அமைத்து, விளைபொருட்களை சத்துணவு திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக துவங்க ஆயத்த பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் விவசாய வகுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. பள்ளி வளாகத்தில், காய்கறி தோட்டம் அமைத்து, சத்துணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு, வாரத்தில் ஒரு நாள் விவசாய வகுப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில், மாணவர்களால் காய்கறி தோட்டம் பராமரிப்பு, தண்ணீர் ஊற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் விவசாய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் விவசாய வகுப்பு நேரம் ஒதுக்குவது கைவிடப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் பாட ஆசிரியர்கள், விவசாய ஆசிரியர்களாக கூடுதல் பொறுப்பு வகித்தனர். அரசு ஆர்வமில்லாததாலும், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததாலும், அந்த திட்டம் கைவிடப்பட்டது. விவசாய படிப்பு படித்த ஏராளமான இளைஞர்கள், அரசு பள்ளிகளில் மீண்டும் விவசாய வகுப்பு துவங்க வேண்டுமென கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் வாயிலாக, அரசு பள்ளிகளில், காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இந்த திட்டம் பரவலாக்கப்பட்டு, அனைத்து மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியிலுள்ள 16 மேல்நிலைப்பள்ளிகளிலும், காய்கறி தோட்டம் துவங்க, மாநகராட்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், சத்துணவுக்கூடம் அல்லது விளையாட்டு மைதானம் அருகில், இடம் தேர்வு செய்யப்பட்டு, காய்கறி தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பசுமைப்படை திட்டம் மூலம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாத்தல், காய்கறி தோட்டம் அமைத்தல், மண்புழு பராமரித்தல், மழைநீர் சேகரித்தல் போன்ற பயற்சிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து, திறந்தவெளி காய்கறி தோட்டம், மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.

விளைவிக்கப்படும் காய்கறி வகைகள் அந்தந்த பள்ளி சத்துணவு மையங்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை மாநகராட்சி பொதுநிதியில் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் : கடந்த மாமன்ற கூட்டத்தில் பேசிய தி.மு.க., கவுன்சிலர் லட்சுமி இளஞ்செல்வி, ""மாநகராட்சி எல்லைக்குள், தனியார் கட்டடங்களில் சோலார் மின் உற்பத்தி, மழை நீர் சேமிப்புக்கு வலியுறுத்துவது போன்று, வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கவும் திட்டமிட வேண்டும்,'' என்றார். பதிலளித்த மேயர் வேலுசாமி, ""வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம், தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. விருப்பமுள்ள வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்க உதவ வேண்டுமென, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்படும்,'' என்றார்.

 


Page 8 of 135