Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

திண்டுக்கல் நகராட்சியில் ரூ. 98 கோடியில் மழைநீர் சேகரிப்புத் திட்டம்

Print PDF

தினமணி               03.02.2014

திண்டுக்கல் நகராட்சியில் ரூ. 98 கோடியில் மழைநீர் சேகரிப்புத் திட்டம்

திண்டுக்கல் நகராட்சிப் பகுதியில் ரூ. 98.44 கோடியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் குளம் தூர்வாரும் பணிகளுக்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் குறித்து, வியாழக்கிழமை திண்டுக்கல் நகராட்சியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தலைமை வகித்த நகர்மன்றத் தலைவர் வி. மருதராஜ் பேசியது: திண்டுக்கல் நகரில் உள்ள 11 குளங்களையும், 21 கால்வாய்களையும் இணைத்து, நீர் ஆதாரத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 98.44 கோடி என்றார் அவர்.

  கூட்டத்தில் பங்கேற்ற வர்த்தகர் சங்க மற்றும் குடியிருப்போர் சங்கப் பிரதிநிதிகள், திட்டம் அறிவிப்போடு நின்றுவிடாமல் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கருத்துத் தெரிவித்தனர்.

  மேலும், குளத்தில் சேகரிக்கப்படும் தண்ணீரில் கழிவுநீர் கலக்காமல், சுத்தமாக பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

  இத்திட்டத்துக்காக 310 கிலோ மீட்டர் தூரம் புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. மேலும், 117 கிலோ மீட்டர் தூரம் உள்ள பழைய கால்வாய்களை புனரமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளதாக, அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

 

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ. 7 லட்சத்தில் சூரிய ஒளி மின் விளக்கு

Print PDF

தினமணி             31.01.2014

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ. 7 லட்சத்தில் சூரிய ஒளி மின் விளக்கு

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் பொது நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் விளக்குத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் புதன்கிழமை துவங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, நகராட்சியில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். ராஜகோபாலபுரம், நடு கூடலூர் செல்லும் சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலை, கோத்தர்வயல் சாலை, அண்ணாநகர் சாலை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும், காளம்புழா பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடை வளாகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, அதுகுறித்த விளக்கங்களை கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து மங்குழி, புத்தூர்வயல், தேன்வயல் ஆதிவாசி காலனிக்குச் செல்லும் சாலைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இறுதியாக தொரப்பள்ளியில் கூடலூர் நகாராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த, தற்போது குப்பைகளைக் கொட்டும் இடத்தைப் பார்வையிட்டு, திட்டத்தை செயல்படுத்த அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது, கூடலூர் நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம், நகராட்சிப் பொறியாளர் டி.சுப்பிரமணி, பணி மேற்பாற்வையாளர் ஜீ.ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

மாநகராட்சிப் பள்ளிகளில் சோலார் அமைப்பு நிறுவத் திட்டம்

Print PDF

தினமணி                30.01.2014

மாநகராட்சிப் பள்ளிகளில் சோலார் அமைப்பு நிறுவத் திட்டம்

திருச்சி மாநகரிலுள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சோலார் மின் அமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்றத்தின் கல்விக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வியாழக்கிழமை நடைபெறவுள்ள மாமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன.

 தீர்மானப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை விவரம்:

 அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகளை சுத்தப்படுத்தி அவற்றைப் பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கவும், பள்ளி வளாகத்தைப் பாதுகாக்கும் வகையில் தனியார் நிறுவனம் மூலம் காவலர்களை நியமிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 மாநகராட்சிப் பள்ளிகளின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சோலார் மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவவும், பள்ளிகளுக்கு தேவையான தளவாடப் பொருள்கள் மற்றும் நவீன கரும்பலகைகளை வாங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் (61 முதல் 65 வார்டுகள்) பள்ளிகளுக்கு மேயர், ஆணையர், துணை மேயர் மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அவற்றுக்கான அடிப்படைவசதிகள் செய்துத் தருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 பள்ளிகளில் போதுமான அளவுக்கு விளையாட்டு உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் வாங்கவும் முடிவு செய்யப்படுகிறது. பள்ளி வளாகங்களில் உள்ள இடவசதிக்கேற்ப பசுமைத் தளம் அமைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 இந்தப் பணிகளை மாநகரில் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் பல்வேறு வரிகளில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் கல்விநிதியில் இருந்து மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 


Page 5 of 135