Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: ஜெயலலிதா

Print PDF

 தினமணி       27.08.2014

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: ஜெயலலிதா

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த மூன்று ஆண்டுகளில் தஞ்சாவூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.61.50 கோடியில் 454 வகையான பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போன்று, திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.29.15 கோடியில் 119 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது தவிர, திண்டுக்கல் மாநகருக்கென இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் சாகர் அணை குடிநீர்த் திட்டத்தைச் சீரமைக்கவும், திண்டுக்கல் மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் தேவைப்படும் 26 எம்.எல்.டி., குடிநீரைப் பெறவும் ரூ.70.50 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் பல்வேறு வகையான அடிப்படை வசதிகளை ரூ.82.34 கோடியில் ஏற்படுத்தித் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு சீரான, போதுமான அளவு குடிநீர் வழங்கும் வகையில், அந்த மாநகராட்சியில் ரூ.45.69 கோடியில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பாதாளச் சாக்கடைப் பணிகள், குடிநீர்ப் பணிகளால் சேதமடைந்த சாலைகள் ரூ.25 கோடியில் சீரமைக்கப்படும். தஞ்சாவூர் மாநகராட்சியின் அழகையும், பொலிவையும், தூய்மையையும் மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.

பாதசாரிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்ல வசதியாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.1 கோடியில் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும்.

தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள சாலைகள் முழுவதும் சீரான, தரமான ஒளியை வழங்கும் நோக்கில் அங்கு ரூ.75 லட்சத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்படும். திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில் ரூ.4.99 கோடியில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும்.

திண்டுக்கல் மாநகராட்சியில் பணிகள்: திண்டுக்கல் மாநகராட்சிக்கும் ரூ.42.85 கோடிக்கு புதிய பணிகள் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாநகராட்சி எல்லை, தெருக்களில் ரூ.2.50 கோடியில் ஒளிரும் வழிகாட்டிப் பலகைகள், குறியீடுகள் அமைக்கப்படும். மேலும், ரூ.1.35 கோடியில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கென ரூ.5 கோடியில் புதிதாக அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்படும். மாநகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பேருந்து நிறுத்துமிடங்கள், நடைமேடைகள், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தி புதிய வசதிகள் ரூ.5 கோடியில் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.17.50 கோடியில் 65 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படும்.

சாலைகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில், திண்டுக்கல்லில் ரூ.10 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரூ.1.50 கோடியில் 10 இடங்களில் நவீன பொது கழிப்பறைகள் கட்டப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

 

 

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 1527 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி            17.02.2014

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 1527 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாகன நெரிசலைக் குறைக்க ரூ. 500 கோடியில் சீரான சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 300 கோடியில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரயில்வேத் துறையுடன் இணைந்து தேவையான பகுதிகளில் ரயில் பாதைகளின் குறுக்கே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ. 100 கோடியில் சாலையோர நடைபாதை மேம்படுத்தப்படும். ரூ. 300 கோடியில் 12 முக்கியச் சாலைகள் சீரமைக்கப்படும். ரூ. 250 கோடியில் மாநகராட்சியில் இணைந்துள்ள பின்தங்கிய பேருராட்சி, நகராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

31 ஏரிகளை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கப்படும். வாகன நிறுத்தக் கொள்கையை அமல்படுத்த ரூ. 10 கோடி ஒதுக்கப்படும். திடக்கழிவு மேலாண்மைக்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்படும்.

ரூ. 200 கோடியில் பெங்களூருவில் வாகன நெரிசல் உள்ள முக்கிய சதுக்கங்களில் சாலை தடுப்புகள் அமைக்கப்படும். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் மூலம் 8 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளும், கெம்பேகெüடா லேஅவுட்டில் 5 ஆயிரம் வீட்டுமனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

பெங்களூருவில் உள்ள 54 ஏரிகள் வேலி அமைத்து பாதுகாக்கப்படும். 39 ஏரிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கப்படும். ஜெய்கா நிறுவன உதவியுடன் ரூ. 5,800 கோடியில் வெளி வட்டச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜவகர்லால் நேரு தேசிய நகர வளர்ச்சித் திட்டத்தில் தும்கூர் சாலையில் உள்ள கொரகுண்டன பாளையத்தில் ரூ. 125 கோடியில் சுரங்கப் பாதை அமைக்கப்படும். மாநகராட்சியில் புதிதாக இணைந்துள்ள 110 கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்ய தேவையான திட்ட விவர அறிக்கை தயாரிக்கப்படும்.

300 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்தகரிப்பு மையம் அமைக்கவும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். நிதியாண்டில் 180 மி.லிட்டர் குடிநீர் சுத்தகரிப்பு செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும்.

மாநகராட்சியில் 108 இடங்களில் சிறு, குறு குடிநீர் சுத்தகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரூ.10.70 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

Print PDF

தினமணி             03.02.2014

ரூ.10.70 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

ஈரோடு மாநகராட்சி மற்றும் பெருந்துறை தொகுதியில் ரூ.10.70 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சியில், ஈரோடு சென்னிமலை சாலை முதல் பெரியசடையம்பாளையம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.10.09 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி, பெருந்துறை தொகுதியில் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி ஸ்ரீராம் நகர் பகுதியில் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி, பெருந்துறை பேரூராட்சி ஜீவா நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சலை அமைக்கும் பணி, பெரியவிளாமலை ஊராட்சியில் கண்ணவேலம்பாளையம் பகுதியில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் குறுக்கே ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி என மொத்தம் ரூ.10.70 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளை பூமி பூஜை நடத்தி அவர் தொடங்கிவைத்தார்.

அமைச்சர் வெங்கடாசலம் பேசும்போது, ஈரோடு மாநகராட்சியில் ஈரோடு சென்னிமலை சாலையையும், பெரியசடையம்பாளையம் சாலையையும் இணைப்பதற்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்று ரூ.10.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். இப்பாலம் 18 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்றார்.இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆர்.என்.கிட்டுசாமி, ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலர் துரை.சக்திவேல், மண்டலக் குழு தலைவர்கள்  இரா.மனோகரன், பி.கேசவமூர்த்தி, மாவட்ட சிந்தாமணி தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 4 of 160