Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஆவாரம்பாளையம் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: மாநகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு

Print PDF

தினகரன்           05.04.2017

ஆவாரம்பாளையம் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: மாநகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு

 
கோவை: கோவை ஆவாரம்பாளையம் சாலையில் சேதமடைந்த குடிநீர் குழாய் நேற்று மாநகராட்சி ஊழியர்களால் சீரமைக்கப்பட்டது. கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் இருந்து ஆவாரம்பாளையம் பகுதிக்கு வழித்தடம் செல்கிறது. இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பில்லூர் குடிநீர் விநியோகத்திற்காக தரையில் சுமார் 6 அடி ஆழத்தில் சிறிய விட்டமுள்ள குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் புரானிகாலனி பிரிவு அருகே உள்ள தனியார் பள்ளியின் முன்புறம் உள்ள சாலையின் தரைப்பகுதியில் பதிக்கப்பட்டு இருந்த பில்லூர் குடிநீர் பகிர்மானக்குழாய் நேற்று முன்தினம் இரவு உடைந்தது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் போது உடைந்த பகிர்மானக்குழாய் வழியாக தண்ணீர் வழிந்தோடியது. இதனால் அந்த இடமே சேறும், சகதியுமானது. குழாய் உடைப்பு ஏற்பட்ட அந்த பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் பிரிவு பொறியாளர்கள் நேற்று சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை இந்த பணி நடந்தது. நேற்று இரவு பணிகள் முடிக்கப்பட்ட பின்னரே அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
 

அடையாறு ஆறு மறு சீரமைப்புக்கு திட்ட மதிப்பீடு... ரூ.1,666 கோடி! 5,500 குடும்பங்களை மறு குடியமர்வு செய்ய முடிவு

Print PDF

தினமலர்     05.04.2017

அடையாறு ஆறு மறு சீரமைப்புக்கு திட்ட மதிப்பீடு... ரூ.1,666 கோடி! 5,500 குடும்பங்களை மறு குடியமர்வு செய்ய முடிவு

சென்னையின் பிரதான நீர்வழித்தடமான அடையாறு ஆற்றை, 42 கி.மீ., நீளத்திற்கு மறு சீரமைப்பு செய்ய, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1,666 கோடி ரூபாய் செலவில், ஆற்றை நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்கவும், முன்மாதிரியாக மாற்றவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுார் கிராமத்தில் துவங்கி, பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது அடையாறு ஆறு. 227 ஊராட்சிகள், ஒன்பது பேரூராட்சிகள், நான்கு நகராட்சிகள், சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகிய பரப்பளவில், பெய்யும் மழைநீர், இந்த ஆற்றில் வடிகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி, மறுகால் திறக்கப்பட்டால், இந்த ஆறு வழியாக தான், உபரிநீர் கடலுக்கு செல்லும். 2015ல், இந்த ஆற்றால் ஏற்பட்ட வெள்ள பெருக்கை, சென்னை நகரத்தை மூழ்கடித்ததை, மக்கள் மறக்கவில்லை.

தமிழக அரசு, கூவம் நதியை முன்மாதிரியாக மாற்ற, மறு சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதை போல, கடுமையான ஆக்கிரமிப்பு, கழிவுநீர், குப்பையின் பிடியில் சிக்கியுள்ள அடையாறு ஆற்றையும் மறு சீரமைப்பு செய்ய முடிவெடுத்தது.சென்னை நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளை மூலம், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த அறக்கட்டளை மூலம் நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம், 42 கி.மீ., நீளத்திலும், ஆற்றின் நிலை, பிரச்னை, சரிசெய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்மாதிரியாக மாற்ற செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்தும், அதற்கான மதிப்பீடுகள் குறித்தும் விரிவான அறிக்கை அளித்துஉள்ளது.

இதன்படி, அடையாறு ஆறு மறு சீரமைப்பு திட்டத்திற்கான, விரிவான திட்ட அறிக்கை, தமிழக

அரசின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசின் நிர்வாக அனுமதி கிடைத்ததும், அடையாறு ஆறு சீரமைப்பு திட்டம், மூன்று பிரிவுகளாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

முதல் பிரிவில், மணப்பாக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை, ஆற்றின் கரையோரம் மிதிவண்டி பாதை, நடைபாதை, ஐந்து இடங்களில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சுற்றுச்சூழல் பூங்கா, ஆற்றின் இருபக்கமும் தடுப்பு வேலி, நிரூற்றுகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

மேலும், குப்பை அகற்றுதல், சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக்களை துண்டித்தல், ஆற்றின் இருபக்கமும் நில அளவை செய்து, எல்லையை அடையாளப்படுத்துதல் உள்ளிட்ட, 64 திட்டங்கள் செய்யப்படுத்தப்பட உள்ளன.அரசு நிர்வாக அனுமதி கொடுத்த பின், முதற்கட்டமாக எடுக்க உள்ள, 64 திட்ட பணிகளையும், மூன்று ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் நீர்வழித்தடத்தில் முக்கியமாக கருதப்படும் அடையாறு ஆற்றையாவது, கூவம் சீரமைப்பு திட்டத்தை போல, ஆண்டுக்கணக்கில் இழுக்காமல், அதிகாரிகள் விரைந்து முடித்தால் புண்ணியம்.

4,000 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

அடையாறு ஆற்றில், 2015ல் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின், 4,000 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, மறு குடியமர்வு செய்யப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் முதலில் துவங்கப்படும். சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தில் நடைபாதை, மிதிவண்டி பாதை, பூங்கா அமைக்கும். குப்பை, கழிவுகளை அகற்றும் பணிகளையும் மாநகராட்சி செய்யும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் ஆகிய பணிகளை குடிநீர் வாரியம் செய்யும். தற்போது ஆற்றின் கரையில் உள்ள கருவேல மரங்கள் உட்பட, தேவையில்லாத மரங்களை அகற்றிவிட்டு, ஆற்றங்கரையில் வளர வேண்டிய மரங்கள் நடவு செய்யப்படும்.சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.

 

தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்கிறது

Print PDF

தினத்தந்தி                27.03.2017

தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்கிறது


தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்கிறது
தாம்பரம், பல்லாவரம், ஆவடி நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்று தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகங்கள் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளன.
சென்னை, 

தமிழ்நாட்டில், தலைநகர் சென்னை உள்பட மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. இதில், சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெருநகர சென்னை மாநகராட்சி அமைந்துள்ளது.

தற்போது, சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம், பல்லாவரம், ஆவடி ஆகிய 3 நகராட்சிகளையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்று அந்தந்த நகராட்சி நிர்வாகங்கள், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளன. அதாவது, தாம்பரம், பல்லாவரம், ஆவடி ஆகிய நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருந்து, அதே துறையின் முதன்மை செயலாளருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இணையும் பகுதிகள் எவை?

ஆவடி மாநகராட்சியில், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளையும், திருநின்றவூர் நகர பஞ்சாயத்தையும், நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுபாக்கம் உள்பட 11 கிராம பஞ்சாயத்துகளையும் இணைக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி உருவானால், 80 முதல் 100 வார்டுகள் இடம் பெறும். அதன் பரப்பளவும் 148 சதுர கிலோ மீட்டராக விரிவடையும். மக்கள்தொகையும் 6 லட்சத்து 12 ஆயிரம் என்ற அளவில் இருப்பார்கள்.

இதேபோல், பல்லாவரம் மாநகராட்சியில், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளையும், கவுல் பஜார் கிராம பஞ்சாயத்தையும் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தாம்பரம் மாநகராட்சியில், தாம்பரம், செம்பாக்கம் நகராட்சிகளையும், பெருங்களத்தூர், பீர்க்கண் காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம் ஆகிய 4 நகர பஞ்சாயத்துகளையும், மேடவாக் கம், வேங்கைவாசல், முடிச்சூர் உள்பட 7 கிராம பஞ்சாயத்துகளையும் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது, அரசு அதிக நிதியை ஒதுக்கும். பாதாள சாக்கடை, குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் - திடக்கழிவு மேலாண்மை வசதி, போக்குவரத்து வசதி போன்றவை செய்துகொடுக்கப்படும். மாநகராட்சி பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் உருவாக்கப்படும். ஊழியர்கள் அதிகம் நியமிக்கப்படுவார்கள். கட்டுமானங்கள் முறைப்படுத்தப்படும். நிலத்தின் மதிப்பும் அதிகரிக்கும்.

தாம்பரம், பல்லாவரம், ஆவடி நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து வரப்பெற்றுள்ள பரிந்துரை கடிதங்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.
Last Updated on Monday, 27 March 2017 09:14
 


Page 3 of 841