Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கடந்த மூன்றாண்டுகளில் மாநகராட்சி நிர்வாகத்தில் நடந்தது என்ன? கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?

Print PDF

தினமலர்        24.10.2014

கடந்த மூன்றாண்டுகளில் மாநகராட்சி நிர்வாகத்தில் நடந்தது என்ன? கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?

சென்னை : மேயர் சைதை துரைசாமி தலைமையில், சென்னை மாநகராட்சி புதிய நிர்வாகம் பொறுப்பேற்று, நாளையுடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த மூன்று ஆண்டுகளில் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், கட்டமைப்பு திட்டங்களில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

நடந்தவை என்ன?
* ஏழை பெண்களுக்கு, சென்னை மாநகராட்சி மூலம் திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் லஞ்சத்தை ஒழிக்க, இணையதளத்தில், விண்ணப்பம் பெறும் முறை அமல்படுத்தப்பட்டது.

* குப்பை அகற்றும் பணியை, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* ஒப்பந்தங்களில் நடை பெற்ற முறைகேடுகளை தவிர்க்க, அனைத்தும் இணையதள முறைக்கு மாற்றப்பட்டன.

* மாநகராட்சி கழிப்பறைகளில் நடந்த வசூல் வேட்டையை தடுக்க, விஜிலென்ஸ் மூலம் நடவடிக்கை எடுத்தது.

* கட்டட வரைபட அனுமதியில், பசுமை வழியை அறிமுகம் செய்தது. அதிகாரிகளை நேரில் சந்திக்காமல், கட்டட வரைபட அனுமதிக்கு முழுவதும் இணையதளம் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது.

* மாநகராட்சிக்கு வருவாயை அதிகரிக்கும் வகையில், சாலை வெட்டுக்கு அனுமதி கோரும்போதே, சொத்து வரி விதிக்கும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்தது.
* வணிக வளாகங்கள், மாநகராட்சி சொத்துகள் அனைத்தையும் இணையதளம் மூலம் ஆவணப் படுத்தும் பணிகளை மேற்கொள்வது.

* கேபிள் 'டிவி', தட வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தது.

* தரமான சாலை பணிகளுக்கு மட்டுமே பணம் பட்டுவாடா செய்யும் வகையில், சாலையின் தரத்தை பரிசோதிப்பது.

* அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், தணிக்கை தடையை நீக்கிய பிறகே பணி ஓய்வுபெற அனுமதிப்பது.

இதுபோன்ற நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது, கடந்த மூன்று ஆண்டுகால மாநகராட்சி நிர்வாகத்தின் சாதனைகளாக உள்ளன.

கட்டமைப்பு திட்டங்கள் கதி என்ன?
* கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட, ஒரு மேம்பால திட்டங்களுக்கு கூட, பணிகள் துவங்கப்படவில்லை. ஆய்வு, பரிசோதனை, விரிவான அறிக்கை என்ற நிலையிலேயே திட்டங்கள் உள்ளன.

* சென்னையில் அதிகரித்து வரும் நெரிசலை தீர்க்க, வாகன நிறுத்துமிடங்கள் மிக முக்கியமானவை. மாநகராட்சி சார்பில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் ஓரிடத்தில் கூட துவங்கப்படவில்லை.

* குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, குப்பை மாற்று தொழிற்சாலை அமைக்கும் திட்டங்கள், இன்னும் ஒப்பந்த நிலைக்கே வரவில்லை.

* தி.நகர்., பாரிமுனை ஆகிய இடங்களில் நெரிசலை தீர்க்கும் ஆகாய நடைபாதை அமைக்கும் திட்டங்கள், தற்போது தான் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு வந்துள்ளன.
* கடற்கரை சாலை நெரிசலை குறைக்க, 'லுாப்' சாலை மேம்படுத்தும் திட்டம், ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டும், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

* மோட்டார் வாகனமில்லா போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட, நடைபாதை அமைக்கும் பணிகள், மிதிவண்டி பாதை அமைக்கும் பணிகள், மிதிவண்டி பகிர்ந்து பயன்படுத்தும் திட்டம் ஆகியவை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம்.

* 5,000 புதிய கழிப்பறைகள் கட்டப்படும் என, அறிவிக்கப்பட்டு, தற்போது தான் முதல்கட்டமாக, 348 இடங்களில் 'நம்ம டாய்லெட்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

* 900 இடங்களில் பேருந்து நிழற்குடைகள் இல்லை. தற்போது அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடைகளும் பயணி களுக்கு வசதியானதாக இல்லை.

* சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் துரிதமாக நடக்கவில்லை.

* நடைபாதை வளாகம் அமைக்கும் திட்டம், ஒப்பந்த நிலைக்கு வந்து, நிதி ஒதுக்கீட்டிற்காக காத்திருக்கிறது.

இப்படி பல கட்டமைப்பு திட்டங்களில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலை காணப்படுகிறது.

மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த மூன்று ஆண்டுகால செயல்பாடு குறித்து பொதுநலச்சங்கத்தினர் கூறியதாவது:

* சாலைகள் அமைக்கப் பட்டன. ஆனால், லேசான மழைக்கே அவை குண்டும், குழியுமாக மாறிவிட்டன.

* எல்.இ.டி., தெருவிளக்குகள் அமைப்பது வரவேற்கத்தக்கது.

* லஞ்சத்தை தவிர்க்கும் இணையதள சேவை கள் உபயோகமானவை.

* ஆனால், நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப திடக்கழிவு மேலாண்மை, வாகன போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு பொதுநலச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

2 ஆண்டுகள் ஆகும் : இதுகுறித்து, மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: 'சுத்தமான சென்னை; கை சுத்தமான நிர்வாகம்' என்ற கொள்கையை முன் வைத்தோம். முந்தைய நிர்வாகங்களில் நடந்த முறைகேடுகளை களைந்து, கை சுத்தமான நிர்வாகம் நடக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.அதிகாரிகளும், கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு அளித்ததால், லஞ்சம் இல்லாத மாநகராட்சி நடக்கும் அளவிற்கு, நிர்வாகம் சீரமைக்கப்பட்டு உள்ளது.சுத்தமான சென்னை, அடிப்படை கட்டமைப்புகள் நிறைந்த சென்னையாக மாற்ற அனைத்து துறைகளிலும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டு களில் அவை நடைமுறைக்கு வரும்.
 

குப்பைகள் அகற்றும் பணி: மேயர் ஆய்வு

Print PDF

 தினமணி        24.10.2014

குப்பைகள் அகற்றும் பணி: மேயர் ஆய்வு

மதுரை மாநகரப் பகுதியில் தெற்கு ஆவணி மூல வீதி, வெங்கலக் கடைத் தெரு, விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி ஆகிய பகுதிகளில் தீபாவளியன்று சேர்ந்த குப்பைகள் அகற்றும் பணியை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 மேலும், வைகை ஆற்றில் அதிகளவில் மழைநீர் செல்வதால், தரைப்பாலம் மற்றும் கல்பாலத்தில் உள்ள குழாய்களில் அடைப்புகள் ஏற்படாதவாறு குப்பைகள் அகற்றப்படும் பணியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

 இப்பணி குறித்து மேயர் ராஜன்செல்லப்பா கூறியது: மதுரை மாநகராட்சிப் பகுதியில் தீபாவளியன்று அதிகளவு குப்பை சேர்ந்திருப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் தீவிர துப்புரவுப் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

 காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்ற இப் பணியில், மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் தலா 100 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி வாகனங்கள் மூலம் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சி அப்புறப்படுத்தப்பட்டது என்றார்.

 அதைத் தொடர்ந்து கோ.புதூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் ராஜன்செல்லப்பா, அங்கு வழங்கப்படும் உணவு வகைகளின் அளவு சரியானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

 உதவி ஆணையர்கள் தேவதாஸ், செல்லப்பா, பழனிச்சாமி, நகர் நல அலுவலர் யசோதா மணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

 

மழைப் பாதிப்பு: அமைச்சர் ஆய்வு

Print PDF

 தினமணி        24.10.2014

மழைப் பாதிப்பு: அமைச்சர் ஆய்வு

சாந்தோம் சாலையில் கழிவுநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி:-

காமராஜர் சாலை, ஜி.பி. சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மேயர் சைதை துரைசாமி, அதிகாரிகள் பார்வையிட்டனர்.

மேற்கண்ட இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோல்டுமிக்ஸ் எனப்படும் கலவையைக் கொண்டு சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு டன் கோல்டு மிக்ஸ் கலவையின் விலை ரூ.17,500 ஆகும். மாநகராட்சி சார்பில் சுமார் 500 டன் கலவைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், சென்னை குடிநீர் வழங்கல் வாரிய இயக்குநர் சந்திரமோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சாந்தோம் சாலையில் கழிவுநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

 


Page 10 of 841