Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தெருவிளக்குகள் எரியவில்லையா? புகார் தெரிவிக்கலாம்

Print PDF

தினமணி       13.11.2014

தெருவிளக்குகள் எரியவில்லையா? புகார் தெரிவிக்கலாம்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை என்றால், குறிப்பிட்ட மொபைல் எண்களில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையாளர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வார்டு பகுதிகளில் எரியாத தெருவிளக்குகள் பற்றிய புகார்கள், மைய அலுவலகத்திலுள்ள தகவல் மையத்திற்கு அதிக அளவில் வருகின்றன. இந்த புகார்களை சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தெரிவித்து, சரிசெய்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டு வந்தது.இதை தவிர்க்கவும், எரியாத தெருவிளக்குகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரிய வைப்பதற்கும் மண்டல வாரியாக புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்டலம்-1 (மேற்கு) பகுதியிலுள்ள 1-வது வார்டு முதல் 23-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82691 என்ற எண்ணிலும், மண்டலம்-2 (வடக்கு) பகுதியிலுள்ள 24-வது வார்டு முதல் 49-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82692 என்ற எண்ணிலும், மண்டலம்-3 (கிழக்கு) 50வது வார்டு முதல் 74-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82693, மண்டலம்-4 (தெற்கு) பகுதியிலுள்ள 75-வது வார்டு முதல் 100-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82694 ஆகிய கைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

இந்த கைபேசி எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பழுதுகள் சரிசெய்யப்படும், எரியாத தெருவிளக்குகள் உடனடியாக எரியவைக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

 

மழை நிவாரணம் ரூ. 19.62 கோடி தேவை! அரசுக்கு மாநகராட்சி அறிக்கை

Print PDF

தினமலர்        03.11.2014

மழை நிவாரணம் ரூ. 19.62 கோடி தேவை! அரசுக்கு மாநகராட்சி அறிக்கை

கோவை : கோவை மாநகரப்பகுதியில், மழை காரணமாக சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம், 19.62 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது.

கோவை மாநகரப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின், இந்தாண்டு கன மழை பெய்துள்ளது. இதனால், கோவையில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு தவிர, பெரும்பாலான நெடுஞ்சாலைத்துறை ரோடுகளும், மாநகராட்சி ரோடுகளும் உருக்குலைந்தன.மாநகரத்தில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பகுதிகளில், புதிதாக போடப்பட்ட ரோடுகளில், மண் இறுகி ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதாலும், மழை வெள்ளம் சென்றதாலும் தார் ரோடுகள் பெயர்ந்துள்ளன. பாதாள சாக்கடை பணி முடிந்து, ரோடு அமைக்கப்படாத பகுதிகளில், சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயிக்கற்ற நிலையில் ரோடுகள் உள்ளன.

தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. முக்கிய இடங்களில் மழைநீர் வடிகால் வசதியும், மழைநீர் சேகரிப்பு திட்டமும் அமைக்கப்படாததால், பல நாட்களாக தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.மழைக் காலம் முடிந்ததும், ரோடு, சாக்கடை புதுப்பிக்கும் பணிகளும், சாக்கடை துார்வாரும் பணியும், ரோடுகளில், 'பேட்ச் ஒர்க்' பணியும் துவங்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. மழையால் பாதித்த ரோடுகளை புதுப்பிக்க, மழை நிவாரண நிதி பெறுவதற்காக, மாநகராட்சி நிர்வாகம் பட்டியல் தயாரித்துள்ளது.

மாநகரத்தில், பெரும்பாலான ரோடுகள் சீர்குலைந்துள்ளதால், உடனடி நிவாரணமாக, 5.28 கோடி ரூபாய், நிரந்தர நிவாரணத்திற்காக 14.34 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.மழை நிவாரண பணிகளுக்காக மாநில அரசு முதற்கட்டமாக 60 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், கோவை மாநகராட்சி தயாரித்துள்ள 19.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எவ்வளவு நிதி கிடைக்கும் என்பது, பாதிப்பின் தன்மை, முக்கியத்துவம் மற்றும் முதல்வரின் முடிவை பொருத்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சி பொதுநிதி, பல்வேறு திட்டங்கள் மூலமும் ரோடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மழை நிவாரணத்திற்காக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிவாரண நிதி பகிர்ந்து வழங்கும் போது, கோவைக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியாது' என்றனர்.

 

குப்பையைத் தரம் பிரித்தளிக்க தொடர் விழிப்புணர்வு பிரசாரம்: மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

தினமணி        03.11.2014

குப்பையைத் தரம் பிரித்தளிக்க தொடர் விழிப்புணர்வு பிரசாரம்: மாநகராட்சி ஏற்பாடு

சென்னையில் குப்பையைத் தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக, தொடர் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 4,900 கிலோ குப்பைகள் சேருகின்றன. இந்தக் குப்பைகள் அனைத்தும் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்படுகின்றன.

வளர்ந்த நாடுகளில் குப்பைகளைத் தரம் பிரித்து, மறு சுழற்சி செய்து பயன்படுத்துகிறார்கள். அதனால் குப்பையின் அளவு குறைகிறது.

ஆனால், சென்னையில் சேரும் அனைத்துக் குப்பைகளும் அப்படியே கொட்டப்படுகின்றன. மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனித்தனியாகப் பிரிக்கப்படுவதில்லை.

அவ்வாறு பிரிக்கப்பட்டால், மக்கும் குப்பைகள் உரம், இயற்கை எரிவாயு தயாரிக்கவும், மக்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும் பயன்படுத்தலாம்.

சென்னையில் குப்பையைத் தரம் பிரித்து வழங்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல், திட்டங்கள் தோல்வியடைகின்றன.

இதுகுறித்து பெரிய அளவிலான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

சென்னையில் குப்பையைத் தரம் பிரித்து வழங்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளன.

ஆனாலும், சில இடங்களில் சிறிய அளவில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும் குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது.

இதேபோல, அனைத்து வார்டுகளிலும் குப்பையில் இருந்து எரிவாயு தயாரித்து, அம்மா உணவகங்களுக்குப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை பெரிய அளவில் செய்ய வேண்டுமென்றால் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பொதுமக்களே பிரித்துப் போடவேண்டும். அவ்வாறு போடும் போது, குப்பையில் இருந்து கணிசமான வருவாய் மாநகராட்சிக்கு கிடைக்கும்.

இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிய அளவிலான விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும். குறைந்தது 6 மாதங்களுக்காவது பிரசாரம் செய்ய வேண்டும்.

மக்கள் திரும்பும் இடத்தில் எல்லாம் பிரசாரம் தென்படவேண்டும். இதற்கு அதிக அளவிலான நிதி தேவை.

இதற்கான செலவு, நிதி ஆதாரம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் பிரசாரம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் 2,600 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டது. ஆனால், அதுவே 2014-ஆம் ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

 


Page 8 of 841