Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

விளாப்பாக்கம், தக்கோலம் பேரூராட்சிகளில் புகையில்லா போகி குறித்த ஆலோசனைக் கூட்டம்

Print PDF
தினமணி       09.01.2015

விளாப்பாக்கம், தக்கோலம் பேரூராட்சிகளில் புகையில்லா போகி குறித்த ஆலோசனைக் கூட்டம்

புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் என்.செல்வி ராமசேகர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் யூ.முஹம்மது ரிஜ்வான் முன்னிலை வகித்தார்.

இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், மகாலட்சுமி மகளிர் கல்லூரி, லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை, ஸ்ரீ மாதா புவனேஸ்வரி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், மகளிர் சுயஉதவிக் குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

போகி பண்டிகையை புகையில்லாமல் கொண்டாடுவது குறித்தும், புகையால் ஏற்படும் தீமைகள் பற்றியும் கலை நிகழ்ச்சிகள், மனிதச் சங்கிலி, போட்டிகள் நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பேரூராட்சிக்கு உள்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளிடமிருந்து உபயோகமற்ற பொருள்களை சேகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தக்கோலத்தில்...

போகியை புகையில்லா திருநாளாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தக்கோலம் பேரூராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு செயல் அலுவலர் ரா.சுமா தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சித் தலைவர் எஸ்.நாகராஜன், மன்ற உறுப்பினர்கள் ஷே.முகமது காசிம், ந.சண்முகம், தே.செண்பகவள்ளி, மு.நிர்மலா, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செ.முருகேசன், பேருராட்சி சுகாதார ஆய்வாளர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பொங்கல் நாளை புகையில்லாமல் கொண்டாடுவது குறித்து திட்டமிடப்பட்டது.
 

பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: மேயர் சாந்தகுமாரி

Print PDF

தினமணி      31.12.2014

பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை:  மேயர் சாந்தகுமாரி

பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சாந்தகுமாரி தெரிவித்தார்.

 பெங்களூருவில் மாநகராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மேயர் சாந்தகுமாரி சந்தித்தார். அப்போது அவரிடம் ஊழியர்கள் சங்கத் தலைவர் தயானந்த் கூறியது: பெங்களூரு மாநகராட்சியைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் வேறு துறைகளில் இருந்து பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றிவரும் அதிகாரிகளை அந்தந்த துறைக்கே திரும்பப் பணியிடமாற்றம் செய்ய வேண்டும். வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யப் போவதாக மாநகராட்சி ஆணையர் லட்சுமிநாராயணா ஏற்கெனவே உறுதி அளித்திருந்தார்.

 ஆனால், அதை ஆணையர் செயல்படுத்தவில்லை. மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள திட்டப் பிரிவு அதிகாரிகளை சிலர் தாக்கினர். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் தர்னா போராட்டம் தொடரும் என்றார்.

 மேயர் சாந்தகுமாரி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

 அதில் தோல்வி ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனது அறைக்கு வரவழைத்துக் கூறியது: மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பிரச்னைகளை தெரிவித்துள்ளனர்.

 அவர்களது கோரிக்கையை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் ஆலோசனை செய்து, பரிவோடு பரிசீலிக்கப்படும். விரைவில் அவர்களின் கோரிக்கை அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும்.

 எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதை ஏற்று, ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

 

தென்னிந்தியாவில் மாசில்லா மாநகரமாக மதுரை தேர்வு: மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தகவல்

Print PDF
தினமணி        31.12.2014

தென்னிந்தியாவில் மாசில்லா மாநகரமாக மதுரை தேர்வு: மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தகவல்

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவில் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் 4,909 ஏழைப் பெண்களுக்கு தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து மேயர் மேலும் பேசியது:

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து நலத்திட்டங்களும் மதுரை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பினர். இன்று பயனடையும் 5 ஆயிரம் பயனாளிகளும் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதங்களை மாலையில் அனுப்பி வைக்கவுள்ளனர். இவ்வளவு 5ஆயிரம் பேர் ஒரே நாளில் நன்றிக் கடிதம் அனுப்பி வைப்பது இதுவே முதல்முறையாகும்.   .

 இம் மாநகராட்சியில், அம்மா திட்டம் என்கிற அழகிய மாநகரத் திட்டத்தை  செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் மாநகரில் எங்கும் குப்பைகள் தேங்காமலும், சுகாதாரக்கேடு ஏற்படாத வகையிலும் சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ) தென்னிந்தியாவில் நடத்திய ஆய்வில் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகரைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது. இது ஜெயலிலதாவின் சீரிய திட்டமான அழகிய மாநகர திட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். தொடர்ந்து மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கு கூடுதல கவனம் செலுத்தப்படும் என்றார்.

 விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி பகுதியில் 4,004 பயனாளிகளுக்கும், புறநகர் பகுதியில் 905 பயனாளிகளுக்கும், ஆக மொத்தமாக 4,909 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்கம், திருமண நிதியுதவிக்கான காசோலைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

 மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மராஜ், எம்எல்ஏக்கள் தமிழரசன், ஏகே போஸ், முத்துராமலிங்கம், சுந்தர்ராஜன், துணை மேயர் கு.திரவியம், மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, நிலைக்குழுத் தலைவர்கள் கண்ணகி பாஸ்கரன், சுகந்தி அசோக், எஸ்டி ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநகராட்சி நகர்நல அலுவலர் யசோதாமணி வரவேற்றுப் பேசினார். மாவட்ட சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.
 


Page 6 of 841