Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

படகு இல்ல ஏரியின் முழு சொந்தத்தையும் நகராட்சிக்கு வழங்கத் தீர்மானம்

Print PDF

தினமணி 23.07.2009

படகு இல்ல ஏரியின் முழு சொந்தத்தையும் நகராட்சிக்கு வழங்கத் தீர்மானம்

உதகை,ஜூலை 22: உதகையில் படகு இல்லம் அமைந்துள்ள ஏரியின் முழு சொந்தத்தையும் உதகை நகராட்சிக்கே வழங்க வேண்டுமென உதகை நகர்மன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல, உதகை நகர எல்லைக்குள் நுழையும் வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உதகை நகர்மன்றத்தின் மாதாந்திர கூட்டம் மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் முக்கிய பிரச்சினையாக உதகையிலுள்ள ஏரியை நகர்மன்றத்தின் பொறுப்பில் எடுத்துக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

உதகையில் படகு இல்லம் அமைந்துள்ள ஏரி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு முன்னதாக மீன்வளத் துறையின் கட்டுபாட்டில் இருந்தது. அதன்பின்னர் ஏரியின் பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறைக்கு வழங்கப்பட்டன. சுற்றுலாத்துறை படகு போக்குவரத்தை கவனிக்கவும், மீன் வளத்துறை மீன் வளர்ச்சி தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், 85 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியை நகராட்சியின் சார்பில் துப்புரவு பணியாளர்கள் மூலம் பராமரிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.18 லட்சமும், ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சோடியம் ஆவி விளக்குகளால் வருடத்திற்கு ரூ.1.21 லட்சமும், ஏரியை சுற்றியுள்ள சாலை பராமரிப்புக்கு ஆண்டுக்கு ரூ.7.4 லட்சமும் நகராட்சி செலுத்தி வருவதால், நகராட்சி விதிகளின்படி மீன் வளர்ப்பு நீங்கலாக ஏரியின் உரிமம் மற்றும் கட்டுப்பாட்டை நகராட்சி நிர்வாகமே எடுத்துக் கொள்ளலாமென தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

அதேபோல, சுற்றுலா நகரான உதகைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதால் நகராட்சியில் அடிப்படை பணிகளோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளையும் செய்து தர வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்கப்பட்டு வந்ததால் உதகை நகராட்சிக்கு கிடைத்து வந்த பங்கீட்டு வருவாய் தற்போது இச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு விட்டதால் வருவாயே இல்லாமல் போய்விட்டது.

அத்துடன் முத்திரைத்தாள் மூலம் கிடைத்து வந்த வருவாயும் ரூ.90 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக குறைந்துவிட்டது. எனவே, நகராட்சியின் வருவாயை பெருக்க உதகை நகருக்குள் வந்து செல்லும் வெளியூர் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூல் செய்ய அனுமதியளிக்க வேண்டுமெனவும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், உதகை நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், தெருவிளக்குகள் எரியாததைக்குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன், பார்சன்ஸ்வேலி பகுதியில் மரங்கள் விழுந்ததால் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தெருவிளக்கு களை பராமரிக்கும் பணி அடுத்த மாதத்திலிருந்து தனியார் வசம் ஒப்படைக்கப்படுமென்பதால் இனிமேல் பிரச்சினை ஏற்படாது எனவும் உறுதியளித்தார்.

உதகை மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்படும் நெருக்கடி மற்றும் கோடப்பமந்து கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் அங்கு தேங்கும் மழை நீர் ஆகியவற்றைக் குறித்து திமுக உறுப்பினர் முஸ்தபா பேசியதற்கு பதிலளித்த தலைவர் ராஜேந்திரன், உதகை நகர்மன்றத்தின் சார்பில் பிங்கர்போஸ்டு பகுதியில் விரைவில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கேயே பேருந்து நிலைய டெப்போவும் மாற்றப்படுமென்பதால் விரைவில் இப்பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமென்றார்.

திமுக உறுப்பினர் இளங்கோ பேசுகையில் வீடு கட்டுவதாக அனுமதி வாங்கி, அவற்றை காட்டேஜ்களாக நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்களுக்கு வணிக ரீதியிலான வரி விதிக்க வேண்டுமென்றார்.

இதே கோரிக்கையை திமுக உறுப்பினர் ஜார்ஜ் மற்றும் தேமுதிக உறுப்பினர் தம்பி இஸ்மாயில் ஆகியோரும் வலியுறுத்தினர். அதற்கு காட்டேஜ்கள் குறித்த விபரங்களை நகராட்சி சுகாதார பிரிவினர் சேகரித்து வருவதால் இப்பணி முடிந்ததும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணையர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

அதேபோல, நகரப்பகுதிகளில் அமைக்கப்பட்டுவரும் செல்போன் டவர்கள் குறித்த பிரச்னையும் கூட்டத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. டவர் அமைப்பதற்கான அனுமதியை சென்னையிலேயே பெற்று விடுவதால் நகராட்சிக்கு எந்த வருவாயும் இல்லை எனவும், இதில் அசம்பாவிதம் ஏதாவது ஏற்பட்டால் நகராட்சியே பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளதெனவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீதும் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் சட்ட சிக்கலும் வருவதாக புகார் கூறினர்.

மேலும், உதகையிலுள்ள ஆடு,மாடு வதை சாலைக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து இறைச்சி வியாபாரிகளுடன் கலந்து பேசியே முடிவு எடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் விவாதத்திற்கு வந்திருந்ததால் கூட்ட தொடக்கத்திலிருந்து முடியும் வரை அடிக்கடி அமளி ஏற்பட்டது.