Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உலகில் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்படுவோர் 150 கோடி பேர்

Print PDF

தினமணி 18.03.2010

உலகில் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்படுவோர் 150 கோடி பேர்

மதுரை, மார்ச் 17: உலகில் சுமார் 150 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்; எனவே குடிநீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் ஏ.தனுஷ்.

உலக நீர் தின விழா மார்ச் 22}ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, மாற்று மேலாண்மைக் குழு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், அனைத்து மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம், கல்வித் துறை இணைந்து நடத்திய மனிதச் சங்கிலி விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:

ஐக்கிய நாடுகள் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22}ம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குடிநீர் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதும், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

உலகில் 150 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஆண்டுக்கு 40 லட்சம் பேர் நீரினால் பரவும் வியாதிகளால் மரணமடைகின்றனர். உலகில் மக்கள் தொகை இரண்டாக அதிகரிக்கும் போது தண்ணீரின் தேவை 6 மடங்காக உயர்கிறது.

ஜல்மானி திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு தமிழக அரசு முனைப்புடன் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறது. குடிநீரை சேமிப்பதும், சிக்கனமாகச் செலவழிப்பதும் அனைவரின் தலையாய கடமையாகும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.அசோக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், தண்ணீரை சிக்கனமாகச் செலவழிப்பதன் அவசியத்தையும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர் ஆ.மாரியப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ச.செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

விழிப்புணர்வு மனித சங்கிலி: குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், கல்வித் துறையினர், மாணவ, மாணவிகள் ராஜா முத்தையா மன்றம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனிதச் சங்கிலியாக நின்று தண்ணீரை சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

உலக நீர் தின விழா, தும்பைப்பட்டி அல்லது கருங்காலக்குடியில் மார்ச் 22}ம் தேதி நடத்தப்பட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Last Updated on Thursday, 18 March 2010 11:17