Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான மேலும் 27 நகரங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

Print PDF

தி இந்து             20.09.2016

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான மேலும் 27 நகரங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான 3-வது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி உள்ளிட்ட 27 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலை வெளியிட்ட மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 27 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான போட்டியில் 63 நகரங்கள் இடம் பிடித்திருந்தன. எனினும் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் அடிப்படையில் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டது” என்றார்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 5 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இதுபோல தமிழ்நாடு, கர்நாடகாவின் தலா 4, உத்தரப் பிரதேசத்தின் 3, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் 2, ஆந்திரா, ஒடிசா, குஜராத், நாகாலாந்து, சிக்கிம் தலா 1 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

ஆக்ரா, அஜ்மிர், அமிர்தசரஸ், அவுரங்காபாத், குவாலியர், ஹூப்ளி-தார்வாட், ஜலந்தர், கல்யான்-டோம்பிவலி, கான்பூர், கோஹிமா, கோடா, மதுரை, மங்களூரு, நாக்பூர், நம்சி, நாசிக், ரூர்கேலா, சேலம், ஷிமோகா, தானே, தஞ்சாவூர், திருப்பதி, துமகூரு, உஜ்ஜயினி, வடோதரா, வாரணாசி, வேலூர் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 3-வது பட்டியலில் இடம்பிடித்துள்ள நகரங்கள் ஆகும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன்படி, நாடு முழுவதும் 100 நகரங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நகரங்களாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 5 ஆண்டுகளில் மத்திய அரசு தலா ரூ.500 கோடியை வழங்கும். இதே அளவு தொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் ஒதுக்கும். மீதம் உள்ள தொகை கடன் மற்றும் இதர வகையில் திரட்டப்படும்.

இதுவரை 3 கட்டமாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் மொத்தம் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 60 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்த மொத்தம் ரூ.1.44 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நகரங்கள் இந்தப் பட்டியலில் இதுவரை இடம்பெறவில்லை.