Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரிப்பன் மாளிகையில் பூத்து குலுங்கும் 28 வகையான மரங்கள் நட திட்டம்

Print PDF

தினமலர்       05.01.2015

ரிப்பன் மாளிகையில் பூத்து குலுங்கும் 28 வகையான மரங்கள் நட திட்டம்

 

சென்னை : ரிப்பன் மாளிகை வளாகத்தில், பூத்து குலுங்கும் 28 வகையான மரங்களை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகம் 11.4 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது ரிப்பன் மாளிகை, இணைப்பு கட்டடங்கள், நான்கு தளங்கள் கொண்ட புதிய இணைப்பு கட்டடம், விக்டோரியா மாளிகை ஆகியவை இந்த வளாகத்தில் உள்ளன.அதில், புதிய கட்டடம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா மாளிகை ஆகிய மூன்றை தவிர, மற்ற அனைத்து இணை கட்டடங்களையும் இடித்து தள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த இடங்களை பசுமையாக வும், பொதுமக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வில்வம், புன்னை, வேம்பு, பவளமல்லி, நாகலிங்கம், வென்நாகு, வெள்ளைகுடம்பா, நிலத்திருவட்டி, மருதமரம், புங்கமரம், ஆலமரம், பளசுமரம், இளவமரம், அரசமரம், மூங்கில் மரம், செண்பகம், சந்தனம், தென்னை, வாழை, நெல்லி, பச்சிளை, அசோகம், இளந்தை, நாவல், மாமரம், கல்யாண முருங்கை உட்பட 28 வகையான மரங்கள், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடவு செய்ய வடிவமைப்பு தரப்பட்டு உள்ளது.இந்த மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மாதங்களில் பூத்துகுலுங்கும். இந்த அனைத்து வகை மரங்களையும் வளாகத்தில் நடுவதன் மூலம், ஆண்டு முழுவதும் பூத்து குலுங்கும் இயற்கை எழிலுடன், ரிப்பன் மாளிகை வளாகம் பசுமையாக இருக்கும். தற்போது வளாகத்தில் 156 மரங்கள் உள்ளன. அவை அப்படியே பராமரிக்கப்படும். புதிதாக எவ்வளவு மரங்களை நடுவது என இறுதி செய்யவில்லை.

விக்டோரியா மாளிகையை ஒட்டி 2,000 கார்களை நிறுத்தும், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும். பொதுமக்களுக்கான உணவகம், பூங்கா தனியேஏற்படுத்தப்படும்.மதிப்பீடுகள் விரைவில் தயார் செய்யப்பட உள்ளன. மெட்ரோ ரயில் நிர்வாகம் ரிப்பன் மாளிகையின் முன்புறமும், விக்டோரியா மாளிகை பகுதியிலும் பணி மேற்கொண்டுள்ளது.வரும் ஜூலையில், இந்த இடங்களில் பணி முடித்து, மாநகராட்சி நிலத்தை திரும்ப தருவதாக அந்நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. நிலம் கைக்கு வந்ததும், உலகத்தர பூங்கா அமைக்கும் பணிகளை துவங்கும் வண்ணம், ஒப்பந்தம் கோரி, தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.